அரசியல் ஊழல்

அரசியல் ஊழல் என்பது, பொதுவாக, அரச அதிகாரிகள் சட்டத்துக்குப் புறம்பான தனிப்பட்ட இலாபங்களுக்காக அரச அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக அரச அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல், காவல்துறை அட்டூழியம் முதலியவை அரசியல் ஊழல்களாகக் கருதப்படுவதில்லை. அரச பதவி வகிக்கும் ஒருவர் செய்யும் சட்டத்துக்குப் புறம்பான ஒரு செயல், அவருடைய பதவியுடன் நேரடியாகத் தொடர்புபட்டு இருந்தால் மட்டுமே அது அரசியல் ஊழல் ஆகிறது.

ஊழல் மலிவுச் சுட்டெண்ணை குறிக்கும் உலக வரைப்படம். பச்சை நிறம் குறைந்த அளவு ஊழலையும் சிகப்பு நிறம் அதிக அளவு ஊழலையும் குறிக்கும்

எல்லா வகையான அரசாங்கங்களும் அரசியல் ஊழல்களால் பாதிக்கப்படக் கூடியவையே. கையூட்டு, கப்பம், நிதி கையாடல், மோசடி போன்ற பல செயல்பாடுகள் அரசியல் ஊழல்களில் அடங்கும். போதைப்பொருள் கடத்தல், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கல், பணக் கடத்தல் போன்றவற்றுக்கு ஊழல் துணை புரிந்தாலும், இது ஒழுங்கமைந்த குற்றச்செயல்களுடன் மட்டும் தொடர்பு உடையது அல்ல. பல நாடுகளில் இது ஒரு அன்றாடச் செயல்பாடாக இருக்கும் அளவுக்குப் பொதுவாக உள்ளது.

சட்டத்துக்குப் புறம்பான ஊழல் என்பதன் சரியான பொருள் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடும், சில அரசியலுக்கு நிதியளிக்கும் செயல்பாடுகளை சில நாடுகள் ஏற்றுக்கொள்ளும் அதே வேளை வேறு சில நாடுகள் இவற்றை சட்டத்துக்குப் புறம்பானவையாகக் கருதுகின்றன. சில நாடுகளின் அலுவலர்களுக்கு மிக விரிவான அல்லது சரியான முறையில் வரையறுக்கப்படாத அதிகாரங்கள் உள்ளன. இச் சந்தர்ப்பங்களில் சட்டத்துக்கு அமைந்தவை, சட்டத்துக்குப் புறம்பானவை என்பவற்றை வேறுபடுத்தி அறிதல் கடினமானது.

உலகம் முழுவதிலும் இடம்பெறும் கையூட்டு அல்லது இலஞ்சம் வாங்கல், சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1] அத்துடன் இந்த ஊழல்களினால் ஏற்படும் சுமை மிகவும் வறுமை நாடுகளில் வாழும் அடிமட்ட பில்லியன் மக்களையே கூடுதலாகப் பாதிப்பதாகவும் தெரிய வருகிறது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. African corruption 'on the wane', 10 ஜூலை 2007, பிபிசி செய்திகள்.
  2. "FBI – Public Corruption". Fbi.gov. பார்த்த நாள் 2012-06-07.
  3. "Home – India Against Corruption, IAC". India Against Corruption. பார்த்த நாள் 2014-12-14.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.