அரளிப்பட்டிக் குடைவரை

அரளிப்பட்டிக் குடைவரை, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் - சிங்கம்புணரிச் சாலையில் இருந்து செல்லும் கிளைப் பாதை ஒன்றில் உள்ள அரளிப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள குடைவரை ஆகும். இவ்வூரில் உள்ள அரவங்கிரி எனப்படும் அரளிப்பாறையின் தென் சரிவில் இக்குடைவரைக் கோயில் குடையப்பட்டுள்ளது. சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது.

அமைப்பு

இது ஒரு மிகச் சிறிய குடைவரை. இதன் மண்டபம் வடக்குத் தெற்காக 2.23 மீ நீளமும், கிழக்கு மேற்காக 0.90 மீ அகலமும் கொண்டது. இங்கே தூண்கள் எதுவும் காணப்படவில்லை. இம்மண்டபம் மிகச் சிறியதாக ஆழம் குறைவாக உள்ளதனாற் போலும், சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோர் தமது நூலில் இந்த மண்டபத்தைக் கருத்தில் எடுக்காது, இக்குடைவரை கருவறையை மட்டுமே கொண்டது எனக் குறிப்பிட்டுள்ளனர்.[1]

இதன் பின்புறமாக அமைந்த மேற்குச் சுவரில் 0.70 மீ அகலத்தில் கருவறை குடையப்பட்டுள்ளது. அதன் நடுவில் ஆவுடையாரோடு கூடிய இலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது.

சிற்பங்கள்

இக்குடைவரையின் மண்டபத்தின் வடக்கு, தெற்கு நோக்கிய பக்கச் சுவர்களில் குழிவாக வெட்டப்பட்ட கோட்டங்களில் சிற்பங்கள் உள்ளன. இவற்றில் தெற்குச் சுவரில் அமைந்துள்ள சிற்பம் நிறைவடையாமல் அரை குறையாக உள்ளது. இது கால்களைக் குத்திட்டு வைத்தபடி அமர்ந்திருக்கும் ஒரு ஆணின் சிற்பம். இதன் பல பகுதிகள் தெளிவாக இல்லை. வடக்குச் சுவரின் கோட்டத்தில் இருப்பது முகலிங்கம் என சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் இது, முகப்பில் பிள்ளையார் செதுக்கப்பட்ட இலிங்கம் என மு. நளினியும், இரா. கலைக்கோவனும் கூறுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 151
  2. நளினி, மு., கலைக்கோவன், இரா., தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள், தொகுதி 1, சேகர் பதிப்பகம், சென்னை, 2007. பக். 152
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.