அக்காபா வளைகுடா

அக்காபா வளைகுடா (Gulf of Aqaba) என்பது செங்கடல் பகுதியின் வடக்கு முனையில், சினாய் தீபகற்பத்திற்குக் கிழக்கில். அராபியப் பெரு நிலப்பகுதிக்கு மேற்கிலும் அமைந்துள்ள ஒரு பெரிய வளைகுடா ஆகும். இதை எய்லாட் வளைகுடா என்ற பெயராலும் அழைக்கின்றனர். இவ்வளைகுடாவின் கடற்கரைப் பகுதி எகிப்து, இசுரேல். யோர்டான், சவுதி அரேபியா முதலான நான்கு நாடுகளைப் பிரிக்கிறது.

அக்காபா வளைகுடா
The Gulf of Aqaba
خليج العقبة (அரபு)
מפרץ אילת (எபிரேய மொழி)
எய்லாட் வளைகுடா
அக்காபா வளைகுடாவிற்கு கிழக்கில் சினாய் தீபகற்பமும் மேற்கில் சூயசு வளைகுடாவும்
அமைவிடம்தென்மேற்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கா
ஆள்கூறுகள்28°45′N 34°45′E
வகைவளைகுடா
முதன்மை வரத்துசெங்கடல்
வடிநில நாடுகள்எகிப்து, இசுரேல், யோர்தான், மற்றும் சவுதி அரேபியா
அதிகபட்ச நீளம்160 km (99 mi)
அதிகபட்ச அகலம்24 km (15 mi)
அதிகபட்ச ஆழம்1,850 m (6,070 ft)

புவியியல்

மேற்கில் சூயசு வளைகுடாவையும், கிழக்கில் அக்காபா வளைகுடாவையும் பிரிக்கும் சினாய் தீபகற்பம்

சினாய் தீபகற்பத்திற்கு கிழக்கிலும், அரேபியத் தீபகற்பத்திற்கு மேற்கிலும் அக்காபா வளைகுடா அமைந்துள்ளது. மேற்கிலுள்ள சூயசு வளைகுடாவுடன் இது செங்கடலின் வடக்குப் பகுதியிலிருந்து நீட்சியாக இருக்கிறது. அக்காபா வளைகுடாவின் அதிகபட்ச ஆழம் 1850 மீட்டர் ஆகும். சூயசு வளைகுடா இதைக்காட்டிலும் அகலம் அதிகமானதாகவும் ஆனால் ஆழம் 100 மீட்டருக்கு குறைவாகவும் கொண்டுள்ளது.

அக்காபா வளைகுடாவின் அகலமான பகுதி 24 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாக விரிந்துள்ளது. எகிப்து, யோர்டான் நாடுகளை இசுரேல் சந்திக்கும் டிரான் நீரிணையில் இருந்து வடக்கு நோக்கி அது 160 கிலோமீட்டர் வரை நீண்டும் உள்ளது.

அக்காபா வளைகுடாவில் இடம்பெற்றுள்ள பெரிய அக்காபா நகரம்
எய்லாட்டில் நீருக்கடியில் அமைந்துள்ள உலகப் பவளப் பாறை ஆய்வகம்

செங்கடலின் கடலோரப் பகுதிகளைப் போலவே, அக்காபா வளைகுடாவும் நீரில் தலைகீழாக்க் குதித்து மூழ்குதலுக்குப் பயன்படும் உலகின் முதன்மையான தளங்களில் ஒன்றாகும்.

இந்த பகுதி குறிப்பாக பவளப் பாறைகள் மிகுந்த பகுதியாகவும் கடல்வாழ் பல்லுயிரி பெருக்கப் பகுதியாகவும் மற்றும் தற்செயலாக விபத்துக்குள்ளாகி தரைதட்டிய கப்பல் மற்றும் கப்பல்களின் பகுதி உயிரினங்களுக்கான வாழ்விடத்தை வழங்கும் பகுதியாகவும், உள்ளூர் நீரில் குதித்தல் தொழில் மூலம் சுற்றுலாத் தொழிற்துறையை வளர்க்கும் பகுதியாகவும் விளங்குகிறது.

நகரங்கள்

அக்காபா வளைகுடாவின் வடக்கு முனையில் மூன்று முக்கியமான நகரங்கள் அமைந்துள்ளன. தாபா எனப்படும் எகிப்திய நகரம், எய்லாட் எனப்படும் இசுரேலிய நகரம் மற்றும் யோர்டானிலுள்ள அக்காபா நகரம் ஆகியன இம்மூன்று நகரங்களாகும். இவை மூன்றும் வணிக முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்களாகும். இதமான காலநிலையை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதியாக பிரபலமான ஓய்வு விடுதிகள் இங்குள்ளன. மேலும் தெற்கில் அக்கல் என்ற சவுதி அரேபியாவின் மிகப்பெரிய நகரமும், சினாய் தீபகற்பத்தில் சார்ம் அல்-சே, தகாப் எனப்படும் எகிப்திய நகரங்களும் மேலும் சில முக்கிய மையங்களாகும். 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையாக 108,000 மக்களைக் கொண்ட நகரமாக அக்காபா நகரமும், இதையடுத்து 48000 மக்களைக் கொண்ட நகரமாக எய்லாட் நகரமும் விளங்கின.

பரப்பளவு

அக்காபா வளைகுடாவின் தெற்கு எல்லையை தென்மேற்காக ராசு அல் பசுமாவிலிருந்து ரெகுயின் தீவு (27 ° 57'வடக்கு 34 ° 36'கிழக்கு) வரையில் செல்லும் ஒரு கோடு என்று அனைத்துலக நீரியலமைவு வரைபட நிறுவனம் இவ்வளைகுடாவின் தெற்குப்பகுதியை வரையறுக்கிறது. டிரான் தீவு வழியாகச் செல்லும் இக்கோடு அதன்பிறகு மேற்கில் இணையாக (27 ° 54'வடக்கு) சினாய் தீபகற்பத்தின் கரையோரமாக செல்கிறது [1].

நிலவியல்

வடக்கு செங்கடல் சினாய் தீபகற்பத்தால் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது உருவான இரண்டு வளைகுடாக்களில் இதுவும் ஒன்றாகும். சூயசு வளைகுடா சினாய் தீபகற்பத்திற்கு மேற்கிலும், அக்காபா வளைகுடா இத்தீபகற்பத்திற்கு கிழக்கிலும் அமைகின்றன. நிலவியல்ரீதியாக சாக்கடலின் தென் முனையை உரசும் நிலப்பகுதியாக அக்காபா வளைகுடா கருதப்படுகிறது. நான்கு இடப்பக்க படுகை நகர்வு சரிவு துண்டுகளால் உருவான இலாட்டு ஆழம், அரகோனசு ஆழம், தாகர் ஆழம் என்ற உடைபடும் மூன்று வடிநிலங்களை இவ்வளைகுடா பெற்றுள்ளது. இத்துண்டுகளில் ஒன்று நகர்ந்த்தால் 1995 ஆம் ஆண்டு அக்காபா வளைகுடாவில் நிலநடுக்கம் தோன்றியது [2].

சுற்றுலா

எய்லாட்டின் பவளல் கடற்கரைக்கு அருகில் ஒரு தங்கும் விடுதி
செங்கடல் பவளப் பாறை மற்றும் கடல் மீன்

உலகிலுள்ள புகழ்பெற்ற நீரில் குதித்து மூழ்கும் தளங்களில் அக்காபா வளைகுடாவும் ஒன்றாகும். எய்லாட்டின் 11 கிலோமீட்டர் கடற்கரையோரத்தில் ஆண்டுக்கு 2,50,000 நீரில் குதித்தல்கள் நிகழ்கின்றன. இப்பரப்பின் சுற்றுலா வருவாயில் இது மட்டும் 10 சதவீதம் ஆகும்[3]. இந்த வளைகுடாவின் வடக்கு விளிம்புக்கு கிழக்கே வாடி ரம் நிலப்பரப்பு என்ற ஒரு பிரபலமான இடம் உள்ளது. இதைத்தவிர அரேபியாவின் லாரென்சு தலைமையில் நடைபெற்ற முதலாம் உலகப் போரின் ஒரு பகுதியான அக்காபா போர் நிகழந்த தளத்தின் அழிபாடுகள் பிற இடங்களாகும்.

ஓர்க்கா திமிங்கலம், திமிங்கிலம், ஓங்கில் எனப்படும் டால்பின்கள், ஆவுளியா எனப்படும் கடல் பசு, திமிங்கலச் சுறா போன்ற உயிரினங்கள் இவ்வளைகுடாவில் வாழ்கின்றன[4][5].

மேற்கோள்கள்

  1. "Limits of Oceans and Seas, 3rd edition". International Hydrographic Organization (1953). மூல முகவரியிலிருந்து 8 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 February 2010.
  2. Klinger, Yann; Rivera, Luis; Haessler, Henri; Maurin, Jean-Christophe (August 1999). "Active Faulting in the Gulf of Aqaba: New Knowledge from the Mw 7.3 Earthquake of 22 November 1995". Bulletin of the Seismological Society of America (Seismological Society of America) 89 (4): 1025–1036. Archived from the original on 25 January 2014. https://web.archive.org/web/20140125020244/http://www.ipgp.fr/~klinger/page_web/biblio/publication/klinger_BSSA99.pdf
  3. Artificial Reefs and Dive Tourism in Eilat, Israel. Dan Wilhelmsson, Marcus C. Öhman, Henrik Ståhl and Yechiam Shlesinger. Ambio, Vol. 27, No. 8, Building Capacity for Coastal Management (Dec., 1998), pp. 764-766 Published by: Allen Press on behalf of Royal Swedish Academy of Sciences Archived copy.. the United Nations Environment Programme. Retrieved on December 17. 2014
  4. Sciara di N.G., Smeenk C., Rudolph P., Addink M., Baldwin R., Cesario A., Costa M., Feingold D., Fumagalli M., Kerem D., Goffman O., Elasar M., Scheinin A., Hadar N.. 2014. Summary review of cetaceans of the Red Sea.
  5. "Dugongs in the Red Sea and Gulf of Aden". unep.ch. மூல முகவரியிலிருந்து 2016-01-28 அன்று பரணிடப்பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.