வேணுவனப் புராணம்

வேணுவனம் என்பது திருநெல்வேலியைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிரம்ப அழகிய தேசிகர் பாடிய நூல் வேணுவனப் புராணம். [1] [2]

பிந்திய பெருநூல்

19 ஆம் நூற்றாண்டில் கவிராச நெல்லையப்பன் என்பவர் 6892 விருத்தப்பாடல்கள் கொண்ட வேணுவனப் புராணம் என்னும் நூலைப் பாடினார். இது 1869 ஆம் ஆண்டுப் பதிப்பாக வெளிவந்துள்ளது.

நூல் அமைதி

நிரம்ப அழகிய தேசிகர் பாடிய வேணுவனப் புராணத்தில் உள்ளவை. 9 சருக்கம். 454 பாடல். வருணனை மிகுதி. எளிய சொற்கள். இதனை இவர் சேது புராணம் பாடுவதற்கு முன்னர் பாடியிருக்கலாம்.

எடுத்துக்காட்டுப் பாடல்கள்

நிரம்ப அழகிய தேசிகர் பாடிய வேணுவனப் புராணத்தில் உள்ளவை. [3]

நெல்லையப்பரைப் போற்றும் பாடல்

ஏலக் குழல் நீள் வரை மாதுடனே என் கண்கள் களித்திட இன்ப மணக்
கோலத்துடனே உடன் மேவும் மணக்கோலத்தவனே சரணம் சரணம்
ஞாலத்தின் மயக்கம் ஒழித்தனையே நாடிப் பரவித் தேடித் திரியும்
சீலத்தவர்கட்கு வெளிப்படும் மெய்ச் சீலத்தவனே சரணம் சரணம்.

நெல்லைநாதர் திருமேனியைத் தொட்டுச் சிவபூசை செய்யும் சிவ மறையோரை வணங்குதல்

மூண்ட பெருந் திருவருளால் அளப்பரிய சிவாகமங்கள் முழுதும் ஓர்ந்து
பூண்ட பெருந் தொண்டினுடன் தமிழ்த் தெய்வப் பாண்டியனார் புகழ்ந்து நின்று
வேண்ட வளர்த்து அருள் நெல்லைநாதர் திருமேனிதனை வியந்து நாளும்
தீண்டி அருச்சனை புரியும் சிவ மறையோர் சரண மலர் சிந்தை செய்வாம்.

பாண்டியனின் நெல்லை

அரித்தானை அடியர் பவம் அழித்தானை உரித்தானை அடர்ந்த வேளை
எரித்தானை புரம் எரியச் சிரித்தானை நரித் தானை எவையும் ஆன
பரித் தானைத் தனி உலகம் பரித்து ஆளும் பாண்டியற்குப் பாவித்தானைக்
தரித்தானை மனத்தினராம் மாணிக்க வாசகர்தன் தலைமேல் கொள்வாம்

அடிக்குறிப்பு

  1. இது 1914 ஆம் ஆண்டுப் பதிப்பாக அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது
  2. மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014, முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005. பக். 106.
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டவை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.