நேர்மின்னி

நேர்மின்னி (proton, புரோத்தன்) என்பது அணுக்கருவின் உள்ளே இருக்கும் நேர்மின்மம் கொண்ட ஓர் அணுக்கூறான துகள் ஆகும். நேர்மின்னியின் மின்ம அளவானது 1.602 × 10−19 C கூலாம் ஆகும். இதுவே ஓர் அடிப்படை மின்ம அலகும் ஆகும். இதன் திணிவு (பொருண்மை) 1.672 621 71(29) × 10−27 கிலோ கிராம் (kg) ஆகும். இது ஓர் எதிர்மின்னியின் திணிவைக் காட்டிலும் 1836 மடங்கு அதிகம் ஆகும். நேர்மின்னி ஒரு உறுதியான அணுத்துகள் (துணிக்கை) எனக் செயல்முறை ஆய்வுகள் காட்டுகின்றன. இதன் அரைவாழ்வுக் காலத்தின் மிகக் குறைந்த எல்லை ஏறத்தாழ 1035 ஆண்டுகள் எனக் கணித்துள்ளனர்[3]

நேர்மின்னி (புரோத்தன்)
வகைப்பாடு

(படத்தில்) நேர்மின்னியின் குவார்க்கு அமைப்பு
அணுவடித்துகள்
ஃபெர்மியான்
ஹாடுரான்
பாரியான்
அணுக்கருனி
நேர்மின்னி (புரோத்தன்)
பண்புகள் [1][2]
திணிவு (பொருண்மை): 1.672 621 71(29) × 10−27
கிலோ.கி (kg)
938.272 029(80) MeV/c2
1.007 276 466 88(13) amu
மின்மம்: 1.602 176 53(14) × 10−19 C
ஆரம்: about 0.8×10−15 m
தற்சுழல்: ½
குவார்க்
கட்டமைப்பு:
1 கீழ் குவார்க்,
2 மேல் குவார்க்

எல்லா அணுக்களிலும் இந்த நேர்மின்னியானது பல்வேறு எண்ணிக்கைகளில் அணுக் கருவினுள் இருக்கும். ஹைட்ரஜன் அணுவில் ஒரே ஒரு நேர்மின்னிதான் அணுக்கருவில் இருக்கும். ஓர் அணுவின் கருவினுள் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதே அவ் அணுவின் அணுவெண் எனப்படுவது. இருவேறு அணுக்கள் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் கொண்டு இருக்கலாகாது. எனவே ஒரு பொருளானது மற்றொரு பொருளில் இருந்து வேறுபடுவது என்பது அடிப்படையில் இந்த நேர்மின்னி எண்ணிக்கையில்தான் அடங்கும். ஒரு அணுவானது தங்க அணுவா, வெள்ளி அணுவா, கரிம அணுவா என்பதெல்லாம், அவ்வணுவில் எத்தனை நேர்மின்னிகள் இருக்கின்றன என்பதைப் பொருத்தே அமையும்.

எந்த ஓர் அணுவிலும், அதிலிருக்கும் ஒவ்வொரு நேர்மின்னிக்கும் எதிராக ஒரு எதிர்மின்னி இருப்பது அடிப்படையான தேவை ஆகும். ஏனெனில் அணுக்கள் தன் இயல்பான நிலையில் மின்மம் அற்ற ஒன்றாகும். நேர்மின்னியின் நேர்மின்மமானது எதிர்மின்னியின் எதிர்மின்மத்தால் முழு ஈடாக்கி மின்மம் அற்று இருக்கும். உராய்வு அல்லது வேதியியல் வினை முதலிய எக் காரணத்தினாலும் எதிர்மின்னிகள் ஓர் அணுவில் இருந்து பிரிய நேர்ந்தால், அவ் அணுவானது மின்மமாக்கப்படும்.

நேர்மின்னி அல்லது எதிர்மின்னியின் எண்ணிக்கையைக் கொண்டு இயற்கையில் 94 வகையான வெவ்வேறு அணுக்கள் உள்ளனவென்று கண்டுள்ளனர். இவை தவிர, இன்று செயற்கையாகவும் மிகக் குறுகிய காலமே சேர்ந்திருக்கும் செயற்கை அணுக்களையும் அறிவியல் அறிஞர்கள் ஆக்கியுள்ளனர்.

வரலாறு

ஐஸோப்ரோபனால் முகிலறையில் நேர்மின்னியைக் கண்டறிதல்.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு அவர்கள் 1918ல் நேர்மின்னியைக் கண்டுபிடித்ததாகக் கொள்வர். இவர் நைட்ரஜன் வளிமத்தூடே ஆல்ஃவா கதிர்களைச் செலுத்தியபோது, வெளியேறிய கதிரில் ஹைட்ரஜன் அணுக்கான சிறப்புப் பண்புகள் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து நைட்ரஜன் அணுவில் ஹைட்ரஜன் அணுவின் கரு இருத்தல் வேண்டும் என உய்த்துணர்ந்தார். எனவே, "ஹைட்ரஜன் அணுவின் அணுவெண்ணாகிய 1 (ஒன்று) என்பது ஹைட்ரஜன் அணுவில் உள்ள நேர்மின்னியின் எண்ணிக்கை, எனவே அது ஓர் அடிப்படைத் துகள்" என்றார்.

அடிக்குறிப்புகள்

  1. CODATA values for நேர்மின்னிப் பொருண்மை (திணிவு), நேர்மின்னிப் பொருண்மை-ஆற்றல் ஈடு
  2. Povh, Rith, Scholz, Zetche, Particles and Nuclei, 1999, ISBN 3-540-43823-8
  3. சில கோட்பாடுகள் நேர்மின்னிகள் சிதைவடையக் கூடியன எனக் கூறுகின்றன

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.