அஞ்சலி கோபாலன்

அஞ்சலி கோபாலன் (Anjali Gopalan, பிறப்பு: செப்டம்பர் 1, 1957) விளிம்பு நிலை மனிதர்களுக்காகப் பல வருடங்களாகக் குரல் கொடுத்து வருபவர். நாஸ் ஃபவுண்டேஷன் என்ற சமூக விழிப்புணர்வுக்கான அமைப்பின் நிறுவனர். 2005ம் ஆண்டு இந்தியாவின் சார்பாக நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். டைம்ஸ் வெளியிட்ட உலகின் 100 வலிமை மிக்கவர்களின் பட்டியலில் (2012) இடம்பிடித்தவர்[4]. காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்றவர். அக்டோபர் 25, 2013 அன்று பிரான்சின் தலையாய செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண்[5]. மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள். எய்ட்ஸ் நோயாளிகளுடன் கைகுலுக்குவதால் நோய் தொற்றாது என்னும் விழிப்புணர்வு என அமெரிக்காவில் தொடங்கி இன்று மதுரை வரை குரல் கொடுத்து வரும் தமிழர்.

அஞ்சலி கோபாலன்
பிறப்பு1 செப்டம்பர் 1957 (1957-09-01) சென்னை, இந்தியா[1]
இருப்பிடம்புது தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்,[2]’நாஸ் ஃபவுண்டேஷன்’ (இந்தியா) அமைப்பின் நிறுவனர்[3]
வாழ்க்கைத்
துணை
திருமணமாகாதவர்

இளமைப் பருவம்

அஞ்சலி கோபாலன் 1957 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை டாக்டர் கே. ஆர். கோபாலன் இந்திய வான்படை அதிகாரியாவார். இவரது தாய் சீக்கியர். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் கல்வி பயின்றார். அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும், பன்னாட்டு மேம்பாட்டில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

சமுதாயப் பணி

அஞ்சலி கோபாலன்,கோபி ஷங்கர் மற்றும் ஜான்.சிருஷ்டி துரிங் வானவில் விழா மற்றும் ஆசியாவின் முதல் பால்புதுமையினர் விழாவை துவக்கிவைத்தபோது[6]

அஞ்சலி கோபாலன், கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் நியூயார்க் நகரில் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். அவரது பணி, தென்கிழக்கு ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்து தகுந்த ஆவணங்களின்றி அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்காக அமைந்திருந்தது. எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டும், அமெரிக்காவில் வாழும் உரிமைக்கான தகுந்த ஆதார ஆவணங்கள் இல்லாதுலிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் தெற்காசிய மக்களின் நலனுக்குப் பணியாற்றுவதற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.[1][7]

பின் இந்தியாவிற்குத் திரும்பிய அஞ்சலி 1994 இல் டெல்லியின் முதல் ஹெச்ஐவி மருத்துவமனையையும் ஹெச்ஐவி பாதிப்புடையோரின் நலனுக்காகப் பாடுபடும் நாஸ் பவுண்டேஷனையும் தொடங்கினார். இந்த நாஸ் அமைப்பு ஹெச்ஐவி+ மக்களின் நலனுக்காக மட்டுமின்றி, தற்போது பாலின உரிமைகளுக்காகவும் போராடி வருகிறது.

2000 இல் ஆதரவற்ற ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக ஒரு இல்லத்தை நிறுவினார். சுகாதார தொழில் நெறிஞர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் தேவையான பயிற்சியளித்து அவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார். இன்றளவும் ஹெச்ஐவி+ குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காகப் பாடுபடுவதே இவரது முக்கியப் பணியாக உள்ளது.

ஜூலை 29, 2012 இல்,சிருஷ்டி மதுரை சார்பில் நடத்தப்பட்ட பால்புதுமையினர்(Genderqueer) மற்றும் மாற்று பாலினத்தவருக்கான’துரிங் வானவில் திருவிழா’வையும் பேரணியையும் (pride parade) தொடங்கி வைத்தார். இதுவே அஞ்சலி கோபாலன் பங்குகொண்ட முதல் வானவில் பேரணியாகும்.[8] [9]

"பொதுவாக நான் இதைப் போன்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனால், சிருஷ்டி நடத்திய விழாவில் கலந்துகொண்டது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது.சிருஷ்டி அமைப்பு சாராத, நிறுவனம் சாராத மாணவர்கள் வட்டம் என்பது ஒரு காரணம். உலகில் முதல் முறையாக இருபதுக்கும் மேற்பட்ட பாலின வகைகளை வெளிக்காட்டிய பெருமை அந்த மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, திருநங்கை ரேவதி போன்றவர்களுடன் ஒரு அம்மாவாக நானும் அங்கு சென்றேன். மனநிறைவாக இருந்தது. மதுரை போன்ற ஓரிடத்தில் இத்தகைய விழிப்புணர்வு விழாக்கள் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் மதுரைக்கு முதன்முதலாக அப்போதுதான் வந்தேன். என் ஓய்வு காலத்தை மதுரையில் கழிக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டது அழகிய மதுரை மாநகரம்."[9]
அஞ்சலி கோபாலன் துரிங் வானவில் விழா மற்றும் ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழாவை துவக்கிவைத்தபோது[10]

377வது சட்டப் பிரிவு

இன்று ஓரின ஈர்ப்பு தொடர்பாக மட்டுமே அறியப்படும் 377வது சட்டப் பிரிவு தொடக்கத்தில் வாய், ஆசனவாய் பங்கு பெறும் கலவியையும் இயற்கைக்கு விரோதமானது என்றே கருதியது.தனிமனித செயல்பாடுகளைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இந்தச் சட்டம், எண்ணற்ற மனித உரிமை மீறல்களை நடைமுறைப்படுத்தியது. எனவே,இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிரான போராட்டத்தை மனித உரிமை சார்ந்த போராட்டமாகக் கடந்த 2001 முதல் நடத்தி வருகிறது அஞ்சலி கோபாலனால் தொடங்கப்பட்ட ‘நாஸ்’ என்னும் அறக்கட்டளை.

விருதுகள்

  • 2001 இல் விளிம்புநிலை சமுதாயத்தினருக்கான இவரது பணியைச் சிறப்பிக்கும்விதமாக ’காமன்வெல்த் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது.
  • 2003 இல், ஹெச்ஐவி பாதிக்கப்பட்டோரின் நலனுக்குக்கான இவரது பணியைப் பாராட்டி சென்னையைச் சேர்ந்த மானவ சேவா தர்ம சமவர்தனி அமைப்பு (Manava Seva Dharma Samvardhani), சத்குரு ஞானானந்தா விருதினை வழங்கியது.
  • 2005 இல் நோபல் பரிசுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
  • 2007 மார்ச்சில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் ’பெண் சாதனையாளர்’ விருதளிக்கப்பட்ட பத்து பேர்களில் அஞ்சலி கோபாலனும் ஒருவராவார்.
  • ஸ்ருஷ்டி மதுரை கல்வி பொறுப்பாட்சி குழும ஆலோசனை வாரியத்தின் கவுரவ தலைவர்.
  • அக்டோபர் 25, 2013 இல் செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண்.[11][12]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.