கே. பி. சிவானந்தம்

தஞ்சை கே. பி. சிவானந்தம் (Thanjavur K. P. Sivanandam பி: மார்ச்சு 1, 1917 - இ: சூலை 30, 2003[1]) ஒரு கருநாடக இசை வீணை வாத்திய கலைஞரும் பரத நாட்டிய ஆசிரியருமாவார்.

குடும்ப பின்னணி

பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு வடிவமைப்பை ஏற்படுத்தி பாரம்பரிய பரதக் கலைக்குப் புத்துயிர் ஊட்டிய தஞ்சாவூர் நால்வர் பரம்பரையில் வந்தவர் சிவானந்தம்.
தஞ்சாவூர் மராத்திய மன்னர் சரபோஜியின் காலத்தில் அவரது அரண்மனையைச் சேர்ந்த சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு என நான்கு சகோதரர் தற்போதைய பரத நாட்டிய அம்சங்களான அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், தில்லானா போன்றவற்றை வடிவமைத்தனர்.
முன்னதாக இவர்களது பாட்டனாராகிய செந்தில் அண்ணாவியார் பரத நாட்டியத்தை முன்னேற்ற அரும்பாடு பட்டார். அவரது மகன் மகாதேவ அண்ணாவியார் தஞ்சாவூர் நால்வரின் தந்தை.[2]
தஞ்சாவூர் நால்வர் கங்கை முத்து நட்டுவனாரிடமும், சுப்பாராய நட்டுவனாரிடமும் நாட்டியம் கற்றனர். தமது குருவுக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் நவரத்தின மாலை என்ற நாட்டியத்தை வடிவமைத்து மேடையேற்றினர்.[2]
இந்த நால்வரின் வழித் தோன்றல்களே தஞ்சாவூரில் நட்டுவனார்களாகவும், நடன ஆசிரியர்களாகவும் விளங்கி வந்தனர்.
இந்த நான்கு சகோதரர்களில் இரண்டாமவராகிய பொன்னையாவின் பேரன் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இவரே கலாசேத்திரா ருக்மிணி தேவி அருண்டேலின் குரு ஆவார். கே. பி. சிவானந்தமும் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமே நாட்டியமும் சங்கீதமும் பயின்றார்.[2]
நால்வரில் மூன்றாமவரான சிவானந்தத்தின் மகன் கண்ணுச்சாமி நட்டுவனார் பரோடாவில் ஒரு நாட்டியப் பள்ளியை நிறுவினார். இவரது மகன் பொன்னையா பிள்ளை இருபதாம் நூற்றாண்டில் பிரபலம் பெற்று விளங்கிய பரத நாட்டிய குரு ஆவார். அவரின் மூத்த மகன் கே. பி. கிட்டப்பா பிள்ளை நாட்டிய குரு.[2]
திரைப்படத் துறையில் தமிழிலும் இந்தியிலும் பிரபலமான நடிகையாகவும், ஒரு நாட்டியக் கலைஞராகவும் விளங்கிய வைஜயந்திமாலா பாலி இவரின் மாணவியாவார்.[3]
கே. பி. சிவானந்தம் பொன்னையா பிள்ளையின் இளைய மகன்.

வீணை இசைப் பயிற்சி

இவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சங்கீத பூசணம் பட்டம் பெற்றார். அங்கேயே வீ. எஸ். கோமதிசங்கர ஐயரிடமும் தேசமங்கலம் சுப்பிரமணிய ஐயரிடமும் வீணை கற்று, தேர்ச்சி அடைந்தார்.[4]

வீணை இசை

அவரது இசை நடன பின்னணி அவரது வீணை வாசிப்பின் தரத்தை உயர்த்தியது.
இவர் கோவையைச் சேர்ந்த சாரதா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். சாரதாவும் ஒரு வீணை இசைக் கலைஞர். இவர்கள் இருவருமாக சேர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் வீணைக் கச்சேரிகள் செய்துள்ளனர்.[5]

ஆசிரியராக

கே. பி. சிவானந்தம் சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி ஆசிரியராகவும், அண்ணாமலைப் பல்கலைக் கழக இசைப் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[6]
இலங்கை மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த அடிகள் இசை நடனக் கல்லூரி கௌரவ முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்[2]

எழுதிய நூல்கள்

கே. பி. சிவானந்தம் பல நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் தஞ்சை நால்வர் நாட்டிய இசை கருவூலம், தஞ்சை பெருவுடையார் பேர் இசை, ஆதி பரத கலா மஞ்சரி என்பவை குறிப்பிடத் தகுந்தன.[2]

விருதுகள்

இறப்பு

தஞ்சாவூர் கே. பி. சிவானந்தம் சூலை 30, 2003 அன்று தமது 86 ஆவது வயதில் சென்னையில் காலமானார்[6].

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.