அஞ்சில் அஞ்சியார்

அஞ்சில் அஞ்சியார் ஒரு சங்க காலத் தமிழ்ப் புலவர்.

பெயர்க் காரணம்

ஊஞ்சலாடும் பெண்ணை இவர் 'அஞ்சில் ஓதி' என்று குறிப்பிடுகிறார். இதனால் இப்புலவர் பெயருக்கு 'அஞ்சில்' என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது எனலாம். எனினும் அஞ்சில் ஆந்தையார் பாடலில் அஞ்சில் என்னும் சொல் வரவில்லை. எனவே அஞ்சில் என்னும் சொல் ஊரைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டியுள்ளது.

பாடிய பாடல்கள்

சஙக இலக்கியங்களில் இவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் உள்ளது. (நற்றிணை: 90 மருதம்)

பாடல் தரும் செய்தி

அந்த மூதூரில் ஆடியல் விழா. எல்லாரும் உடையோர் போலப் பெருங்கை (நல்லொழுக்க) உணவு அருந்துவர். துணி வெளுக்கும் புலத்தி துவைக்காத புத்தாடை அணிந்துகொள்வர். பனைநார்க் கயிற்றில் ஊஞ்சல் கட்டி ஆடுவர் மாலை போட்டுக்கொண்டு ஆடுவர். (ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள். ஆடிமாதக் காற்றில் மரங்கள் மிகுதியாக ஆடும். அதனால் அந்த மாதத்துக்குப் பெயர் ஆடி. ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழா ஆடிப்பதினெட்டு. அந்த நாளில் தூலி என்று சொல்லி ஊஞ்சலாடுவது இக்காலத்திலும் உண்டு) தலைவி ஒருத்தி அன்று புத்தாடை புனையவில்லை. மாலை போட்டுக்கொள்ளவில்லை. தோழியர் ஆட்டும் ஊஞ்சலும் ஆடவில்லை. அவள் அழுதுகொண்டே ஒதுங்கிச் செல்கிறாள். காரணம் அவளது தலைவனை நயன் இல்லாத மாக்கள் (மகளிர்) தழுவிக்கொண்டனர். இதனை வேந்தனும் கண்டுகொள்ளவில்லை. இந்த அரசனால் என்ன பயன் என்கிறாள் தோழி. தலைவியிடம் சொல்வது போலப் பாணன் கேட்கும்படி தோழி சொல்கிறாள். பாணன் தூது சென்று தலைவனிடம் குறையைச் சொல்லிப் போக்கவேண்டும் என்பது கருத்து.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.