அயிரை மலை

திண்டுக்கல் மாவட்டம்,பழனி வட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி வருவாய் கிராமத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ள இரண்டு குன்றுகளில் பெரியதாயும், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளதுமான பெரிய குன்று துரியாதீத மலை (துரியோதன மலை என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்). இம் மலைக்கு கொஞ்சம் மேற்கு பகுதியில் உள்ள சிறுகுன்றுதான் அயிரை மலை(ஐவர் மலை என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்)[1]. இந்த மலையில் கிழக்கு பக்கம் ஒரு பெரிய குகையும், வடக்கு பக்கம் ஒரு சிறு குகையும், மேற்குப் பக்கம் ஒரு நடுத்தரமான குகையும் ஆக மூன்று குகைகள் இயற்கையாய் அமைந்துள்ளது. பெரியகுகையிலிருந்து பின்பக்கமுள்ள நடுத்தரக் குகைக்குச் செல்லும் வழியில் ஓர் பாலி ('''சூரிய புஷ்கரணி''') (சுனை) அமைந்துள்ளது. இந்த சுனையின் தென்மேற்கில் மலையின் உச்சியில் பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. கோவிலை அடுத்து வட மேற்கு திசையில் சிறு சுனையும் ('''சந்திர புஷ்கரணி''') உள்ளது. அதை அடுத்து குழந்தைவேலப்பர் கோவிலும், அதற்கு வட திசையில் ஒரு சிறு பாலியும் (சுனை)அமைந்துள்ளது. கிழக்குப் பக்கமுள்ள பெரிய குகையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான குமணனின் நம்பிக்கைத் தெய்வமான கொற்றவை கோவிலும் உள்ளது. ( கொற்றவையை திரௌபதை என இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்) திரௌபதை கோவிலுக்குச் செல்ல திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி (இவரது குல தெய்வம் என்பது குறிப்பிட தக்கது.) படிப் பாதை பல லட்ச ரூபாய் செலவில் அமைத்துள்ளார்.

தொல்லியல் துறை அறிவிப்பு

தல வரலாறு

தீர்த்தங்கரர்களின் உருவங்கள் (புடைப்புச்சிற்பங்கள்)

அயிரை மலையில் தொல்லியல் துறை சார்பில் தகவல் பலகை ஒன்று உள்ளது. (படம்) அதில் கீழ் கண்ட தகவல்கள் உள்ளது. இம் மலையின் கிழக்கு பக்கம் உள்ள இயற்கையான குகைத் தளத்தில் சமணர்களின் படுக்கைகள் உள்ளன. (சமணர் படுக்கைகள் தற்போது இல்லை) இந்த குகையின் நெற்றியில் 16 சமணத் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இத்தீர்த்தங்கர்கள் அயிரை மலைத் தேவர் என அழைக்கப்பட்டனர். இவற்றுள் பார்சுவ நாதரின் சிற்பமும் அடங்கும், ஒவ்வொரு சிற்பத்திற்கும் கீழே இத்திரு மேனிகளைச் செய்தோரின் பெயர்கள் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அச்சணந்தி,இந்திரசேனர், வீரசங்கத்தைச் சேர்ந்த மல்லிசேனர்,அவ்வநந்தி குறத்தியார்,எனும் பெண் துறவியார் ஆகியோர் குறிப்பிடதக்கவர்கள். இங்குள்ள கல்வெட்டுகள் இந்த மலையை அயிரை மலை எனக் குறிக்கின்றன. பதிற்று பத்து குறிக்கும் ஆயிரை மலை இதுவாக இருக்கலாம். கி.பி.8-10ம் நாற்றாண்டுகளில் ஆயிரை மலை சமண முனிவர்களும், அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணப்பள்ளியாக இருந்துள்ளது. அயிரை மலைப் பள்ளியோடு பாண்டிய நாட்டின் பிற சமணபள்ளிகளுக்கு தொடர்பு இருந்துள்ளது. உதாரணமாக நாலூர், அவிசேரி பள்ளியிலிருந்து சில மாணவர்கள் இப்பள்ளிக்கு வந்து சென்றனர் என்பதை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

துரியாதீத மலை

துரியோதனன் (எ)துரியாதீத மலை

யோக நிலையில் துரியாதிதம் என்பது மனம் உடலை விட்டு உச்சந்தலை வழியாக வெளியேறுவது, எவ்வித சலனமும், அசைவும் இன்றி ஆனால் விழிப்புடன் இருக்கும் நிலை ஆகும். இதை உணர்த்தும் படி அயிரமலை (ஐவர்மலை)க்கு கிழக்கே உள்ள (படம்) துரியாதீதமலையின் உச்சியில் இராமலிங்க அடிகளின் சைவ சுத்த சன்மார்க்க வழிபாட்டு முறையின் படி வாழ்ந்த வல்லநாட்டு சாது சிதம்பர அடிகள் அகவல் மேடை ஒன்றை தாமரை மலர் வடிவில் அமைத்துள்ளார். ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை தினத்திற்கு முதல் நாள் இரவு அகவல் மேடையில் வல்லநாட்டு சாது சிதம்பர அடிகளின் சீடர்களால் தீபம் ஏற்றி திரு அருட்பா பாடி வழிபாடு நடைபெற்று வருகிறது.அவ்வாறு எற்றப்படும் தீபம் அம்மாவாசை திதி முடியும் வரை எறியும்.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான குமணனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் இம்மலை உள்ளதால், இம்மலையின் மத்தியில் வேற்று நாட்டுப் படையெடுப்பு, அண்ணியர்கள் தாக்குதல் போன்றவற்றை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு கோபுரம், அமைக்கப் பட்டுள்ளது அக்கோபுரம் தற்போது சிதைந்த நிலையில் உள்ளது.

சான்றாவணம்

  1. கொங்கு நாட்டு வரலாறு-பக்கம்-74- ஆசிரியர்-கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்- அண்ணாமலைப் பல்கலைக் கழகம்-1954
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.