மந்திரிமனை

மந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாக இருந்திருக்கமுடியும் எனக் கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும், இதற்கு அண்மையிலேயே உள்ளன. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து.

மந்திரிமனை
மந்திரிமனை
பொதுவான தகவல்கள்
நிலைமைGood
நகர்யாழ்ப்பாணம்
நாடுஇலங்கை
ஆள்கூற்று9°40′38.9″N 80°02′09.3″E
அறியப்படுவதுயாழ்ப்பாண அரசு
முகப்பு
பின்பகுதி

கட்டிட அமைப்பு

தற்போதைய நிலையில் இக் கட்டிடம் ஏறத்தாழ 70 x 80 மீட்டர்கள் அளவுகளைக் கொண்ட நிலப்பரப்பில், அதன் தென்மேற்கு மூலையை அண்டி அமைந்துள்ளது. தொடக்கத்தில் இதற்குரிய நிலம் இன்னும் பெரிதாக இருந்திருக்கக்கூடும்.

காலம்

மர வேலைப்பாடு
உட்பகுதியில் கிணறு உள்ள பகுதி

இக்கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்களான செங்கட்டி, சுண்ணாம்புச் சாந்து, மரங்கள், ஓடுகள் என்பவைகளையும்; இக்கட்டிடத்தின் அமைப்பையும், அதன் முன்புறத்தில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகளையும் கருத்தில் கொண்டு, இக்கட்டிடம் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என யாழ்ப்பாணச் சரித்திரவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனாலும், இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில கூறுகள், குறிப்பாக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் போன்றவை யாழ்ப்பாண அரசர் காலத்துக்கு உரியவை என்ற கருத்தும் உண்டு.[1] யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தலைநகரத்தை நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு மாற்றினாலும், நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த ஒல்லாந்தரும் இவ்வாறே பயன்படுத்தினர். பின்னவர்கள் மேற்சொன்ன நிலங்களிலே புதிய கட்டிடங்களைக் கட்டிய ஆதாரங்களும் உண்டு.[2] "மந்திரிமனை" என அழைக்கப்படும் இந்தக் கட்டிடமும் இவ்வாறே புதிதாக அமைக்கப்பட்ட அல்லது பெருமளவுக்குத் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவே இருக்கவேண்டும் என்பதும் இவர்களது கருத்து.

இக்கட்டிடத்தில் கடந்த நூற்றாண்டில் சில திருத்த வேலைகள் சில நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கட்டிடம், அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடையவரால் குடும்பமொன்றினது இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு வநதுள்ளது. அக்காலத்திலேயே இதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இக்கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது இது ஓரளவு திருத்தப்பட்டு உள்ளது.

குறிப்புகள்

  1. சிவசாமி, வி., 1972. பக்.3
  2. மந்திரி மனைக்கு அண்மையில் உள்ள சங்கிலித் தோப்புப் பகுதியில் ஒல்லாந்தர் ஒரு இறையியல் கல்லூரியை (seminary) நிறுவியிருந்தனர்.

உசாத்துணைகள்

  • சிவசாமி, வி., நல்லூரும் தொல்பொருளும், ஒளி, 1972.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.