சங்கிலித்தோப்பு

சங்கிலித் தோப்பு அல்லது பூதத்தம்பி வளைவு[1] என்பது இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.

சங்கிலித்தோப்பு
சங்கிலித்தோப்பு வளைவின் ஒரு தோற்றம்
மாற்றுப் பெயர்கள்பூதத்தம்பி வளைவு
பொதுவான தகவல்கள்
வகைTriumphal Arch
இடம்நல்லூர், யாழ்ப்பாணம்
தற்போதுள்ள சங்கிலித்தோப்பிலிருந்து தள்ளிக் காணப்படும் இன்னுமொரு சங்கிலித் தோப்பின் அத்திவார எச்சம்

அமைவிடம்

சங்கிலித் தோப்பு, யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது. முற் குறிப்பிட்ட சங்கிலித்தோப்பு வளைவும், இவ் வீதியை அண்டியே உள்ளது. யமுனா ஏரி, வீதியிலிருந்து சற்றுத் தொலைவில், பிற்காலத்தில் உருவான குடியேற்றப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதைக் காணலாம். வீதிக்கு அடுத்த பக்கத்தில்,சங்கிலித்தோப்புக்கு எதிரே இன்னொரு அரசத் தொடர்புள்ள இடமான, மந்திரிமனை உள்ளது. இதற்கு அருகிலேயே, யாழ்ப்பாண அரசர்களால் அமைக்கப்பட்ட சட்டநாதர் சிவன் கோயிலும் காணப்படுகின்றது. இது தவிர யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் கந்தசாமி கோயில் அமைந்திருந்த இடமும், இவ்விடத்துக்கு அருகிலேயே உள்ளது.

பிற்காலப் பயன்பாடு

போத்துக்கீசர் 1620 ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தபின்னர், அதன் தலைநகரத்தை யாழ்ப்பாண நகரத்துக்கு மாற்றினர். நல்லூரிலிருந்த யாழ்ப்பாணத்து அரசர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கைக்கு மாறியபின்னர், சங்கிலித்தோப்புப் பகுதியில், அவர்களுடைய சமயக் கல்விக்கான நிறுவனம் ஒன்று அமைக்கப் பட்டிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. தற்போது இங்கே காணப்படும் வாயில் வளைவு, இத்தகைய கட்டிடங்களுள் ஒன்றின் பகுதியாகவே இருக்கக்கூடும். யாழ்ப்பாணத்து அரசர்களின் பரம்பரையைச் சேர்ந்த சில குடும்பங்களும் பிற்காலத்தில் இங்கே வாழ்ந்ததாகத் தெரிகிறது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "Poothathamby Arch (Sangili Toppu) in Jaffna". பார்த்த நாள் 6 சூலை 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.