டயோனிசசு
டயோனிசசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். திராட்சை அறுவடை, திராட்சை ரசம், செழிப்பு, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.[1][2] கிரேக்கக் கடவுள்களில் இவர் ஒருவரே ஒரு மானுடப் பெண்ணிற்குப் (செமிலி) பிறந்த குழந்தை ஆவார். இவர் ரோமானியாவில் பாச்சசு என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
டயோனிசசு | |
---|---|
![]() டயோனிசசு | |
இடம் | ஒலிம்பிய மலை |
துணை | அரியாட்னே |
பெற்றோர்கள் | சியுசு மற்றும் செமிலி |
சகோதரன்/சகோதரி | சியுசின் அனைத்துப் பிள்ளைகள் |
குழந்தைகள் | பிரியாபசு, ஐமென், தவோசு, இசுடாபிலசு, ஏனோபியன், கோமசு, பிதோனசு |
பிறப்பு
செமிலியின் வயிற்றில் வளர்வது சியுசின் குழந்தை என்று அறிந்த எரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சியுசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். சியுசு தடுக்க முயன்றும் செமிலி கட்டாயப்படுத்தியதால் அவர் தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சியுசு. அந்த குழந்தையே டயோனிசசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனிசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் ஒரு கடவுளாக வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
மற்றொரு கதையில் எரா டைட்டன்களை அனுப்பி சியுசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் காப்பாற்றிய சியுசு அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.
திருமணம்
மினோசு மற்றும் பாசிபே ஆகியோரின் மகள் அரியாட்னே. அவர் அரக்கன் மினோச்சரை கொல்வதற்கு வீரன் தீசியசுவிற்கு உதவினார். பிறகு தீசியசு அவளை நசோசு தீவில் விட்டு பிரிந்து சென்று விட்டான். பிறகு அந்தத் தீவிற்கு வந்த டயோனிசசு அரியாட்னேவை மணந்துகொண்டார்.