விடுதலைக் கட்டுநர்
விடுதலைக் கட்டுநர் (freemasonry) என்பது சகோதரத்துவத்தை முன்னிறுத்தி செயல்படும் ஒரு ரகசிய கூட்டமைப்பு ஆகும். இதன் தொடக்கத்தை பற்றி அதிகம் தெரியவில்லை. இது 18-ம் நூற்றாண்டையொட்டி இங்கிலாந்தில் முறைபடுத்தபட்ட இயக்கம். பெரும்பாலும் கட்டிடக்கலை நிபுணர்களால் தொடங்கப்பட்டதாகவே ஒத்துக்கொள்ளபடுகிறது. மன்னர் சாலமனின் கோயிலைக் கட்டியவர்களால் தொடங்கப்பட்டது என்பது ஓர் ஐதீகம். இதன் ரகசிய நடவடிக்கைகளால் அச்சத்தையும் சந்தேகத்தையும் சம்பாதித்த ஒர் இயக்கம். அதனால், திரைகளை விலக்கி தங்கள் நடவடிக்கைகளை வெளிக்கொணர முயல்கிறது இவ்வியக்கத்தின் ஒரு பகுதி. சகோதரத்துவம், உண்மை, உதவி - இதுதான் இவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.

அமைப்பு

இதன் அடிப்படை அமைப்பு Lodge எனப்படும் ஒரு குழுமம். இவர்கள் சந்திப்பதற்காகக் கூடும் இடத்தை கோயில் என்பர். இப்பொழுது இது சற்றே மாறி ஹால் (மண்டபம்) என்றும் அழைக்கப்படுகிறது. லண்டனில் உள்ள Freemasons Hall மிக பிரசித்தம். ஒரு நாட்டில் இருக்கும் லாட்ஜுகளை ஒருங்கிணைப்பது Grand Lodge. இது பொது விதி. அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கிராண்ட் லாட்ஜ் உண்டு. ஒவ்வொரு லாட்ஜும் தனக்கேயுள்ள விதிமுறைகளை பின்பற்றியே செயல்படுகிறது. லாட்ஜுக்கும், கிராண்ட் லாட்ஜுக்கும் தலைவர், உப தலைவர் போன்ற பதவிகளெல்லாமுண்டு.
ஒவ்வோரு லாட்ஜின் விதிமுறைகள் வித்தியாசப்படலாம். இவைகளுக்கு தொடர்புடைய லாட்ஜுகள், தொடர்பில்லா லாட்ஜுகள் எல்லாமுண்டு. ஒரு லாட்ஜின் உறுப்பினர், அதன் தொடர்புடைய லாட்ஜின் கூட்டத்திற்கு செல்லமுடியும். ஒரு லாட்ஜானது தனக்கு தொடர்பில்லா ஒரு லாட்ஜின் இருப்பையே ஒத்துக்கொள்ளாது.
லாட்ஜுகள் பல விதமான பிரிவுகளாக இயங்கி வருகின்றன. இங்கிலாந்து பாரம்பரியத்தை சார்ந்த அல்லது கண்ட ஐரோப்பிய பாரம்பரியத்தை சார்ந்த பிரிவுகள் (anglo-saxon vs continental european), நவீன கோட்பாட்டையோ சம்பிரதாய கோட்பாட்டையோ சார்ந்திருப்பவர்கள் (moderns vs ancients) என்றெல்லாம் பல பிரிவுகள் உண்டு.
உறுப்பினர்கள்
உறுப்பினராக விரும்புபவர் விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டியதுதான். லாட்ஜின் உறுப்பினர்கள் அதனை பரிசீலித்து அவரை சேர்த்துக்கொள்வதா என முடிவு செய்வார்கள். சேரும்பொழுது உறுதிமொழி, பல்வேறு சம்பிரதாயங்கள், தனிச்சின்னங்கள், சமிக்ஞைகள் என்று பல சட்டதிட்டங்களும் உண்டு.
மூன்று வகையான உறுப்பினர்கள் உண்டு. முதற்கட்ட உறுப்பினராய் சேர்ந்தபின் தனது தாய் லாட்ஜில் படித்து பட்டம் பெற்றே இரண்டாம், மூன்றாம் நிலையை அடைய முடியும். மூன்றாம் நிலை உறுப்பினராலேயே தனது லாட்ஜுக்குத் தொடர்புடைய லாட்ஜுகளுக்கெல்லாம் செல்லமுடியும். பாரம்பரியமாக இதில் பெண்களை சேர்த்துக்கொள்வது இல்லை. ஆயினும் சில பெண்கள் உறுப்பினராக இருந்திருக்கின்றனர். இப்பொழுது பெண்களுக்கான தனி லாட்ஜுகளும் இருக்கின்றன.
தகுதிகள்
உறுப்பினர்களாக விரும்புபவர்கள் கீழ்கண்ட தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும்.
- அவரின் சொந்த விருப்போடு வரவேண்டும்.
- எல்லாம் வல்ல ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். அவர்கள் எந்த மதத்தினராகவும் இருக்கலாம். ஆனால் இந்த நம்பிக்கை அவசியம். கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் பரவாயில்லை.
- குறைந்தபட்ச வயதினை அடைந்திருக்க வேண்டும். பெரும்பாலும் 21.
- நல்ல உடல், மன நலத்துடன், நற்பெயருடன் இருத்தல் அவசியம்.
- சுதந்திரமாய் இருக்க வேண்டும். அடிமையாய் இருக்க கூடாது.
சர்ச்சைகள்
வரலாற்றில் இவர்களின் இடம் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது. இவர்களின் ரகசிய நடவடிக்கைகளே இதற்கு காரணம். பல்வேறு கட்டங்களில் இவர்கள் கிருத்துவதிற்கு எதிராக போதிக்கின்றனர் என்றும், அப்பொழுது இருந்த ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டே இருந்தன. இவர்களின் ரகசியத்தை சொல்ல முற்படுகின்றவர்களை கொன்றுவிடுகின்றனர் என்றும் சாத்தானையும் துர்தேவதைகளையும் வழிபடுகின்றனர் என்றும் கூட குற்றச்சாட்டுகள் உண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுத்தே வந்திருக்கின்றனர்.
பிரபலமான விடுதலைக் கட்டுநர்கள்
- எழுத்தாளர்கள் - பைரன், ஆர்தர் கானன் டாயல், ராபர்ட் பேர்ன்ஸ், அலெக்ஸாண்டர் போப், வால்டர் ஸ்காட், ஜொனாதன் ஸ்ப்பிப்ட், ஆஸ்கர் வைல்ட், பி ஜி வேட்ஹௌஸ் என்று பலர்
- ஜார்ஜ் வாஷிங்டனில் தொடங்கி கிட்டத்தட்ட 15 அமெரிக்க குடியரசு தலைவர்கள்
- ஹென்றி போர்ட், சார்லஸ் ஹில்டன், வால்டர் கிரைஸ்லர், தாமஸ் லிப்டன், ஆண்ட்ரூ மெல்லான் போன்ற தொழிலதிபர்கள்
- தனியாளாக விமானத்தில் கண்டம் விட்டு கண்டம் சென்ற சார்லஸ் லிண்ட்பெர்க்
- துருவங்களில் சாகசம் புரிந்த ராபெர்ட் பியரி, ரோஆல்ட் அமுண்ஸன்
- பீத்தோவன், ஹேடின், மோஸார்ட் போன்ற மேற்கத்திய பாரம்பரிய இசை வல்லுனர்கள்
- லூயிஸ் ஆர்ம்ஸ்டராங், நாட் கிங் கோல் போன்ற தற்காலத்திய இசைக் கலைஞர்கள்
- கிளார்க் கேபிள், ஜான் வெயின், டக்ளஸ் பேர்பாங்ஸ் போன்ற ஹாலிவுட் நடிகர்கள்
- தற்காலத்திய விளையாட்டு வீரர்களான அர்னால்ட் பால்மர் (கால்ப்), ஸ்காட்டி பிப்பன் (கூடைப்பந்து)
- சிங்கையின் தாமஸ் ராப்பிள்ஸ்
- தென்னமெரிக்கர் டெஸ்மாண்ட் டுட்டு
- இந்தியாவை பற்றி அதிகம் எழுதியுள்ள ருட்யார்ட் கிப்ளிங்
- அன்னி பெசண்ட் அம்மையார்
- மோதிலால் நேரு
- சுவாமி விவேகானந்தர்
- டி.என்.டாட்டா
- குடியரசு தலைவர்கள் - இரஜேந்திர பிரசாத், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், பக்குரிதீன் அலி அஹமது[1]
- இராஜாஜி
- சி.பி.இராமசாமி ஐயர்
- மன்சூர் அலி கான் பட்டோடி
- மாதவராவ் சிந்தியா