ஹிரூ ஒனோடா

ஹிரூ ஒனோடா (小野田 寛郎 Onoda Hiroo?, மார்ச் 19, 1922 – சனவரி 16, 2014) இரண்டாம் உலக யுத்தத்தில் சப்பானிய படை சார்பாக போரிட்ட ஒரு போர் வீரானாவார். ஆயினும் 1945இல் உலகயுத்தம் இரண்டின் முடிவில் பிலிப்பைன்சை அமெரிக்காவின் நேசப் படைகள் கைப்பற்றிக்கொண்டன. இதன் போது இவர் அமெரிக்கப் படைகளில் தாக்குதலினால் சிறு சப்பானிய படைக் குழுவுடன் துண்டிக்கப்பட்டு தனித்துவிடப்பட்டார். இதேவேளை பிலிப்பைன்சில் இருந்த சப்பானிய படைகள் சரணடைந்தாலும் ஹிரூ ஓனோடா நேசப் படைகளிடம் சரணடய மறுப்புத் தெரிவித்தார். 1974இல் இவரது நேரடி கட்டளை அதிகாரியாக இருந்தவர் நேரடியாக பிலிப்பைன்ஸ் சென்று ஹிரூ ஒனோடாவிடம் அவரது பணியிலிருந்து அவர் விடுவிக்கப்படுகின்றார் என்று அறிவுறுத்தல் வழங்கும் வரை சுமார் 30 வருடங்களாக அவரது குழுவினருடனும் பின்னர் தனித்தும் பிலிப்பைன்ஸ் காடுகளில் ஹிரூ ஒனோடா வசித்து வந்தார்.

ஹிரூ ஒனோடா
1922-2014

ஹிரூஒனோடா, c. 1944
பிறப்பு மார்ச்சு 19, 1922(1922-03-19)
இறப்பு சனவரி 16, 2014(2014-01-16) (அகவை 91)
சார்பு  சப்பான்
பிரிவு சப்பானியப் படை
சேவை ஆண்டு(கள்) 1941–74
தரம் இரண்டாம் லியூட்டினன்ட்
சமர்/போர்கள் உலகயுத்தம் இரண்டு
பிலிப்பைன்ஸ் களம் (1944–45)
வேறு பணி கால்நடை மேய்ப்பு

ஆரம்ப வாழ்க்கை

ஒனாடா 1922இல் சப்பானில் உள்ள கமேகாவா எனும் கிராமத்தில் பிறந்தார். தனது 17ம் வயதில் தொழில் நிமிர்த்தமாக டஜிமா யோகோ ட்ரேடிங் கம்பனி எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவரது 20ம் வயதில் சப்பானிய இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இராணுவ சேவை

இராணுவத்தில் இணைந்த ஹிரூ ஒனோடா உளவு பார்க்கும் பிரிவில் சேர்க்கபட்டார். அதில் சிறப்புப்படையணிக்கான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது. மேலும் மறைந்திருந்து கெரில்லாத் தாக்குதல்களை நடத்துதல் சம்பந்தமான பயிற்சிகளும் இவரிற்கு வழங்கப்பட்டது[1]. டிசம்பர் 26, 1944 இல் லுபாங் தீவுகள், பிலிப்பைன்ஸிற்கு இவர் இராணுவப் பணிகளைத் தொடங்க அனுப்பி வைக்கப்பட்டார். இவரிற்கு வழங்கப்பட்ட பணிகளில் குறிப்பிடத்தக்கவை எதிரி விமானங்கள் தரையிறங்காது விமான ஓடுபாதைகளை சேதப்படுத்துதல், கப்பல்கள் வந்திறங்கும் இறங்குதுறைகளை சேதப்படுத்துதல் போன்றவையாகும். அத்துடன் இவரிற்கு எக்காரணம் கொண்டும் எதிரியிடம் சரணடைதலோ அல்லது தனது உயிரை மாய்த்துக்கொள்ளுதலோ கூடாது என்று இவருடைய நேரடி அதிகாரிகளினால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் எப்படியான பிரைச்சனை வந்தாலும் உங்களை மீட்டுப்போக நாங்கள் மீண்டும் வருவோம் என்றும் இவரிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

ஆயினும் லுபாங் தீவுகளில் இருந்த ஏனைய படைவீரர்கள் இவர் தனது செயற்பாடுகளை செவ்வனே செய்யவிடாது இடையூறு செய்தனர். இதன் காரணமாக மிக இலகுவாக பெப்ரவரி 28, 1945இல் இந்த தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்ற ஏதுவாயின. அமெரிக்கப் படைகள் தீவைக் கைப்பற்றிய வேளையில் அங்கே இருந்த சப்பானிய படைவீரர்கள் அனைவரும் ஒன்று சரணடைந்தனர் அல்லது இறந்துபோயினர். உயிர் பிழைத்த பல சப்பானிய வீரர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து போயினர். சுமார் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுக்களாய் இவர்கள் பிரிந்து காட்டினுள் தங்கியிருந்தனர். இந்தக் குழுக்களில் பலர் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டாலும் ஒனோடாவின் குழு நீண்டநாட்கள் காடுகளில் தப்பிப்பிழைத்து வாழ்ந்தனர். உயிர் பிழைத்த ஒனோடா மற்றும் மூன்று சப்பானியப் படைவீரர்கள் ஒனோடா கட்டளைப்படி அண்மையில் இருந்த குன்றுகளுக்குச் சென்றனர்.

மறைந்திருந்து நடவடிக்கை

காடுகளுக்குள் மறைந்திருந்த ஓடோடாவும் சக சப்பானிய வீரர்களும் அந்த தீவின் மக்கள் சுமார் 30 பேர் வரை இறக்ககாரணமாக இருந்தனர். அத்துடன் உள்ளூர் காவல் துறையுடனும் துப்பாக்கிச்சூட்டு சண்டைகளில் ஈடுபட்டனர்.

1945இல் முதன் முறையாக ஒரு பரப்புரைக் காகிதம் ஒன்றைக் கண்டனர். அக் காகிதத்த்தின் படி யுத்தம் முடிவடைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயினும் ஓனோடா மற்றும் அவரது குழுவினர் இது ஒரு திட்டமிட்ட சதி என்று எண்ணி அந்த பரப்புரைக் காகிதத்தை நம்ப மறுத்தனர். 1945ன் இறுதியில் சப்பானிய கட்டளை அதிகாரிகளின் குறிப்புடன் மறுபடியும் அப்பிரதேசங்களில் பரப்புரைக் காகிதங்கள் தூவப்பட்டன. அவற்றை கூர்ந்து கவனித்த ஓனோடா மற்றும் குழுவினர் மீண்டும் இது அமெரிக்கப் படைகளில் திட்டமிட்ட சதி, யுத்தம் இன்னும் முடிவடையவில்லை என்று நம்பினர்.

நான்கு பேர்களிள் ஒருவரான யூய்சி அகாட்சு எனும் போர் வீரன் 1949இல் இவர்களிடம் இருந்து பிரிந்து தனியாகச் சென்று பின்னர் 1950ல் பிலிப்பைன்ஸ் படையினரிடம் சரணடைந்தான். இந்த நிகழ்வை ஓனோடா குழுவினர் பாதுகாப்புப் பிரச்சனையாகப் பார்த்ததுடன் 1952இல் போடப்பட்ட பல்வேறு பரப்புரைக் காகிதங்களை நம்ப மறுத்தனர். குறிப்பாக குடும்ப படங்கள், கடிதங்கள் போன்றன போடப்பட்டும் அவற்றை இவர்கள் நம்ப மறுத்தனர். 1953 இல் ஷிமாடா எனும் ஒரு வீரன் உள்ளூர் மீனவர்களுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் காயமடைந்தான். ஆயினும் ஓனோடா அவனை குணப்படுத்தினார். 1954 இல் ஷிமாடா இவர்களைத் தேடிய ஒரு குழுவிடம் சிக்கி பலியானார். கோசுகா என்னும் இன்னுமொரு படைவீரன் 1972ல் உள்ளூர் பொலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானார். இதன் மூலம் ஒனாடோ தனித்துவிடப்பட்டார். ஆரம்பத்தில் 1959இல் ஒனாடோ இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் இந்தச் சம்பவம் மூலம் ஒனாடோ உயிருடன் இருக்கலாம் என்று எண்ணப்பட்டது. இவரைத் தேடி காட்டினுள் சென்ற எந்தக் குழுவிற்கும் வெற்றி கிடைக்கவில்லை.

பெப்ரவரி 20, 1974 இல் சப்பானில் இருந்து ஒனோடோவைத் தேடி நொரியோ சுசூகி எனும் வாலிபர் வந்தார். அவர் காடுகளில் தேடி அலைந்து சுமார் நான்கு நாட்களின் பின்னர் ஒனோடாவை காட்டினுள்ளே கண்டுபிடித்தார். சப்பானியர்கள் இருவரும் நல்ல நண்பர்களாயினர். ஆயினும் சுசூகியின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைய முடியாது என்று குறிப்பிட்டுவிட்டார். தனது உயர் அதிகாரிகள் வந்து பணியிலிருந்து தன்னை விடுவித்தால் அன்றி தான் இந்த இடத்தை விட்டு அசையப்போவதுமில்லை என்று ஒனாடோ குறிப்பிட்டார். சப்பான் திரும்பிய சுசூகி தான் ஒனாடோவுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அத்துடன் சப்பானிய அரசும் ஓனாடோவின் அக்காலத்து கட்டளை அதிகாரியும் பிற் காலத்து புத்தக வியாபாரியுமான யோஷிமி டனிகுசி என்பவரை கண்டுபிடித்தது. மார்ச் 9, 1974ல் இவர் லுபாங் சென்ற இவர் ஒனோடோவை சரணடையுமாறு பணித்தார்.

உள்ளூரில் பல பொதுமக்களை கொலை செய்திருந்தாலும் அக்காலத்தின் தேவைகருதி பிலிப்பைன்ஸ் அதிபர் பேர்டினார்ட் மார்க்கோஸ் அவர்கள் ஹிரூ ஒனோடாவிற்கு பொது மன்னிப்பு வழங்கினார்.

யுத்தத்தின் பின்னர்

சப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடா பெரும் செல்வாக்குடையவரானார். மக்கள் இவரைப் பெரும் மரியாதையுடன் போற்றிப் புகழ்ந்தனர். தாய் நாடு திரும்பிய ஹிரூ ஒனோடா தன்னுடைய 30 வருட கெரில்லா யுத்தம் பற்றி நோ சரண்டர் : மை தேர்ட்டி இயர் வோர் எனும் புத்தகத்தை எழுதினார். இதேவேளை பிலிப்பைன்சில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி ஹிரூ ஒனோடா தனது 30 வருட நடவடிக்கையின் போது பல பொது மக்களைக் கொலை செய்துள்ளார் எனும் செய்தியை வெளியிட்டது. சப்பானிய அரசு மற்றும் பொது நலன் விரும்பிகள் இவர் நாடுதிரும்பியதும் இவரிற்குப் பெரும் தொகைப் பணத்தை வழங்கினர். ஆயினும் அனைத்தையும் ஹிரூ ஒனோடா மறுத்துவிட்டார். மிகக் கட்டாயப்படுத்தப்பட்ட வேளைகளில் அந்தப் பணத்தை யசூகுனி ஸ்ரைனிற்கு வழங்கினார். யசூகுனி ஸ்ரைன் எனப்படுவது சப்பானிய அரசாட்சிக் காலத்தில் போரிட்டு மாய்த போர்வீர்களுக்கான ஞாபகார்த்த நினைவிடம்.

சப்பான் திரும்பிய ஹிரூ ஒனோடாவிற்கு சப்பானின் புதிய போக்கும் அதன் மக்களின் மேலைத்தேயம் சார் நடவடிக்கைகளும் அவ்வளவாக விருப்பைத் தரவில்லை. ஆகவே 1975 இல் தன் சகோதரன் வழியில் பிரேசில் நாட்டிற்குச் சென்று அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டார். மேலும் 1976 இல் திருமணம் செய்துகொண்டதுடன் பிரேசில் நாட்டில் உள்ள சப்பானிய குடியேற்றக்காரர் மத்தியில் பெரும் செல்வாக்குடன் விளங்கினார். ஆயினும் ஓனோடா 80களில் மீளவும் சப்பான் திரும்பிவந்தார். குறிப்பாக ஒனோடா ஷிசென் ஜூகு எனும் இளவயதினர்க்கான பயிற்சிப் பட்டறையை நடத்துவதில் ஆர்வம் காட்டினார்.

1996இல் ஹிரூ ஒனோடா லுபாங் தீவை மீளச் சென்றடைந்தார். அங்குள்ள பாடசாலை ஒன்றிற்கு சுமார் 10,000 அமெரிக்க டாலர்கள் பெறுமதியான அன்பளிப்பை வழங்கினார்.

சனவரி 16, 2014 இல் இதய செயலிழப்பு காரணமாக ஹிரூ ஒனோடா உயிரிழந்தார்.

உசாத்துணை

  1. The War is Over . . . Please Come Out
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.