பாளையக்காரர்கள்
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529-க்கும், 1564-க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரது அமைச்சர் அரியநாதருடன் கலந்தாலோசித்து 1529ல் பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்.[1]விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயக்கர் நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார். இந்த பாளையக்காரர்கள், நாயக்கர்களுக்கு தேவை ஏற்படும் போது இராணுவம் மற்றும் இதர உதவிகளை முழு மனதுடன் செய்தனர். பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து, தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும், அடுத்த மூன்றில் ஒரு பங்கினை இராணுவ செலவிற்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் சொந்த செலவிற்கு வைத்துக்கொண்டனர்.
பாளையங்கள்
முதன்மைக் கட்டுரை:பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)
"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும்.[2]
கடமையும், அதிகாரமும்
மண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.
பாளையக்காரர்களின் நிர்வாகம்
தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது. பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய தளவாய் ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத் தானாபதி ஒருவரும் இருந்தனர்.
உரிமைகள்
பாளையங்களின் பாதுகாப்பு, நிருவாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன. படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர். தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.
பாளையக்காரரின் பங்களிப்புகள்
முழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக நின்று போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள். அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு பல சந்தர்ப்பங்களில் முக்கியமானதாக இருந்ததுண்டு. பிற்காலங்களில் மன்னர்கள் அந்நியர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்ற வரலாறுகளும் உண்டு.
மேற்கோள்கள்
- எட்டாம் வகுப்பு , பருவம் - 1 , தொகுதி - 3 தமிழ்நாடு அரசின் சமூக அறிவியல் பாடப்புத்தகம்
- டாக்டர் ஜே. தியாகராஜன் எழுதிய “தமிழக வரலாறு” பக்கம்-61.