அகத்தியம்
அகத்தியம், மிகப் பழைமையான தமிழ் இலக்கண நூல் எனக் கருத்தப்படுகின்றது. அகத்தியர் என்பவர் இயற்றிய நூலாதலால் இது அகத்தியம் என்று வழங்கப்படுகின்றது. முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச் சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இது, பிற்கால இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாக நம்பப்படுகின்றது. தற்காலத்தில் அகத்தியத்தின் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே ஆகும்.
- அகத்தியர் இயற்றிய நூல் அகத்தியம். முச்சங்க வரலாற்றில் வரும் நூல்
- அகத்தியனார் தொல்காப்பியருக்குப் பிந்தியவர்தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவருள் பேராசிரியர்,இளம்பூரணர் இருவரும் குறிப்பிடத்தக்கோர்.இவர் இருவரும் அகத்தியரின் மாணாக்கர் தொல்காப்பியர் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.தொல்காப்பியம் முழுமையாக கிடைத்துள்ளது. அதில் தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்னும் குறிப்பு எங்குமில்லை.
சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-ஜூலை-2008.
- நூற்பாக்கள் மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.
அகத்தியனார் செய்த அகத்திய நூற்பா
அகத்தியம் 12000 நூற்பாக்களைக் கொண்டிருந்தது.எழுத்து,சொல்,பொருள், யாப்பு, அரசியல், அமைச்சியல்,பார்ப்பனவியல்,சோதிடவியல் முதலான இயல்களை அகத்தியம் கொண்டிருந்தது. சான்று:முனைவர் பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,NCBH வெளியீடு,சென்னை-98,முதற்பதிப்பு-ஜூலை-2008.
இந்த நூற்பாக்கள்
- என்றார் அகத்தியனார்
- என்பது அகத்தியம்
என்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன.
மொழிமுதல்
பெயரினும் வினையினும் பொழிமுதல் அடங்கும் [1]
- நூற்பா விளக்கம்
- பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும் இரண்டில் மொழியானது அடக்கம்
உரை இயல்பு
வயிர ஊசியும் மயன்வினை இரும்பும்
செயிரறு பொலிவினைச் செம்மைச்செய் ஆணியும்
தமக்கமை கருவியும் தாமமை பவைபோல்
உரைத்திறம் உணர்த்தலும் உரையது தொழிலே [2]
- நூற்பா விளக்கம்
- கண்ணாடியை அறுக்கும் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும், செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும்.
ஒருமொழி
பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே
அடிசில் பொத்தகம் சேனை அமைந்த
கதவம் மாலை கம்பலம் அனைய [3]
- நூற்பா விளக்கம்
சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும் அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.
தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்
கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குடபால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் [4]
- நூற்பா விளக்கம்
இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.
திரிசொல் வழங்கும் நிலம்
செந்தமிழ் நிலம்
- சேரர் சோழர் பாண்டியர் என முடியுடை மூவரும் (3)
- இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் (10)
- உடனிருப்பு இருவரும் (2) படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்
ஆக மொத்தம் 15 நாடுகள்
வேற்றுமை 7 என்பது 8 ஆனது
ஏழியன் முறைய எதிர்முக வேற்றுமை
வேறுஎன விளம்பான் பெயரது விகாரமென்று
ஓதிய புலவனும் உளன்ஒரு வகையான்
இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் [5]
- நூற்பா விளக்கம்
- தமிழில் வேற்றுமை 7 என்று ஒரு இலக்கணப் புலவன் ஓதினான். எட்டாம் வேற்றுமையைப் பெயர்(எழுவாய்) வேற்றுமையின் திரிபு என அவன் கொண்டான். இது ஒரு வகை. இந்திரன் என்பவன் விளிவேற்றுமையை எட்டாம் வேற்றுமை என்றான்.
முதல் வேற்றுமை
வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்
பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே [6]
- நூற்பா விளக்கம்
- முதல் வேற்றுமை பயனிலை கொள்ளும் வகை இதில் கூறப்பட்டுள்ளது.
வினை | கந்தன் வந்தான் |
உரைத்தல் | கந்தன் சொன்னான் |
வினாவிற்கு ஏற்றல் | கந்தன் யார் |
பெயர்கொள வருதல் | கந்தன் நல்லன் |
மூன்றாம் வேற்றுமை
ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்
சாலும் மூன்றாம் வேற்றுமைத் தனுவே [7]
- நூற்பா விளக்கம்
- வேற்றுமை உருபை இவர் வேற்றுமைத் தனு என்கிறார். ஆல், ஆன், ஒடு, ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமைத் தனு.
ஆறாம் வேற்றுமை
ஆறன் உருபே அது ஆது அவ்வும்
வேறொன்று உரியதைத் தனக்குரிய தையென
இருபாற் கிழமையின் மருவுற வருமே
ஐம்பால் உரிமையும் அதன்தற் கிழமை [8]
- நூற்பா விளக்கம்
- அது, ஆது, உ - ஆகியவை ஆறாம்வேற்றுமை உருபுகள். வேறொன்றுக்கு உரியது, தனக்கு உரியது என இரு பாங்கில் வரும். ஆண்பால், பெண்பார், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பாலிலும் பொருந்தி வரும்.
முற்றின்பொழி
மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்
முற்றி நிற்பன முற்றின் மொழியே [9]
- நூற்பா விளக்கம்
- வேறு எந்தச் சொல்லும் வேண்டாது தானே முற்றிநிற்பது முற்றின்மொழி
- செய்தனென் (யான் என்பது இல்லாமலேயே அதனை உணர்த்தும்)
- செய்தனை (நீ)
- செய்தனன் (அவன்)
- செய்தனள் (அவள்)
- செய்தனர் (அவர்)
- செய்தது (அது)
- செய்தன (அவை)
மாரைக்கிளவி
காலமொடு கருத வரினும் மாரை
மேலைக் கிளவியொடு வேறுபாடு இன்றே [10]
- நூற்பா விளக்கம்
- செய்ம்மார் வந்தார் (இதில் செய்ம்மார் என்பது எதிர்காலத்தை மட்டும் உணர்த்தும் என்பது அகத்தியனார் கருத்து)
முற்றுச்சொல்
முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்
முற்றுச்சொல் என்னும் முறைமையில் திரியா [11]
- நூற்பா விளக்கம்
- உண்கு வந்தேன் (உண்டேன் வந்தேன்)
- உண்கும் வந்தேம் (உண்டோம் வந்தோம்)
பெயரெச்சம்
காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
பெயர்கொள் ளும்மது பெயரெச் சம்மே [12]
- நூற்பா விளக்கம்
- செய்த பொருள் (இதில் இறந்தகாலமும், செய்தல் வினையும் தோன்றின. செய்த்து அவனா, அவளா, அவரா எனத் தெரியவில்லை. எனவே பால் தோன்றவில்லை. இவ்வாறு வருவது பெயரெச்சம்)
- செய்கின்ற பணி, செய்யும் கை என்றெல்லாம் பிற காலத்தோடும், பெயரோடும் ஒட்டிக்கோள்க.
வினையெச்சம்
காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது
வினைகொள் ளும்மது வினையெச் சம்மே [13]
- நூற்பா விளக்கம்
- செய்து வந்தான்
முற்றுமொழி
எனைத்துமுற்று அடுக்கினும் அனைத்தும்ஒரு பொருள்மேல்
நினைத்துக்கொள நிகழும் நிகழ்த்திய முற்றே
வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலபல அடுக்கினும் முற்றுமொழிப் படியே [14]
- நூற்பா விளக்கம்
- நினைத்தான் வந்தான் அமர்ந்தான் கந்தன் (பல முற்றுகள் அடுக்கி வந்தன)
- நினைத்து வந்து அமர்ந்து பேசினான் (வினையெச்சங்கள் அடுக்கி வந்தன)
- நல்ல சிறிய அழகிய பறவை (பெயரெச்சங்கள் அடுக்கி வந்தன)
பால் மயக்கம்
கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி
நின்றோர் வருவோர் என்றுசொல் நிகழக்
காணா ஐயமும் பல்லோர் படர்க்கை [15]
- நூற்பா விளக்கம்
- மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா (மூர்க்கன் என்னும் உயர்திணையும், முதலை என்னும் அஃறிணையும் இணைந்து வந்து விடா என்னும் வடா என்னும் பல்லோர் படர்க்குயில் முடிவுற்றது)
- ஊன் துவை கறி சோறு உண்டு வருந்தும் தொழில் [16] (கடிக்கும் ஊன்,நக்கும் துவையல். கொறிக்கும் கறி, தின்னும் சோறு ஆகியவை உண்ணல் என்னும் பொதுவினையைக் கொண்டு முடிந்தன)
முதுமறை நெறி
உலக வழக்கமும் ஒருமுக் காலமும்
நிலைபெற உணர்தரு முதுமறை நெறியான் [17]
- நூற்பா விளக்கம்
- உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி
அடுக்குத்தொடர்
அசைநிலை இரண்டினும் பொருண்மொழி மூன்றினும்
இசைநிறை நான்கினும் ஒருமொழி தொடரும் [18]
- நூற்பா விளக்கம்
- ஒக்கும் ஒக்கும் (அசைநிலை)
- போ போ போ (பொருண்மொழி)
- பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ (இசைநிறை)
அகத்தியரின் மாணவர்கள்
|
அடிக்குறிப்பு
- நன்னூல் நூற்பா 130 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 258 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 259 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 272 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 290 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 294 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 296 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 299 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 322 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 328 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 332 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 339 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 341 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 354 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 377 மயிலைநாதர் உரை மேற்கோள்
- புறநானூறு 14
- நன்னூல் நூற்பா 381 மயிலைநாதர் உரை மேற்கோள்
- நன்னூல் நூற்பா 394 மயிலைநாதர் உரை மேற்கோள்
துணைநூல்கள்
- நன்னூல் மூலமும் மயிலைநாதர் உரையும், டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்புகளுடன், அவரது மகன் கலியாண சுந்தரையர் பதிப்பு, 1946
- கழக தமிழ் அகராதி நூல்.
- தமிழ் இணையப் பல்கலைக் கழக இணையப் பக்கம்