புதினம் (இலக்கியம்)

புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத சஞ்சிகைகளில் தொடராக வெளிவருவதும் உண்டு.

நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கியவடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கியவகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது.

தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 1876 ல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம். இது மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டதாகும். சில வருடங்களுக்குள் வெளிவந்த பிற இரு நாவல்களும் முன்னோடிகளாக கருதப்படுகின்றன. அவை ராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், அ. மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம். ஏறத்தாழ இக்காலத்தில் ஈழ இலக்கியத்தில் முதல் நாவல் உருவானது. சித்தி லெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம் ஈழத்தில் வெளிவந்த முதல் நாவலாகும். 1890 ல் எஸ். இன்னாசித்தம்பி அவர்களால் எழுதப்பட்ட "ஊசோன் பாலந்தை கதை"மற்றும் "மூர் என்பார் எழுதிய "காவலப்பன்" கதை என்பவற்றையே ஈழத்தவர்களின் முதல் நாவல்களாக விவாதிப்பவர்களும் உளர் [1]. தமிழில் நாவல் கலை பெரும் வளர்ச்சியைக் கண்டுவருகிறது. தமிழ்நாவல்களின் வரலாற்றை சிட்டி, சிவபாதசுந்தரம் எழுதிய தமிழ்நாவல் வரலாறு என்ற நூலில் காணலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.