செஞ்சதுக்கம்

செஞ்சதுக்கம் (Red Square, உருசியம்: Красная площадь) உருசிய நாட்டின் மாசுக்கோவிலுள்ள ஒரு புகழ் பெற்ற சதுக்கமாகும். இது முன்னைய அரசர் காலத்துக் கோட்டையும், தற்போதைய உருசிய சனாதிபதியின் வசிப்பிடமும் ஆகிய கிரெம்லினை "கித்தாய்-கோரோட்" எனப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வணிகப் பகுதியில் இருந்து பிரிக்கிறது. இங்கிருந்து விரிந்து செல்லும் முக்கியமான சாலைகள் நகருக்கு வெளியே நெடுஞ்சாலைகள் ஆகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன. இதனால், செஞ்சதுக்கம் மாசுக்கோவினது மையமாக மட்டுமன்றி, முழு உருசியாவினதும் மையச் சதுக்கமாகக் கருதப்படுகின்றது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கிரெம்லினும் செஞ்சதுக்கமும், மாசுக்கோ
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைபண்பாடு
ஒப்பளவுi, ii, iv, vi
உசாத்துணை545
UNESCO regionஉருசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1990 (14வது தொடர்)

தோற்றமும் பெயரும்

இச் சதுக்கத்தைச் சுற்றிலும் காணப்படும் செங்கற் கட்டிடங்களைக் காரணமாக வைத்தோ, பொதுவுடைமைக் கொள்கைக்கும் செந்நிறத்துக்கும் உள்ள தொடர்பினாலோ இதற்குச் செஞ்சதுக்கம் என்னும் பெயர் ஏற்படவில்லை. "கிராஸ்னாயா" (красная) என்னும் உருசியச் சொல்லுக்கு "சிவப்பு", "அழகு" என்னும் இரு பொருள்கள் உள்ளன. இச் சதுக்கத்துக்கு அருகில் அமைந்துள்ள புனித பசில் பேராலயத்தைக் குறிக்க "அழகு" என்னும் பொருளில் "கிரானஸ்யா" என்னும் பெயர் வழங்கியது. இது பின்னர் அருகில் உள்ள சதுக்கத்தைக் குறிப்பதாயிற்று. இச் சதுக்கம் முன்னர் "எரிந்துபோன இடம்" என்னும் பொருள்படும் "போசார்" என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 17 ஆம் நூற்றாண்டிலேயே இதற்குத் தற்போதைய பெயர் புழங்கத் தொடங்கியது.

வரலாறு

செஞ்சதுக்கத்தின் சிறப்பான வரலாறு, வசிலி சுரிக்கோவ், கான்சுட்டன்டின் யுவோன் போன்ற பல ஓவியர்களினால் வரையப்பட்ட ஓவியங்களில் வெளிப்படுகின்றன. இச் சதுக்கம் மாசுக்கோவின் முக்கிய சந்தைப் பகுதியாகவே உருவாக்கப்பட்டது. பல்வேறு பொது விழாக்கள் இடம்பெறும் இடமாகவும், பிரகடனங்கள் செய்யப்படும் இடமாகவும் இச் சதுக்கம் பயன்பட்டதுடன், சிலவேளைகளில் சார் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. படிப்படியாக வளர்ச்சி பெற்ற இச் சதுக்கம் பின்னர் எல்லா அரசாங்கங்களினதும் அரச விழாக்களுக்கான இடமாக விளங்கி வருகிறது.

உலக பாரம்பரியக் களம்

13 ஆம் நூற்றாண்டில் இருந்து உருசிய வரலாற்றோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதனால் இச் சதுக்கமும் கிரெம்லினும், 1990 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

பிரதான காட்சி

360° பரப்புக் காட்சியில் செஞ்சதுக்கம்: புனித பசில் பேராலயம் (தெ.கி), கிரெம்லின் மற்றும் வரலாற்று நூதனசாலை (வ.மே).

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.