அஞ்சல் எழுதுபொருள்

அஞ்சல் எழுதுபொருள் என்பது, அஞ்சல்தலை அச்சிடப்பட்ட அல்லது அஞ்சல் சேவைக்கோ அது தொடர்பான வேறு தேவைக்கோ முற்கட்டணம் செலுத்தப்பட்டதற்கான குறிப்பு அச்சிடப்பட்ட கடித உறை, கடிதத்தாள், அஞ்சல் அட்டை, வான்கடிதத்தாள், சுற்றுத்தாள் போன்றவற்றுள் ஒன்றைக் குறிக்கும்.[1][2] ஆனாலும், அஞ்சல்தலை அச்சிடப்படாத அஞ்சல் அட்டைகள் இதற்குள் அடங்காது.[3]

1893ம் ஆண்டைச் சேர்ந்த, அஞ்சல்தலை அச்சிடப்பட்ட ஐக்கிய இராச்சிய கடித அட்டை.
அஞ்சல்தலை அச்சிடப்பட்ட 1881ம் ஆண்டைச் சேர்ந்த ஐக்கிய அமெரிக்க அஞ்சல்.
அச்சிட்ட அஞ்சல்தலையுடன் கூடிய 1895ம் ஆண்டைச் சேர்ந்த பவேரிய அஞ்சல் அட்டை.
1878ம் ஆண்டின் கியூபா நாட்டு அஞ்சல் அட்டை.
1876ம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க அஞ்சல்தலை அச்சிட்ட கடித உறை.

வடிவமும் தோற்றமும்

பொதுவாக, அஞ்சல் எழுதுபொருட்கள், அஞ்சல்தலைகளைப் போலவே கையாளப்படுகின்றன. அவையும் அச்சிடப்பட்டுள்ள அஞ்சல் கட்டணத்தின் முகப் பெறுமானத்தில் அல்லது எழுதுபொருளின் செலவுக்கான கூடுதல் கட்டணத்துடன் அஞ்சல் அலுவலகத்திலேயே விற்கப்படுகின்றன.[4] இது சில வேளைகளில் அரசாங்கத் தேவைகளுக்கு மட்டும் உருவாக்கப்பட்ட அரச அஞ்சலாக இருக்கக்கூடும்.[4][5] சில அஞ்சல் எழுதுபொருட்கள் தனிப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அச்சிட்டு வழங்கப்படுவதும் உண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில், தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்கள் கொடுக்கும் தாள்கள் அல்லது அட்டைகளில், அஞ்சல் நிர்வாகத்தின் ஒப்புதலுடல் கூடிய அடையாள முத்திரை அச்சிடப்படும்.

சேகரித்தல்

பெரும்பாலான அஞ்சல் எழுதுபொருட்கள் முழுதாக, அதாவது முழு அட்டை, முழுத் தாள் அல்லது முழுக் கடித உறையாகவே சேகரிக்கப்படுகின்றன. 19ம் நூற்றாண்டில், அஞ்சல் எழுதுபொருளில் இருந்து அச்சிடப்பட்ட அடையாளத்தை மட்டும் வெட்டியெடுத்துச் சேகரிப்பது வழக்கமாக இருந்தது. இது கடித உறையை அல்லது எழுதுபொருளை அழித்துவிடுகிறது. இதனால், இவ்வாறு வெட்டியெடுத்த சேகரிப்புக்கள் எத்தகைய கடித உறையிலிருந்து வருகிறது என்பதை அறியமுடியாமல் போவதுடன், பல வேளைகளில் நீக்கல் முத்திரைகள் தொடர்பான தகவல்களும் கிடைக்காமல் போகின்றன.

பல நாட்டுக்குரிய அஞ்சல்தலை விபரப் பட்டியல்கள் அஞ்சல் எழுதுபொருட்களையும் பட்டியலிடுகின்றன. அத்துடன் தனித்தனி நாடுகளுக்கான அஞ்சல் எழுதுபொருட்கள் குறித்த நூல்களும் வெளிவருகின்றன. தற்கால அஞ்சல் எழுதுபொருள் விபரப்பட்டியல்களில் முக்கியமானது, இக்கின்சு அன்ட் கேச்சு உலக அஞ்சல் எழுதுபொருள் விபரப்பட்டியல் (Higgins & Gage World Postal Stationery Catalog) ஆகும்.

அஞ்சல் எழுதுபொருள் சமூகங்கள்

அஞ்சல் எழுதுபொருட்களைச் சேகரிப்பவர்கள் வேறுநாடுகளில் உள்ள அஞ்சல் எழுதுபொருள் சமூகங்களையோ ஆய்வுக் குழுக்களையோ தொடர்புகொள்ள முடியும். இவ்வாறான சமூகங்கள் தகவல்களையும், வெளியீடுகளையும், வழிகாட்டல்களையும் ஆர்வமுள்ளவர்களுக்கு வழங்குகின்றன.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.