சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்

சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் என்பது கிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மேட்டுநிலம் ஆகும். இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பகுதியையும், மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டம் மற்றும் ஒரிஸ்ஸா, பீகார், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்குகின்றது. சிந்து-கங்கைச் சமவெளி இம் மேட்டுநிலத்துக்கு வடக்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளது. மகாநதி ஆற்றின் நீரேந்து பகுதி தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1]

இந்தியாவில் சோட்டா நாக்பூர் மேட்டு நிலம்
சோட்டா நாக்பூர் மேட்டு நிலம்


லோத் அருவி போன்ற பல அழகிய அருவிகள் இப் பகுதியில் உள்ளன. இங்கே காணப்படும் நிலக்கரிப் படிவுகள் தாமோதர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு உதவியாக உள்ளது. சோட்டா நாக்பூர் மூன்று சிறிய மேட்டுநிலங்களால் ஆனது. இவை ராஞ்சி, ஹசாரிபாக், கோடர்மா என்பனவாகும். 700 மீட்டர் உயரத்தில் உள்ள ராஞ்சி மேட்டுநிலமே இவற்றுள் பெரியது. சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தின் மொத்தப் பரப்பளவு சுமார் 65,000 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

இம் மேட்டுநிலத்தின் பெரும்பகுதி மலைக்காடாக உள்ளது. இது சோட்டா நாக்பூர் வறண்ட இலையுதிர் காட்டுச் சூழலியல் பகுதிக்குள் அடங்குகிறது. இது வங்காளப் புலிகள், ஆசிய யானைகள் என்பவற்றுக்கான மிகக் குறைவாக எஞ்சியிருக்கும் புகலிடங்களுள் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

  1. Chota Nagpur PLATEAU, INDIA
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.