வெள்ளாடியனார்

வெள்ளாடியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 29 எண் கொண்ட பாடல்.

வெள்ளாடியன்

புலவர் பெயர் விளக்கம்

வெள் என்பது வெற்றிடம். வெற்றிடத்தில் ஆடுபவர் சிவன். நடராசன் என்பதன் பழங்காலத் தமிழ்ப்பெயர் வெள்ளாடியன். இந்தப் புலவரின் பெயர் சிவபெருமானைக் குறிக்கும் பெயர். 'ஆர்' பலவர்களுக்குத் தரப்படும் சிறப்பு விகுதி.

பாடல் சொல்லும் செய்தி

  • திணை - பாலை

வினை முற்றி மீண்ட தலைவனிடம் தலைவி 'என்னையும் நினைத்தீரோ' என்றாள். அதற்குத் தலைவன் பகரும் விடைதான் இந்தப் பாடல்.

பொருள் தேடச் செல்வது மாண்வினை. அந்த மாண்வினைக்கு அகன்ற என் உடம்புதான் அங்கு இருந்தது. என் நெஞ்சம் உன்னிடந்தான் இருந்தது, என்றானாம்.

புலியின் குணம்

புலி யானையைத் தாக்கும்போது இரை இடப்பக்கமாக விழுந்தால் புலி, உயிர் போகும் பசியோடு கிடந்தாலும் உண்ணாதாம். அதுபோலத் தலைவன் தன் பொருள்செய்வினை அறநெறிப்பட்டதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வானாம்.

அவள் கண்

மாவடுவைப் பிளந்து இருபுறமாக வைத்தாற்போல் இருக்குமாம். அது மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்ணாம்.

நெறி முறல் அம்பி

அம் என்றால் நீர். அம்மில் மிதப்பது அம்பி. அம்பி என்றால் பரிசில் அல்லது ஓடம். ஆற்றைக் கடக்கும் வழியில் ஆற்றில் நீர் இல்லாத காலத்தில் அம்பி தரையில் கிடப்பதுபோல நீரில்லாத பாலைநிலத்தில் ஓடிய யானை விழுந்து கிடக்குமாம்.

பழந்தமிழ்

  • எஃகு = கத்தி, வாள்
  • தண்டா = (மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்) = விருப்பம் தணியாத, மகிழ்ச்சியில் திளைக்கும், அடுத்தவரை உண்ணும் கண்.
  • கொம்மை (வாடிய யானை) = உடம்பின் கொழுகொழுப்பு
  • முறல் = வெயிலில் முறமுறவெனக் காய்தல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.