அஞ்சல்

அஞ்சல் (pronunciation ) அல்லது தபால் என்பது கடிதங்களையும் பிற பொருட்களையும் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு அனுப்புவதற்கான ஒரு முறை ஆகும். இம்முறையில், திறந்த அட்டைகளில் எழுதப்பட்ட கடிதங்கள், உறைகளில் மூடி ஒட்டப்பட்ட கடிதங்கள், சிறிய பொதியாகக் கட்டப்பட்ட பொருட்கள் என்பன உலகின் பல பாகங்களுக்கும் எடுத்துச் சென்று வழங்கப்படுகின்றன. அஞ்சல் முறைமையின் ஊடாக அனுப்பப்படும் எதுவும் பொதுவாக "அஞ்சல்" எனப்படுகின்றது.

ஐக்கிய இராச்சியம், சொமர்செட்டில் டவுன்டன் என்னும் இடத்துக்கு அண்மையில் உள்ள இங்க்பென் அஞ்சல்பெட்டி அருங்காட்சியகத்தில் காணப்படும் அஞ்சல் பெட்டிகள் சில.

அஞ்சல் சேவை அரசுகளினால் நடத்தப்படுவதாக அல்லது தனியாரினால் நடத்தப்படுவதாக இருக்கலாம். ஆனால், தனியார் அஞ்சல் சேவைகள் பெரும்பாலும் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு அமையவே செயல்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தேசிய அஞ்சல் சேவைகள் அரசுகளின் தனியுரிமையாகவே செயற்பட்டன. இச் சேவைகள் முன்னதாகவே கட்டணம் பெற்றுப் பொருட்களை அனுப்பி வந்தன. கட்டணம் செலுத்தியமைக்கான சான்றாகக் கடிதங்கள் அல்லது பொதிகளில் அஞ்சல்தலைகள் ஒட்டப்படுவது வழக்கம். பெருமளவிலான அஞ்சல்களை அனுப்பும்போது அஞ்சல்தலைகளுக்குப் பதிலாக அஞ்சல்மானிகள் மூலம் அச்சுக்குறிகள் இடப்படுவதும் உண்டு. அஞ்சல் முறைமை பல வேளைகளில் கடிதங்கள் அனுப்புவது மட்டுமன்றி வேறு பல செயற்பாடுகளிலும் ஈடுபடுவது உண்டு. சில நாடுகளில் அஞ்சல் சேவையானது தந்திச் சேவை, தொலைபேசிச் சேவை ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளது. வேறு சில நாடுகளில் அஞ்சல் சேவை, மக்கள் பணத்தைச் சேமிப்பதற்கான சேமிப்புக் கணக்குச் சேவைகளை வழங்குகின்றன. அடையாள அட்டைகளை வழங்குதல், கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்களைப் பெறுதல் என்பவற்றையும் சில நாடுகளில் அஞ்சல் சேவைகள் கையாளுகின்றன.

பழங்கால அஞ்சல் முறைகள்

எழுதப்பட்ட கடிதங்களையும் ஆவணங்களையும் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு எடுத்துச் சென்று வழங்குவதற்கான முறைகள் எழுத்து முறை தொடங்கிய காலத்திலேயே தொடங்கியிருக்கக்கூடும். ஆனால், முறைப்படியான அஞ்சல் முறைகள் நீண்ட காலத்துக்குப் பின்னரே அறிமுகமாயின. எழுத்துமூல ஆவணங்களை எடுத்துச் சென்று வழங்குவதற்கான முறை ஒன்று இருந்ததற்கான முதற் சான்று பண்டைய எகிப்தில் இருந்து கிடைக்கிறது (கி.மு. 2400). எகிப்து நாட்டின் "பாரோக்கள்" எனப்பட்ட அரசர்கள் தமது ஆணைகளை எடுத்துச் சென்று நாட்டின் பல இடங்களிலும் வழங்குவதற்காக அஞ்சல்காவிகளைப் பயன்படுத்தினர்.

பாரசீகம்

உண்மையான அஞ்சல் முறை என்று சொல்லக்கூடிய ஒரு முறை முதன் முதலாகப் பாரசீகத்திலேயே உருவானதாகத் தெரிகிறது. எனினும் இதைக் கண்டுபிடித்தது தொடர்பான ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. சிலர் இது பேரரசர் சைரசின் (கி.மு. 550) கண்டுபிடிப்பு எனக்கூற, வேறு சிலர் இது சைரசுக்குப் பின் வந்தவரான பாரசீகத்தின் முதலாம் டேரியசின் (கி.மு. 521) கண்டுபிடிப்பு என்கின்றனர். இந்த முறையின் முதன்மை நோக்கம் அஞ்சல் சேவையாக இல்லாமல் இருக்கலாம். இந்த முறையை உளவுத் தகவல்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தியமை பற்றிய தெளிவான ஆவணங்கள் உள்ளன.

இந்த முறையில் வழியில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒன்றாக அஞ்சல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தகவலைக் காவி வருபவர் தான் வந்த குதிரையை நிலையத்தின் விட்டுவிட்டுப் புதிய குதிரையொன்றை எடுத்துக்கொண்டு தனது பயணத்தைத் தொடர்வார். இது தகவல்களை வேகமாகக் கொண்டுசெல்ல உதவியது.

இந்தியா

இந்தியாவில் மௌரியப் பேரரசின் கீழ் உருவான பொருளாதார வளர்ச்சியும், அரசியல் உறுதிப்பாடும், நாட்டில் பல குடிசார் கட்டமைப்புக்கள் உருவாவதற்கு வழி சமைத்தன. இந்தியாவின் முதல் அஞ்சல் முறைமையையும், பொதுக் கிணறுகள், தங்கு மடங்கள் என்பவற்றையும் மௌரியர்களே உருவாக்கினர்.

ரோம்

அஞ்சல் சேவை குறித்த தெளிவான ஆவணங்கள் முதன்முதலாம ரோமில் இருந்தே கிடைக்கின்றன. இந்த அஞ்சல் முறை பேரரசர் அகசுட்டசு சீசர் காலத்தில் உருவானது (கி.மு. 62 - கி.பி. 14). வாகமாக ஓடக்கூடிய குதிரைகளால் இழுக்கப்பட்ட பாரம் குறைந்த வண்டிகள் இதற்குப் பயன்பட்டன. இது தவிர எருதுகளால் இழுக்கப்படும் இரண்டு சில்லுகளைக் கொண்ட வேகம் குறைந்த வண்டிகளும் பயன்பாட்டில் இருந்தன.

மங்கோலியப் பேரரசு

பேரரசர் கெங்கிசுக் கான் பேரரசு முழுதும் பரவிய தூதர்களையும், அஞ்சல் நிலையங்களையும் கொண்ட முறையொன்றை மங்கோலியப் பேரரசில் உருவாக்கினார். குப்ளாய்க் கானின் கீழான யுவான் வம்ச ஆட்சியில் இந்த முறைமை சீனாவின் பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இந்த நிலையங்கள் அரசாங்க அஞ்சல்களை அனுப்புவதும் வழங்குவதுமான வேலைகளை மட்டுமன்றி, பயணம் செய்யும் அரச அலுவலர்கள், படைத்துறையினர், வெளிநாட்டு விருந்தினர் முதலியோருக்கும் உதவியாக இருந்தன. வணிகத் தேவைகளுக்கும் இவை பேருதவியாக அமைந்தன. குப்பிளாய்க் கானின் ஆட்சிக் கால முடிவில் சீனாவில் மட்டும் 1400 அஞ்சல் நிலையங்கள் இருந்தன. இவற்றின் தேவைகளுக்காக 50,000 குதிரைகள், 1400 எருதுகள், 6700 கோவேறுகழுதைகள், 400 வண்டிகள், 6000 தோணிகள், 200 க்கு மேற்பட்ட நாய்கள், 1150 செம்மறியாடுகள் என்பன இருந்தன.

அஞ்சல் சேவை வளர்ச்சி

"பென்னி பிளாக்", உலகின் முதலாவது அஞ்சல்தலை, ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.

ஐக்கிய இராச்சியத்தில் 1840 ஆம் ஆண்டுக்கு முன் அஞ்சல் முறை செலவு கூடியதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும், ஊழல் மிகுந்ததாகவும் இருந்தது. கட்டணங்களை அனுப்புவர் அன்றிப் பெறுபவரே செலுத்தவேண்டி இருந்தது. கட்டணங்களும் கடிதங்களைக் கொண்டுசெல்ல வேண்டிய தூரம், கடிதங்களில் அடங்கியுள்ள தாள்களின் எண்ணிக்கை என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டன. சர். ரோலண்ட் ஹில் என்பவர் அறிமுகப் படுத்திய சீர் திருத்தங்கள் அஞ்சல் முறைமையில் இருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்ததுடன், அஞ்சல் முறைமையையே முற்றாக மாற்றியமைத்தது எனலாம். இவருடைய சீர்திருத்தங்கள் "பென்னி அஞ்சல்" என்னும் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்ததுடன், அஞ்சலுக்கு முன்னதாகவே கட்டணம் செலுத்தும் முறையையும் அறிமுகப்படுத்தியது. இச் சீர்திருத்தங்களின் அடிப்படையிலேயே அஞ்சல்தலை அச்சிடப்பட்ட கடித உறைகள், ஒட்டக்கூடிய அஞ்சல்தலைகள் என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் அனுப்புபவரே அஞ்சல் கட்டணத்தைச் செலுத்தும் வசதி உருவாக்கப்பட்டது. இச் சீர்திருத்தங்களே அஞ்சல்தலையின் கண்டுபிடிப்புக்கும் வழிகோலியது. "பென்னி பிளாக்" என அறியப்படும் முதல் தபால்தலையும் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. இங்கிருந்தே புதிய அஞ்சல் முறை உலகம் முழுவதும் பரவியது.

அஞ்சலும் புதிய தொழில்நுட்பங்களும்

புதிய போக்குவரத்து முறைகளின் வளர்ச்சி அஞ்சல் முறைமையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. தானுந்துகளும், தொடர்வண்டிகளும் அஞ்சல் சேவையின் செயற்றிறனைக் கூட்டின. 20 ஆம் நூற்றாண்டில் வானூர்தி அஞ்சல்களே வெளிநாட்டு அஞ்சல்களுக்குப் பெரிதும் விரும்பப்பட்டது. அஞ்சல் தொடர்பான பல்வேறு நடைமுறைகளும் தானியங்கி முறையில் செய்வதற்கான வழியும் ஏற்பட்டது. இணையத்தின் அறிமுகத்துடன், மின்னஞ்சல்கள் புழக்கத்துக்கு வந்தன. இது, கடிதங்களை வழமையான அஞ்சல்கள் மூலம் அனுப்பும் முறைக்குப் போட்டியாக அமைந்தது. ஆனாலும், இணையத்தின் வருகை, இணைய வணிகம் என்னும் புதிய வணிக முறையை அறிமுகப்படுத்தியதால், பொருட்களை அஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பவேண்டிய தேவை ஏற்பட்டு, அஞ்சல் சேவைக்குப் புதிய வாய்ப்புக்களும் உருவாயின.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.