விண்மீன் படிமலர்ச்சி

விண்மீன் படிமலர்ச்சி (stellar evolution) என்பது ஒரு விண்மீன் அதன் ஆயுளில் அடையும் மாற்றங்களின் நிகழ்முறை ஆகும். விண்மீனின் நிறையைப் பொருத்து, சில மில்லியன் ஆண்டுகளாகவோ (மிக அதிக நிறையுடைய விண்மீன்களுக்கு) அல்லது பல டிரில்லியன் ஆண்டுகளாகவோ (மிகக் குறைந்த நிறையுடையவற்றிற்கு) இருக்கும்.

விண்மீன் உருவாதல்

ஞாயிற்றின் வாழ்நாள் காலக்கோடு.

முகிழ்மீன்

விண்மீன் படிமலர்ச்சியின் முதல் படி மாபெரும் மூலக்கூறு முகிலின் ஈர்ப்புக் குறுகலில் தொடங்குகின்றது. ஆழ் வெளியில் காணப்படும் வளி, தூசு முகில்களினின்று தான் அனைத்து விண்மீன்களும் உருவாகின்றன. இம்மூலக்கூற்று முகில்கள் பிரதானமாக ஐதரசன்,ஈலியம் முதனான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும். ஈர்ப்புவிசை காரணமாக இம்மூலக்கூறு முகில் ஒன்று அல்லது பல மையங்களைக் கொண்டதாக சுழன்றுகொண்டிருக்கும். இவ்வாறு சுழலும்போது உயர் அடர்த்தி கொண்ட தொகுதிகளாக ஒடுங்கும். இவை மேலும் மேலும் ஒடுங்கும்போது அவற்றின் சுழற்சி வேகமும் வெப்பநிலையும் அதிகரிக்கும். இவ்வெப்பநிலை 150,000 கெல்வின்(K) அளவை அடையும் போது இம்மூலக்கூற்று முகிலின் நடுப்பகுதி ஒளிர ஆரம்பிக்கும். இவ்விடங்கள் முகிழ்மீன் (Protostar) எனப்படும்.

கரு இணைவும் விண்முகில்களின் தோற்றமும்

ஹபிள் தொலைநோக்கியின் பார்வையில் “ஆக்கத்தின் தூண்கள்” - கழுகு விண்முகிலில் விண்மீன்கள் உருவாகும் இடம்

.

முகிழ்மீனில் காணப்படும் கூறுகள் மேலும் ஒடுங்குவதால் அதன் வெப்பநிலையும் அமுக்கமும் (அழுத்தம்) மென்மேலும் அதிகரிக்கும். சுழற்சி வேகமும் அதிகரிக்கும். முகிழ்மீனின் உட்புற வெளிப்புற பகுதிகள் வேறுபடுத்தக் கூடியதாக மாற்றமடையும்.உட்புற பகுதி உடுவாகவும் வெளிப்புற பகுதி கோள்கலாகவும் மாற்றம் அடைவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். உட்புற வெப்பநிலை 15,000,000 கெல்வின் அளவை அடையும் போது கரு இணைவு(Nuclear fusion) நடைபெறும். இதன் போது பெரிய அணுக்கள் சிறிய அணுக்களுடன் இணையும். அநேக ஐதரசன் அணுக்கள் ஈலியம் அணுக்களாக மாறும். பெருமளவு அமுக்கமும் வெப்பமும் வெளியேறும். விண்மீன் தோற்றம் பெற்றுப் பிரகாசிக்கும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.