வெற்றிலைத் தட்டம்

வெற்றிலைத் தட்டம் அல்லது வெற்றிலைத் தட்டு என்பது பித்தளை உலோகத்தினாலான பாதமும் ஒரு சாண் வரை உயரும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த வளைவான மேற்புறமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் ஆகும். இந்தியா, இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிலையும் வெற்றிலைத்தட்டமமும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழர் விருந்தோம்பலிலும், வாழ்வோட்ட சடங்குகளிலும் இவை சிறப்பான ஒர் இடத்தைப் பெறுகின்றன. தென் இந்தியாவில் வெற்றிலைக் காளாஞ்சி எனவும் இலங்கையின் வடபுறத்தில் கால் தட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

பித்தளையால் செய்யப்பட்ட ஒரு வெற்றிலைத் தட்டம்

பயன்பாடு

தமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும் வெற்றிலைத் தட்டத்துக்கும் தனியான ஓரிடம் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது. அதனால் வெற்றிலையை வைத்திருக்கும் தட்டமும் தனக்கென தனித்துவமான வடிவத்தையும் இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.

திருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு மணமக்களின் சார்பாக அவர்களுடய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முகமாக மணமக்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதப் பைகளில் வெற்றிலை, பாக்கு என்பன பலகாரங்களோடு கொடுத்து விடுவது மரபார்ந்த வழக்கமாக இருந்த அதே காலத்தில் திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக, துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலையினதும் வெற்றிலைத்தட்டத்தினதும் பயன்பாடு வெகுவாக வேண்டப்பட்டிருந்தது.

மங்கைப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சம்பிருதாயப் பொழுதுகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு இப்பித்தளைத் தட்டம் கன கம்பீரமாக: முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் வீற்றிருக்கும்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகியன வைக்கப் படும் தட்டங்கள் அனேக வீடுகளில் காணப் பட்டன. பொதுவாக அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டனவாக அவை அமைந்திருந்தன.

காலப் போக்கில் வெற்றிலைப் பாவனையாளர்கள் குறைந்தமை, தட்டங்களின் கனதியான தன்மை, அவற்றைச் சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமம்,பாவனைக்கு இலகுவான வேறு மென் உலோகங்களின் வருகை போன்ற இன்னோரன்ன காரணங்களால் வெற்றிலைப் பாவனையும் வெற்றிலைத்தட்டத்தின் பாவனையும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.

தூய்மைப்படுத்தல்

அவை எலுமிச்சம் புளி அல்லது பழப்புளியினால் தென்னந்தும்பு, சாம்பல், சவர்க்காரம், மற்றும் ரின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் சலவைத் தூள்கள் எல்லாம் சேர்த்து மினுக்கிப் பாவிக்கப் பட்டன.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.