அடுக்குமாடி வீட்டுத்தொகுதி
அடுக்குமாடி வீட்டுத்தொகுதி என்பது பல இருப்பிட அலகுகளைக் கொண்ட மாடிக் கட்டிடங்கள் ஆகும். இவை இரண்டு மாடிக் கட்டிடங்கள் முதல் பல மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டிடங்கள் வரை இருக்கலாம். இவற்றில் உள்ள இருப்பிட அலகுகள் வாடகைக்கு விடப்படுகின்றன அல்லது தனித்தனியாக விற்கப்படுகின்றன. வாடகைக்கு விடப்படும் வீட்டுத் தொகுதிகள் ஒரு உரிமையாளரைக் கொண்டிருக்கும். தனித்தனியாக விற்கப்படும் வீட்டுத்தொகுதிகள் பல உரிமையாளர்களைக் கொண்டிருப்பதால் கூட்டாக நிர்வகிக்கப்படுகின்றது. இத்தகைய வீட்டுத்தொகுதிகள் கூட்டுரிமைச் சொத்துக்கள் (condominiums) ஆகும். வாடகை இல்லாவிடினும், கட்டிடத்தின் பொதுப் பகுதிகளைப் பேணுவதற்காக மாதத்துக்கு அல்லது ஆண்டொன்றுக்குக் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு உரிமையாளரும் செலுத்தவேண்டியிருக்கும்.


அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகள் பொதுவாக நகரப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. கட்டிடங்களுக்குரிய நிலத்தின் விலை இப்பகுதிகளில் அதிகமாக இருப்பதால் இப் பகுதிகளில் நிலம் வாங்கி தனித்தனி வீடுகள் கட்டுவது பொருளாதார ரீதியில் உசிதமானது அல்ல. அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகளில், நிலத்தின் விலை பல வீட்டு அலகுகளிடையே பகிரப்படுகிறது.