சுவர்ணலதா (பின்னணிப் பாடகி)

சுவர்ணலதா (Swarnalatha, இறப்பு: செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

சொர்ணலதா
ஸ்வர்ணலதா
பின்னணித் தகவல்கள்
பிறப்பு29 ஏப்ரல் 1973
பாலக்காடு, கேரளா, இந்தியா
இறப்புசெப்டம்பர் 12, 2010 (அகவை 37)
சென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்பின்னணிப்பாடகி, கர்நாடக இசை
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்1987–2010

கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார்.[1][2] சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உயர் கல்வியையும் கற்றார்.

பின்னணிப் பாடகியாக

சொர்ணலதா 1987 ஆம் ஆண்டில் எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து உயர்ந்த மண் படத்தில் பி. சுசீலா பாடிய பால் போலவே என்கிற பாடலைப் பாடிக்காண்பித்தார். சொர்ணலதாவின் குரலில் தனித்துவம் தெரிய அதே ஆண்டில் மு. கருணாநிதி கதை வசனத்தில் வெளியான நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்னும் பாடலை யேசுதாசுடன் விசுவநாதன் பாடவைத்தார். அப்பொழுது சொர்ணலதாவிற்கு 14வயது மட்டுமே. பின் இவர் 1988இல் வெளியான குருசிஷ்யன் படத்தில் உத்தம புத்திரி நானு என்னும் பாடலை இளையராஜாவின் இசையமைப்பில் பாடினார்.

பின் தளபதி படத்தில் ’ராக்கம்மா கையத் தட்டு’, சத்திரியன் படத்தில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’, கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’, சின்னத்தம்பி படத்தில் ‘போவோமா ஊர்கோலம், நீ எங்கே’, என் ராசாவின் மனசிலே படத்தில் ‘குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே’ போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.

சிறப்புக் குறிப்பு

புகழ்பெற்ற இந்திப்படமான "மொகலே ஆசம்" படம் தமிழில் "அனார்கலி" என்ற பெயரில் வெளியானது. இந்திப்படத்தில் நவ்ஷாத் அலியின் இசையில் புகழ்பெற்றிருந்த கவாலி என்ற போட்டிப் பாடலை ஷம்ஷாத் பேகமும் லதாமங்கேஷ்கரும் பாடியிருந்தார்கள். இப்போட்டிப் பாடலை இரு வெவ்வேறு குரல்களிலும் சொர்ணலதா, சங்கர் கணேசின் இசையமைப்பில் பாடினார். சொர்ணலதாவின் திறமையை நவ்ஷாத் அலி பாராட்டினார். அத்துடன், தன்னுடைய மோதிரத்தையும் சொர்ணலதாவுக்கு விருதுபோல வழங்கினார்.

விருதுகள்

தேசிய விருது

  • 1994 - இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி

தமிழக அரசு விருது

  • 1991 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
  • 1994 - தமிழ்நாட்டின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான விருது - படம் : கருத்தம்மா , பாடல் : போறாளே பொன்னுத்தாயி

தமிழக அரசு சிறப்பு விருது

சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

  • 1991 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : சின்னத் தம்பி , பாடல் : போவோமா ஊர்வோலம்
  • 1995 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : காதலன் , பாடல் : முக்காலா முக்காபலா
  • 1996 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : இந்தியன் , பாடல் : அக்கடானு நாங்க , மாயா மச்சிந்ரா
  • 1999 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : முதல்வன் , பாடல் : உழுந்து விதைக்கையில
  • 2000 - சிறந்த பின்னணிப்பாடகிக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - படம் : அலைபாயுதே , பாடல் : எனனோ ஒருவன் வாசிக்கிறான்

ஃபிலிம்பேர் விருதுகள்

மறைவு

நுரையீரல் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவர்ணலதா 2010, செப்டம்பர் 12 தனது 37வது அகவையில் காலமானார்[3].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.