விபரீதகரணி

விபரீதகரணி ஆசனம் யோகக் கலையின் யோகாசனங்களில் ஒன்று. இது கிட்டத்தட்ட சர்வாங்காசனம் போலவே செய்யப்படும். ஆகையால் சர்வாங்காசனம் செய்ததும் இதை அடுத்துச் செய்யலாம். இதிலே கால் மட்டுமே செங்குத்தாகத் தூக்க வேண்டும். உடல் பகுதியைச் சாய்வாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சர்வாங்காசனத்திலோ உடல் முழுதும் தலைகீழாய்க் கொண்டு வருகிறோம்.

விபரீதகரணி

செய்முறை

விபரீதகரணி
விரிப்பில் சர்வாங்காசனத்திற்குப் படுப்பது போல மல்லாந்து படுத்துக்கொண்டு, மூச்சை உள்ளே இழுக்கவும்.
உள்ளேயே மூச்சை நிறுத்திக்கொண்டு நீட்டியகால்களை ஒன்றாக அப்படியே மேலே தூக்க வேண்டும்.
தூக்கும்போதே இரண்டு கைகளாலும் இடுப்புக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.
இரு கைகளாலும் இடுப்பைத் தாங்கிய வண்ணம் கால்கள் மட்டும் செங்குத்தாய்த் தூக்க வேண்டும்.
உடல் பாரம் முழுதும் பின் கழுத்து, நெஞ்சின் பின்புறப் பகுதி ஆகியவற்றால் தாங்க வேண்டும்.
இப்போது மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.
மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுத்து வெளியே விட்டு இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் இடுப்பைத் தூக்கிப் பிடிக்கச் சிரமமாக இருக்கும். அப்போது இரண்டு மூன்று தலையணைகளை இடுப்புப் பக்கம் முட்டுக் கொடுத்துக்கொண்டு பயிற்சி செய்யலாம். அப்போது கைகளுக்கு வேலை இல்லாததால் அவற்றை இரு பக்கமும் கவிழ்ந்தாற்போல் வைத்துக் கொள்ளலாம். பின்னர் மெல்ல மெல்லத் தலையணையை எடுத்துவிட்டுத் தலையணை இல்லாமல் பயிற்சிகளைச் செய்யலாம்

பலன்கள்

இந்த ஆசனம் மார்புக்கு நல்லது. சுவாச நோய்களுக்கு நல்லது. சளி, இருமல், காசநோய், ஆஸ்த்மா போன்ற நோய்கள் தலைகாட்டா. நரம்புத் தளர்ச்சி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை வாரா. கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் ஏற்படுமாகையால் தைராய்டு சுரப்பி நன்கு வேலை செய்யும். கை கால்களுக்கும் இரத்த ஓட்டம் நன்கு ஏற்படும்.

செய்யக்கூடாதவர்கள்

கருவுற்ற பெண்கள் இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது.

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.