ஹூட்டு இனக்குழு

ஹூட்டு இனக்குழு, பெரும்பாலும் ருவாண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் வாழும் மத்திய ஆபிரிக்க இனக்குழுக்களுள் ஒன்றாகும்.

ஹூட்டு
மொத்த மக்கள்தொகை
(5-9.5 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ருவாண்டா, புரூண்டி, கிழக்கு கொங்கோ சனநாயகக் குடியரசு (பெரும்பாலும் அகதிகள்)
மொழி(கள்)
கிருண்டி, கின்யார்வண்டா, பிரெஞ்சு
சமயங்கள்
கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்தம், சுன்னி இஸ்லாம், உள்ளூர் நம்பிக்கைகள்.
தொடர்புள்ள இனக்குழுக்கள்
துட்சி, த்வா

மக்கள்தொகைப் புள்ளிவிபரங்கள்

ஹூட்டுக்கள் புரூண்டியிலும் ருவாண்டாவிலும் உள்ள மூன்று இனக்குழுக்களுள் பெரும்பான்மையினர் ஆவர். ஐக்கிய அமெரிக்கப் புலனாய்வு நிறுவனம் வெளியிடும் தகவலின்படி, ருவாண்டாவில் 84% மக்களும், புரூண்டியில் 85% மக்களும் ஹூட்டுக்கள் ஆவர். எனினும், வேறு மூலங்களில் இது குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டும் காணப்படுகிறது. இந் நாடுகளில் வாழும் இன்னொரு இனக்குழுவான துட்சிகளுக்கும், இவர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் முக்கியமாகச் சமூக வகுப்பு அடிப்படையிலானதே அன்றி, மொழி, தோற்றம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஆனதல்ல எனப்படுகின்றது.


தோற்றம்

இவர்கள், சுமார் 11 ஆம் நூற்றாண்டளவில், இன்றைய சாட் நாட்டைச் சேர்ந்த பகுதிகளிலிருந்து, ஆபிரிக்கப் பேரேரிப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே அங்கு வாழ்ந்துவந்த துவா பிக்மிகளை விரட்டிவிட்டு அப்பகுதியில் குடியேறிய அவர்கள், பல சிறிய அரசுகளை அமைத்துக்கொண்டு அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தினர். இந்நிலை, துத்சிக்கள் அப்பகுதிக்கு வரும்வரை நீடித்தது. துத்சி, ஹூட்டுக்களின் முரன்பாடுகளை விளக்கும் கோட்பாடுகள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று, துத்சிக்கள் ஹாமிட்டிய மக்கள், 15 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் இன்றைய எதியோப்பியப் பகுதிகளிலிருந்து தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்த அவர்கள், ஹூட்டுக்கள், துவா பிக்மிகள் ஆகியோர் மீது மேலாதிக்கம் செலுத்தினர். இன்னொரு கோட்பாடு ஹூட்டுக்களும், துத்சிகளும் ஓரின மக்கள் என்றும், செர்மானிய, பெல்ஜியக் குடியேற்றவாதிகளினால் பிரித்து ஆளப்பட்டவர்கள் என்றும் கூறுகிறது. ருவாண்டா தேசிய ஒற்றுமையை ஆதரிப்பவர்கள் மத்தியில் இக் கோட்பாட்டுக்குச் செல்வாக்கு உள்ளது. எனினும் இது ஒரு வரலாற்றுத் திரிபாக இருக்கலாம் என்னும் கருத்தும் உண்டு.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.