அகழ்பொறி
அகழ்பொறி அல்லது அகழ் எந்திரம் என்பது ஒரு வகைக் கட்டுமானப் பொறியாகும். கட்டுமானத் தேவைகளுக்காக நிலத்தைத் தோண்டுவதற்கே இது பெரும்பாலும் பயன்பட்டாலும், வேறு தேவைகளுக்கும் இவற்றைப் பயன்படுத்துவது உண்டு. சில்லுகள் அல்லது இரும்புத் தடங்கள் மீது பொருத்தப்பட்ட, முழு வட்டமாகச் சுற்றக்கூடிய மேடைபோன்ற அமைப்பு இருக்கும். இதனுடன் இணைக்கப்பட்ட கை போன்ற அமைப்பு ஒன்றின் நுனியில் நிலத்தைத் தோண்டுவதற்குரிய அலகுடன் கூடிய குழிந்த பாத்திரம் போன்ற அமைப்பு இருக்கும்.


பயன்பாடுகள்
அகழ்பொறிகள் கட்டுமானத்துறையில் பல தேவைகளுக்குப் பயன்படுகின்றன. குழாய்கள் அமைத்தல், அத்திவாரம் இடுதல் போன்றவற்றுக்கான குழிகளை வெட்டுவதற்கும், கட்டிடப் பொருட்களை இடத்துக்கிடம் காவிச் செல்லவும், அமைப்புக்களைத் தகர்ப்பதற்கும், நிலத்தை மட்டப்படுத்துவதற்கும், பாரமான பொருட்களை உயர்த்துவதற்கும், திறந்த அகழ்வுச் சுரங்க அமைப்பிலும், ஆறுகளைத் தூர்வாரும் வேலைகளிலும் அகழ்பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன.