வெண்கண்ணனார்

வெண்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் பாடியனவாக 2 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சொல்லப்படும் செய்திகள் இவை.

அகநானூறு 130

  • திணை - நெய்தல்

கொற்கை

நற்றேர் வழுதி கொற்கை அரசன். குதிரை சென்ற காலடிகளைக் கடலலை கொண்டுவரும் முத்துக்கள் தூர்க்குமாம்.

மதைஇய நோக்கு

தன் காதலியின் கண் கொற்கைக் கழியில் பூத்த நெய்தல் மலர் போல் மதமதப்போடு நோக்குமாம். பாங்கன் அந்தக் கண்களைப் பார்க்காததால் தன் காதல் துடிப்பைப்பற்றி ஏளனம் செய்கிறானாம். பார்த்திருந்தால் காம உணர்வை அடக்கிக்கொள் என்று பாங்கன் தன்னை இடித்துரைக்க மாட்டானாம். இவ்வாறு தலைவன் கூறுகிறான்.

அகநானூறு 192

  • திணை - குறிஞ்சி

தலைமகள் மனையிலேயே செறித்து வைக்கப்பட்டுள்ளாள். பகலில் தினைப்புனம் காக்கவும் வரமுடியவில்லை. இரவில் தெருவெங்கும் விளக்குகள். (எனவே திருமணம் செய்துகொள்வதுதான் ஒரே வழி) எனத் தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள்.

உவமை

  • கிளியின் வாய் எய்யாத வில் போல் வளைந்திருக்கும்.
  • தலைவியின் நுதல் (முகத்துக்கு ஆகுபெயர்) மதியம் மாசற்று இருப்பது போன்றது.

தினை

பகலில் தலைவி சென்று ஓட்டாததால் கிளி ஏறியமர்ந்து வளைந்துகொண்டிருக்கிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.