அசோ இணைப்பு

கரிமவேதியியலில் அசோ இணைப்பு (azo coupling) என்பது ஒரு டையாசோனியம் கலவை மற்றும் ஒரு அசோ கூட்டுப்பொருளைத் தரக்கூடிய அரோமாட்டிக் கூட்டுப்பொருள் இடையே நிகழும் வினையைக் குறிப்பதாகும். இந்த இலத்திரன்கவர் அரோமாட்டிக் பதிலீட்டு வினையில், டையாசோனியம் நேர்மின் அயனி இலத்திரன்கவரியாகவும் செயல் திறனூட்டிய அரீன் மின்னணு மிகு பொருளாகவும் [1] செயல்படுகின்றன. கீழுள்ள உதாரணங்கள் உட்பட பெரும்பாலான டையாசோனியம் சேர்மங்கள் அரோமாட்டிக் பண்புகளைக் கொண்டவை.

டையாசோ ஆக்கம்

அனிலினுடன் நைட்ரசு அமிலத்தை வினையூட்டுகையில் ஒரு டையாசோனியம் உப்பு உருவாகிறது. இவ்வினை "டையாசோ ஆக்கம்" எனப்படுகிறது. டையாசோனியம் உப்புக்கள் முக்கியமான தொகுப்புமுறை இடைநிலைகளாகும். இவை இணைப்பு வினைகளில் பங்கேற்று அசோ சாயங்களைத் தருகின்றன. பதிலீட்டு வினைகளில் பங்கேற்று அரோமாட்டிக் வளையங்களில் உள்ள வேதி வினைக்குழுவை செயல்பட வைக்கின்றன.

வினையின் பயன்கள்

அசோ இணைப்பு விளைபொருட்கள் அவற்றின் அதிகரித்துள்ள இணைப்பு காரணமாக வினைபடு பொருட்களைக் காட்டிலும் அதிகமாக ஒளியின் நீண்ட அலைநீள நிறங்களை உறிஞ்சிவிடும் (குறிப்பாக அவை உறிஞ்சுவது கட்புலனாகும் பகுதியிலுள்ள நிறங்களை ). ஆதலால் நீட்டிக்கப்பட்ட இணைப்பு அமைப்புகள் காரணமாக அரோமாட்டிக் அசோ கூட்டுப்பொருட்கள் பிரகாசமான நிறங்களை உறிஞ்ச முனைகின்றன. பல அசோ சேர்மங்கள் சாயங்களாகப்[2] பயனாகின்றன. ( பார்க்க அசோ சாயங்கள் ) மெத்தயிற் சிவப்பு மற்றும் செந்நிறமி 170 ஆகியன முக்கியமான அசோ சாயங்களில் சிலவாகும்.

புரந்தசில் எனப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மருந்து மற்றும் சல்ஃபா மருந்துகள் தயாரிக்கவும் அசோ இணைப்பு பயன்படுகிறது.

இணைப்பு வினை எடுத்துக்காட்டுகள்

பீனால் டையாசோனியம் குளோரைடுடன் வினைபுரிந்து செம்மஞ்சள் நிற அசோ கூட்டுப்பொருளைத் தருகின்ற பல செயல்முறைகள்[3][4] விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வினை கார வினையூக்கியினால்[2] நடைபெறுகிறது.

அணிலின் டையாசோனியம் உப்புடன் வினைபுரிந்து தொடர்புடைய அனிலின்மஞ்சள் எனப்படும் சாயத்தைத் தருகிறது [2].

நாப்தலீன்கள் பிரபலமான ஏற்பிகளாகும். அனிலின் நாப்தாலுடன் வினைபுரிந்து ஒருவகை பழுப்பு நிறமியைத் தொகுப்பு முறையில் தயாரிக்க உதவுகிறது.

அசோ இணைப்பைக் காட்டும் ஓர் அசைபடம்

இதேபோலவே β-நாப்தால் பினைல்டையாசோனிய மின்கவரியுடன் இணைந்து செஞ்சிவப்பு சாயத்தைக் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

  1. Smith, Michael B.; March, Jerry (2007), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (6th ), New York: Wiley-Interscience, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-471-72091-7, http://books.google.com/books?id=JDR-nZpojeEC&printsec=frontcover
  2. Klaus Hunger, Peter Mischke, Wolfgang Rieper, Roderich Raue, Klaus Kunde, Aloys Engel "Azo Dyes” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2005, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a03_245.
  3. J. L. Hartwell and Louis F. Fieser, "Coupling of o-tolidine and Chicago acid", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv2p0145; Coll. Vol. 2: 145
  4. H. T. Clarke and W. R. Kirner, "Methyl red", Org. Synth., http://www.orgsyn.org/orgsyn/orgsyn/prepContent.asp?prep=cv1p0374; Coll. Vol. 1: 374
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.