ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா

ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா, பொதுவாக கலாசேத்திரா என்றழைக்கப்படுகின்ற ஒரு கலாச்சார நிறுவனமாகும்.

ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா
நிறுவப்பட்டது9 நவம்பர் 1988[1]
அமைவிடம்குவகாத்தி, அசாம், இந்தியா

பெயர்க்காரணம்

அந்நிறுவனம் அசாம் மாநிலத்தில் குவஹாத்தியில் உள்ள பஞ்சாபாரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அதற்கு இடைக்கால கவிஞரும், நாடக ஆசிரியரும், சீர்திருத்தவாதியுமான ஸ்ரீமந்த சங்கர்தேவ் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]

பிரிவுகள்

இந்த கவின்கலைக் கல்லூரியில் கலாச்சார அருங்காட்சியகம், நூலகம் மற்றும் கலாச்சார பொருட்களைப் பாதுகாப்பதற்கான வசதிகள் உள்ளன. இங்கு குழந்தைகள் பூங்காவும் உள்ளது. கலாச்சார நிகழ்வுகளும் இங்கு நிகழ்த்தப்படுவதற்கான பல்வேறு வசதிகள் உள்ளன. வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார ஒருங்கிணைப்பு நிறுவனம் என்ற சிறப்பைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், குவஹாத்தியில் அமைந்துள்ள ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும் கருதப்படுகிறது. 1990 களில் கட்டப்பட்ட, அசாம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த கலையம்சங்கள் இங்கு காணப்படுகின்றன. பரந்த கவின் கலைக்கல்லூரியின் வளாகத்திற்குள் உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், எம்போரியங்கள் மற்றும் திறந்தவெளிக் கூடங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீமந்த சங்கர்தேவ் கலாக்ஷேத்திரா

நிர்வாகம்

இந்த கலாசேத்திரா அசாம் அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளைக் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது, அசாம் சிவில் பணி அல்லது இந்திய நிர்வாகப்பணியைச் சேர்ந்த அலுவலர் இதன் தலைவராக இருப்பார்.

காட்சிப்பொருள்கள்

மத்திய அருங்காட்சியகத்தில் அசாம் மாநிலத்தின் பல்வேறு இனத்தவர்கள் பயன்படுத்தும் கலைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளாகத்தில் மாநிலத்தின் பல கலாச்சார பொருட்களும் உள்ளன. திறந்தவெளி அரங்கில் 2,000 பார்வையாளர்களுக்கான வசதி உள்ளது. இந்த வளாகத்தில் பலவிதமான கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நாடக அரங்கில் பாரம்பரிய நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கலாசேத்திராவில் உள்ள கலைஞர்கள் கிராமம் எனப்படுகின்ற வளாகத்தில் அசாமின் கிராம சமுதாயத்தை பிரதிபலிக்கும் வகையிலான கூறுகள் உள்ளன. சாகித்ய பவன் என்பது கலாசேத்திராவில் உள்ள நூலகமாகும், இந்த நூலகமானது அரிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டு அமைந்துள்ளது. இது இப்பகுதியின் இலக்கியங்களின் களஞ்சியமாகத் திகழ்கின்றது. கலை வளாகத்தின் மற்றொரு பகுதியாக லலித் கலா பவன் அமைந்துள்ளது. அந்த மையம் கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த கண்காட்சிகள் மற்றும் பட்டறைகள் நடத்த பயன்படுத்தப்படுகிறது. கலாசேத்திராவின் பிரமாண்டமான வளாகத்தின் ஒரு பகுதியாகும் ஒரு பாரம்பரிய பூங்கா உள்ளது. இப்போது சுற்றுலாப் பயணிகள் பூங்காவிற்குள் பயணித்து சுற்றிப் பார்க்க ஒரு கேபிள் கார் வசதி உள்ளது. ஷில்லாங் பீடபூமியின் மலைகளின் அழகிய காட்சியை கலாசேத்திராவிலிருந்துகண்டு களிக்கலாம். அசாம் கலாச்சாரத்தின் கூறுகளைஇந்த அருங்காட்சியகம் வழங்குகிறது. இங்குள்ள பூபன் ஹசாரிகா அருங்காட்சியகம் மற்றொரு பிரிவாக, அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.[3]

கலாசேத்திராவில் அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அஹோம் ஆம்பிதியேட்டரான ரங் கர் மாதிரி உள்ளது. மத்திய அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் அருகே உள்ளது. மத்திய அருங்காட்சியகத்தில் அசாமிய கலாச்சாரத்தின் சில பாரம்பரிய கலைப்பொருள்களும், பிற கலைப்பொருட்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

2000 பார்வையாளர்கள் தத்தம் இருக்கைகளிலிருந்து காசி ஹில்ஸின் மலைத்தொடரை ரசித்துக்கொண்டே பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளைக் காணும் வகையில்   திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கலாசேத்திராவின் பிரிவான ஒரு கலை கிராமத்தில் அசாமின் கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் மற்றும் மாதிரி குடிசைகள் உயிரோட்டமான வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல் காரணமாக கிராம வாழ்க்கை முறையைப் பற்றி அறியாதவர்களுக்கு இதன்மூலம் பலவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சாகித்ய பவன் என்பது அஸ்ஸாமிய நூல்கள் மற்றும் இலக்கியங்களின் காப்பகமாகும், மேலும் அசாம் அல்லது அது தொடர்பான வடகிழக்கு மாநிலங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கின்ற அறிஞர்களுக்கு உதவியாக இது உள்ளது. கலைகள் மற்றும் சிற்பங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த காட்சிக் கூடத்தையை லலித் கலா பவன் வழங்குகிறது. பாரம்பரிய பார்க் வழியாக நடை மேற்கொள்ளும்போது மனநிறைவையும் திருப்தியையும் பெறமுடியும். களக்ஷேத்திரம் பெரும்பாலும் நாடகவியல், சினிமா மற்றும் பிற நிகழ்ச்சிகள் மற்றும் காட்சி கலைகளின் பல்வேறு பட்டறைகளை நடத்துகிறது. மையத்தின் சுற்றியுள்ள சுவர்களில் சுவரோவியங்கள் உள்ளன. இந்த சுவரோவியங்கள் பல்வேறு போர் நிகழ்வுகளையும், பிஹு நடனங்களையும் மற்றும் அசாம் தொடர்பான பிற கலைக்கூறுகளையும் சித்தரிக்கின்றன.

புகைப்படத்தொகுப்பு

குறிப்புகள்

  1. "Srimanta Sankardev Kalakshetra". Guwahatitimes.com (2011-09-24). மூல முகவரியிலிருந்து 2 July 2012 அன்று பரணிடப்பட்டது.
  2. "Srimanta Sankardev Kalakshetra India Tourist Information". Touristlink.com.
  3. "Srimanta Sankaradeva Kalakshetra". Kalakshetra-assam.gov.in.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.