விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு

விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு (Wisden Cricketers' Almanack, பெரும்பாலும் சுருக்கமாக விசுடன் (விஸ்டன்) என்றும் வழக்குமொழியில் துடுப்பாட்ட விவிலியம் என்றும் அறியப்படுகிறது) ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஓர் புகழ்பெற்ற துடுப்பாட்ட உசாத்துணை நூலாகும். உலகின் விளையாட்டுத் துறையில் வெளியிடப்படும் உசாத்துணை நூல்களில் மிகவும் புகழ் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.[1]

விசுடன் 1878 பதிப்பு

வரலாறு

விசுடன் 1864ஆம் ஆண்டு ஆங்கில துடுப்பாட்ட வீரர் ஜான் விசுடன் (1826–84) என்பவரால் துவங்கப்படது. அந்நாள் முதல் ஆண்டுதோறும் இடைவெளியின்றி இன்றுவரை வெளியாகும் இந்நூல் வரலாற்றிலேயே மிகநீண்ட தொடர்ச்சியான பதிப்பினைக் கொண்டிருக்கும் விளையாட்டு ஆண்டுமலராக உள்ளது. முதல் ஐந்து பதிப்புகள் துடுப்பாட்டாளரின் நாட்குறிப்பு என வெளிவந்தது. ஆறாவது பதிப்பிலிருந்தே இப்போதுள்ள தலைப்பில் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு என வரலாயிற்று. (ஆங்கிலத் தலைப்பில் ஒற்றை மேற்கோள்குறி இடம் மாறியது!).

உள்ளடக்கம்

தற்போது நடப்பில் இருக்கும் பதிப்பில் கீழ்வரும் பிரிவுகள் உள்ளன:

குறிப்புரை

துடுப்பாட்ட உலகில் சூடான உரையாடல்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிய செய்திகள் குறித்தும் பிற துடுப்பாட்ட விடயங்கள் குறித்தும் கட்டுரைகள், "ஆசிரியரின் குறிப்புகள்" உட்பட, நூறு பக்கங்கள் வரை உள்ளன.

விருதுகள்

1889ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் வழமையான ஆண்டின் விசுடன் துடுப்பாட்டாளர்கள் விருதுகள், மற்றும் 2004ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் உலகின் விசுடன் முன்னணி துடுப்பாட்டாளர்.

சாதனைகள்

முழுமையாக இருக்க முயற்சிகள் இல்லாவிடினும்,வழமையாக விளையாட்டின் முதன்மை புள்ளிவிவர மூலம். தற்காலங்களில் இதனைவிட இற்றைப்படுத்தப்பட்ட கூடுதல் தரவுகள் உள்ள விசுடனின் இணையதளம் கிரிக்கின்ஃபோவிற்கு கூடுதல் தளமாக விளங்குகிறது.

ஆங்கிலத் துடுப்பாட்டம்

மிக விரிவான பிரிவு இதுவே. முந்தைய வேனில்காலத்தில் ஐக்கிய இராச்சியத்தில் நடந்த அனைத்து முதல்தர துடுப்பாட்டங்களின் புள்ளியட்டைகள், சிறு நிலப்பகுதிகளின் (minor counties) துடுப்பாட்டங்களின் சுருக்கங்கள், பள்ளி மற்றும் பிரீமியர் சங்கத் துடுப்பாட்டம் உட்பட பல தரவுகள் இடம் பிடித்துள்ளன.

வெளிநாட்டுத் துடுப்பாட்டம்

அனைத்து பன்னாட்டுத் துடுப்பாட்டங்களின் முழு விவரங்களும் இங்கிலாந்திற்கு வெளியே நடைபெற்ற முதல்தர துடுப்பாட்டங்களின் சுருக்கமும் இடம் பெறும்.

வரலாறு மற்றும் துடுப்பாட்ட விதிகள்

விசுடன் மீளாய்வு

இப்பிரிவில் முந்தைய ஆண்டில் நடந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள், பிற துடுப்பாட்ட புத்தகங்களின் மதிப்புரை, குறிப்பிடத்தக்க ஓய்வுகள், மறைவுகள் ஆகியன பதியப்படுகின்றன.

நாட்குறிப்பு

இப்பிரிவில் அடுத்த ஆண்டின் எதிர்வரும் பன்னாட்டு மற்றும் ஆங்கில உள்ளூர் ஆட்டங்களின் விவரங்கள், ஏழாண்டு பன்னாட்டு கால அட்டவணை மற்றும் வினோத துடுப்பாட்ட நிகழ்வுகளின் பட்டியல் இடம் பெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. http://www.dailymail.co.uk/money/article-1092189/Harry-Potter-publisher-Bloomsbury-bowled-catch-Wisden.html

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.