விரைவு அஞ்சல்
விரைவு அஞ்சல் (Express Mail) என்பது ஒரு விரைவான அஞ்சல் விநியோக சேவையைக் குறிக்கும். இதற்காக வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவாக ஒரு பொருளை வேண்டிய இடத்துக்கு அனுப்பமுடியும். விரைவு சேவை உள்ளூர் அஞ்சல், பன்னாட்டு அஞ்சல் இரண்டுக்குமானது. பெரும்பாலான நாடுகளில், இது நாட்டின் அஞ்சல் நிர்வாகத்தினாலேயே நிர்வகிக்கப்படுகிறது. 1998 ஆம் ஆண்டிலிருந்து, பன்னாட்டு விரைவு விநியோக சேவைகள் உலக அஞ்சல் ஒன்றியத்தின் விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவு அமைப்பினால் கட்டுப்படுத்தப்படுகிறது.

விரைவு அஞ்சல் சேவையும், விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவும்
விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவு என்பது உலக அஞ்சல் ஒன்றியத்தின், அஞ்சல் நிர்வாக உறுப்பினர்களால் வழங்கப்படும் ஒரு பன்னாட்டு விரைவு அஞ்சல் சேவை ஆகும். இந்த நிர்வாகங்கள், உலகம் முழுவதிலும் அஞ்சல் சேவைகளை ஒத்திசையச் செய்வதற்கும் வளர்ப்பதற்குமாக, உலக அஞ்சல் ஒன்றியத்தின் கட்டமைப்புக்குள் 1998 ஆம் ஆண்டில் விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவை உருவாக்கின.[1] 2015 சனவரி நிலவரப்படி உலகம் முழுவதிலும் உள்ள 190க்கு மேற்பட்ட நாடுகளும், ஆட்சிப்பகுதிகளும் விரைவு அஞ்சல் சேவையை வழங்குகின்றன.[2]
விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவு உறுப்பினர்
விரைவு அஞ்சல் சேவைக் கூட்டுறவு உருவாக்கப்பட்டதில் இருந்து 177 அஞ்சல் நிர்வாகங்கள் இவ்வமைப்பில் இணைந்தன. இது உலகம் முழுவதிலும் உள்ள விரைவு அஞ்சல் சேவை நடத்துபவர்களில் 85% ஆகும்.[3]
பிற விரைவு அஞ்சல் சேவை வழங்குவோர்
பல போக்குவரத்து ஏற்பாட்டு நிறுவனங்களும் இவ்வாறான விரைவுச் சேவைகளை வழங்குகின்றன. யூபிஎஸ், டிஎச்எல், ஃபெட்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் இவற்றுட் சில. எனினும், பல நாடுகளில் இவை போன்ற மாற்றுச் சேவைகள் பல்வேறு சட்டம் சார்ந்த தேவைகளுக்கு வேறான தகுதிநிலை கொண்டவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உருசியாவில், வெளிநாடுகளில் இருந்து தனிப்பட்டவர்களின் சொந்தத் தேவைக்காக அஞ்சல் அல்லது விரைவு அஞ்சல் சேவையூடாக அனுப்பப்படும் பொருட்கள் 1000 யூரோவிற்குக் குறைவாக இருந்தால் சுங்கவரி விலக்கு உண்டு. அதேவேளை, மாற்று நிறுவனச் சேவைகளூடாக அனுப்பும்போது, சுங்க வரி விலக்குக்கான உச்சப் பெறுமானம் 250 யூரோ மட்டுமே.[4]
இவற்றையும் பார்க்கவும்
- தூக்குமேடைக் கடிதம்
- அஞ்சல் நிர்வாகம்
- குதிரை விரைவஞ்சல்
வெளியிணைப்புக்கள்
மேற்கோள்கள்
- About EMS (retrieved January 19, 2015)
- EMS Homepage (retrieved January, 2015)
- Members of the EMS Cooperative (retrieved January 19, 2015)
- Federal Customs Service of Russia