அரைஞாண்

அரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். ஓரிரு இந்திய ரூபாய் மதிப்புள்ள எளிய கயிறு முதல் விலை மதிப்புடைய வெள்ளி, பொன் கயிறுகள் வரை அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இக்கயிற்றை அணிவர். கயிறுகள் கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலான தமிழ் இந்துக்கள், கிறித்தவ ஆண்கள், குழந்தைகள் இதை அணிந்திருப்பதைக் காணலாம். சிற்றூர்களில் உள்ள இசுலாமியர்களிடமும் இதை அணியும் பழக்கம் உண்டு.

அரைஞாண்- ஆண்களுக்கானது

அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது. இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்படுகிறது. என்றாலும், இடுப்புவார் போன்றவற்றை பயன்படுத்துவோரும் சமய நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கங்கள் சார் காரணங்களுக்காக இதை அணிகிறார்கள். இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. தவிர, அரைஞாண் உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்தோர் அம்மணமாக இருப்பதாகவும் கருதப்படுவதில்லை. அரைஞாண் அணியாமல் உடையும் இல்லாமல் இருப்பவர்களை "முழு முண்டமாக" இருப்பதாகக் குறிப்பிடுவதையும் காணலாம்.

உடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறை காரணங்களுக்காகவும் இதை அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத பிள்ளைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவுகிறது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோத்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவுகிறது.

பெண்குழந்தைகளுக்கான அரைஞாண்

தமிழ் நிலப்பகுதிகள் போக இந்தியாவிலும் பாக்கிஸ்தானில் சில பகுதிகளிலும் இதை அணிந்திருப்பதை பார்க்கலாம். அரைஞாண் அணிவது இனம் சார் பண்பாட்டு வழக்கமாகப் பார்க்கப்பட்டாலும், இந்து, கிறித்தவ, இசுலாமிய நம்பிக்கைக்குட்பட்டு பெறப்பட்டும் தாயத்துக்களை கோத்து வைக்கவும் அரைஞாண் பயன்படுகிறது. இதனால் அரைஞாண் அணிவது மூடப்பழக்கம் என்று சிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்டு. எனினும், இத்தாயத்துக்களை மணிக்கட்டு, கழுத்து, முழங்கைக்கு மேல் தனிக்கயிற்றிலும் கட்டிக் கொள்ளலாம் என்பதால், அரைஞாண் அணியும் வழக்கம் மூடப்பழக்கம் என்றோ அதை ஊக்குவிக்கிறது என்றோ சொல்ல இயலாது.

நோய் தடுப்பு முறை

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை ஆகும். ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு. பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.

புராண கதை

மகாபாரதம் காவியத்தில் திருதராட்டிரன் பிறவிக்குருடர் ஆகையால் பதிபக்தியின் காரணமாக காந்தாரி தனது கண்களைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தார்,இவரது உயர்ந்த பதிபக்தியின் காரணமாக இவர் பல சக்திகள் பெற்று இருந்தார். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில், துரியோதனன் உடல் வலிமையை காந்தாரி தன் பார்வை சக்தியால் அதிகப்படுத்த துரியோதனனை ஆடையின்றி வருமாறு கூற, அவ்வாறு துரியோதனன் வரும் வழியில் கிருஷ்ணன் குறுக்கிட்டு 'பெற்ற தாயே ஆனாலும் முழு ஆண்மகன் இப்படியா முழு நிர்வாணமாகச் செல்வது எனப் பரிகாசம் செய்து இடையில் சிறு கயிற்றைக் கட்டச்செய்தார், காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலவில்லை, கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்.

அரைஞாண் கயிறு நீக்கம்

  • சிறைச்சாலையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கப்படும்.
  • மனிதனின் மரணத்திற்குப் பின் சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படும்.

பெயர் விளக்கம்

வில்லின் நாண் போன்று நாண் அல்லது ஞாண் என்பது கயிறு, கொடி, நூல் ஆகியவற்றைக் குறிக்கும். நா-ஞா போலிகள். நால்-நாலுதல் என்றால் தொங்குதல். யானைக்கு வாய் தொங்குவதால், நால்வாய் என்று பெயர். உலகம் அந்தரத்தில் தொங்குவதாகக் கருதப்பட்டதால் ஞாலம் (ஞால் = நால்; நாலுதல் = ஞாலுதல்) என்று பெயர். நாண் = ஞாண். அரை = இடுப்பு (அரை உடல்). இடுப்பில் கட்டும் கயிறுக்கு அரைஞாண் என்று பெயர். ஆகவே, அரைஞாண் கயிறு என்று சொல்வது தேவையற்றது. இதனை அருணாக்கயிறு, அர்ணாக்கயிறு என்றும் வேறு பலவிதமாகவும் பேச்சுவழக்கில் கூறுவார்கள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.