வெண்டி

வெண்டி அல்லது வெண்டை சமையலிற் பயன்படும் வெண்டைக் காய்களை அல்லது வெண்டிக் காய்களைத் தரும் செடியினமாகும். வெண்டி (வெண்டை) மல்லோ என்றழைக்கப்படும் மால்வேசியே (மால்வேசியே) குடும்பத்தைச் சேர்ந்த, பூக்கும் செடியாகும் (தாவரமாகும்). இதன் அறிவியற் பெயர் அபெல் மோஷஸ் எஸ்க்யுலென்டஸ் (Abelmoschus esculentus) என்பதாகும். அமெரிக்காவில் இதனை ஓக்ரா என்று அழைக்கின்றனர்.[1]

ஆபெல்மொஸ்சஸ் எஸ்குலெந்தஸ்
(Abelmoschus esculentus)
வெண்டிச் செடி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: மல்வாலெஸ்
குடும்பம்: மால்வேசியே
பேரினம்: ஆபெல்மொஸ்சஸ்
இனம்: எஸ்குலெந்தஸ்
இருசொற் பெயரீடு
ஆபெல்மொஸ்சஸ் எஸ்குலெந்தஸ்
(L.) மோயெஞ்ச்

வளர்ச்சி

இவ்வினம் ஆண்டுத் தாவரமாகவோ பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கலாம். இது 2 மீ உயரம் வரை வளர்கிறது. வெண்டைக் காய் பெருமளவு விதைகளைக் கொண்டதாக நீண்டு காணப்படும். 10 - 20 சதம மீட்டர்கள் வரை நீள அகலங்களைக் கொண்டுள்ள இதன் இலைகள், அங்கை வடிவம் கொண்டவை. 5 - 7 வரையான நீட்சிகளோடு கூடியவை. இத் தாவரத்தின் பூக்கள் 4 - 8 சமீ விட்டங் கொண்டவை. வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களுக்கு இடைப்பட்ட பல சாயல்களில் காணப்படும் இவற்றின் இதழ்களில் செந்நிறம் அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும்.

வாளி நிறைய வெண்டைக் காய்கள்
வெண்டியின் பூ

ஊட்டச்சத்துக்கள்

பாதியளவு வேக வைக்கப்பட்ட வெண்டையின் ஊட்டச்சத்துக்களின்[2] விவரம் :

  • கலோரிகள் = 25
  • ஊட்ட நார்சத்து = 2 கிராம்
  • புரதம் = 1.5 கிராம்
  • கார்போஹைட்ரேட் = 5.8 கிராம்
  • வைட்டமின் A = 460 IU
  • வைட்டமின் C = 13 மி.கி
  • ஃபோலிக் அமிலம் = 36.5 மை.கி
  • சுண்ணாம்புச்சத்து = 50 மி.கி
  • இரும்பு = 0.4 மி.கி
  • பொட்டாசியம் = 256 மி.கி
  • மெக்னீசியம் = 46 மி.கி

பரவல்

எத்தியோப்பிய உயர்நிலப்பகுதியே இத்தாவரத்தின் தாயகம் எனப்படுகிறது. இந்தியா[3], இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளிலும் வெண்டைக்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி, வர்சா உப்கார் போன்ற பல வெண்டை ரகங்கள் உள்ளன[4].

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.