நிலக்கரி அமைச்சகம், இந்தியா
நிலக்கரி அமைச்சகம் (Ministry of Coal) என்பது நாட்டின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி வளங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். நாட்டின் நிலக்கரி இருப்பிட ஆய்வையும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கையிருப்பு மேம்பாட்டையும், இதர சுற்றுச்சூழல் முக்கியத்துவ விசயங்களைக் கையாளுகிறது. இவ்வமைச்சகத்தின் கீழே நாட்டின் நிலக்கரிச் சுரங்கள் செயல்படுகின்றன. அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனம் மூலமாகவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் போன்ற துணை நிறுவனங்கள் மூலமாகவும் விலை நிர்ணயத்தையும் தீர்மானிக்கிறது. மேலும் ஆந்திர மாநிலத்திலுள்ள சிங்கனேரி நிலக்கரி நிறுவனத்தின் 49% பங்குகளை இவ்வமைச்சகமும், மீதி 51% பங்குகளை அம்மாநில அரசும் கொண்டுள்ளன.[1]
பணிகள்
நாட்டின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியின் கையிருப்பை இவ்வமைச்சகமே தீர்மானிக்கிறது. இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதி 1961ன் படி இவ்வமைச்சகத்தின் துறைகள் உருவாக்கப்பட்டன. அதன் படி கீழ்கண்ட பணிகளை செய்கிறது.
- கற்கரி, கல்லற்ற கரி மற்றும் பழுப்பு நிலக்கரிப் படிமங்களை இந்தியாவில் ஆராய்வது மற்றும் வளப்படுத்தல்
- நிலக்கரியின் தயாரிப்பு, விநியோகம், பகிர்வு மற்றும் விலை ஆகியவற்றை முடிவு செய்தல்
- எஃகு துறை பணிகள் தவிர மற்ற கரி சுத்திகரிப்பு பணிகள்
- நிலக்கரியிலிருந்து குறைந்த வெப்பநிலை கரி மற்றும் செயற்கை எண்ணெய் ஆகியவற்றை தயாரித்தல்
- பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திச் சட்டம் 1974 (1974ன் 28)படி நிலக்கரிச் சுரங்கங்களை நிர்வகித்தல்
- நிலக்கரிச் சுரங்கங்களின் சேமநல நிதி மற்றும் பொதுநலன் ஆகியவற்றையும் கவனித்தல்
- சுரங்கங்கள் விதி 1952 (1952ன் 32)ன் படி விநியோகிக்கப்பட்ட நிலக்கரிக்கு சுங்கவரி வசுலித்தல் மற்றும் மீட்பு நிதியையும் நிர்வகித்தல்
- பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திச் சட்டம் 1957 (1957ன் 20)ன் படி நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளை நிர்வகித்தல்