விடுபதிகை

கணினியியலில் விடுபதிகை (வெளியேறல், Sign out, Log out) என்பது ஒரு பயனர் தன் சொந்தப் பணிகள் முடிந்த பின் அக்கணினி அமைப்பை விட்டு வெளியேற வேண்டி தனது அமர்விலிருந்து விடுவிப்பதாகும். இதன் மூலம் புகுபதிகை செய்த கணினியோ இணைய தளமோ அப்பயனர் அமர்விலிருந்து விடுவிக்கப்படும்.

விடுபதிகை செய்யும் வழிமுறைகள்

நீங்கள் தற்போது புகுபதிகை செய்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தின் மேற்பகுதியில் (பொதுவாக மேற்பகுதி; ஆனால் தளத்தின் கீழ்ப்பகுதி இடவல பக்கங்கள் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்!) 'விடுபதிகை' என்றோ Sign out அல்லது Log out என்றோ ஓர் இணைப்பு இருக்கும். இவ்விணைப்பைச் சொடுக்குவதன் மூலம் நீங்கள் புகுபதிகை செய்துள்ள இணைய தளத்திலிருந்து விடுபதியலாம். (வெளியேறலாம்/ உங்கள் அமர்வை முடிக்கலாம்)

தானியங்கு விடுபதிகை

ஒரு சில தளங்களில் ஒரு குறைந்த பட்ச கால அளவுக்கு மேல் நீங்கள் எச்செயலும் மேற்கொள்ளாமல் இருப்பின் அத்தளத்திலிருந்து உங்கள் அமர்வு தானாகவே முடிவுக்கு வந்து விடும்படி நிரலெழுதியிருப்பர். எனவே நீங்கள் மீண்டும் புகுபதிகை செய்து உள்நுழைய வேண்டி வரும். ஆனால் இது எந்தப் பயனராலும் விரும்பப் படுவதில்லை. இருப்பினும் இது ஒரு பாதுகாப்பு வழிமுறையே ஆகும். எடுத்துகாட்டாக கூகுளில் இதனை நீங்கள் 'உள்நுழைந்தே இருங்கள்!' (Stay Signed in!) என்ற தேர்வுப் பெட்டியைத் தேர்வு செய்வதன் மூலம் இல்லாமல் செய்ய (Disable) முடியும். இதன் மூலம் நீங்கள் விடுபதிகை செய்யாமலேயே உலவியை மூடினும் உங்கள் அமர்வு நிலைத்திருக்கும். நீங்களாக விடுபதிகை செய்தாலொழிய உங்கள் அமர்வு முடிக்கப்பட மாட்டாது. ஒரு பொதுக் கணினியில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் போன்றவற்றைப் பார்க்கையில் இச்செயலைச் செய்யாமல் இருப்பது நலம்.[1]

சொற்பிறப்பியல்

இது Log out என்ற ஆங்கிலச் சொல்லின் நேரிய மொழியாக்கம் ஆகும். Log என்ற சொல்லுக்குப் 'பதிவு' என்று பொருள். அது செயலுடன் சேர்ந்து 'பதிகை' என்றவாறு வந்தது. இதன் எதிர்ச் சொல்லான புகுபதிகையில் 'புகு' என்று உள்ளதால் இதில் எதிர்ப் பொருள் குறிக்கும் பொருட்டு 'விடு' எனுஞ்சொல் வந்திற்று.

மேற்கோள்கள்

  1. கூகுள் கூறும் விடுபதிகை

இதையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.