வாஸந்தி

வாஸந்தி (பிறப்பு: சூலை 26, 1941) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர். நோர்வே நாட்டின் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சான்றிதழ் பெற்றவர். இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாச்சாரம், அரசியல் என்று பல்வேறு புள்ளிகளைத் தொட்டு செல்லும் இவரது கட்டுரைகளில் பல அவை வெளிவந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எழுத்தாளர் மாநாட்டுக்காக சொற்பொழிவுகளுக்காக, குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர். பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை (CUT OUTS,CASTE AND CINE STARS) பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டது.

விருதுகள்

நாற்பது நாவல்கள், பதினைந்து குறுநாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள் என்று பல்வேறு நூல்களைப் படைத்துள்ளார். பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது உள்ளிட்ட எட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய "வாஸந்தி சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.[1]

வாஸந்தியின் சில நூல்கள்

  • கண்ணுக்குத் தெரியாத உலகங்கள்
  • சுருதி பேதங்கள்
  • வீடுவரை உறவு
  • யாதுமாகி
  • ஒரு சங்கமத்தைத் தேடி
  • நான் புத்தனில்லை
  • புரியாத அர்த்தங்கள்
  • மீண்டும் நாளை வரும்
  • அம்மணி
  • கடைப்பொம்மைகள்
  • நிஜங்கள் நிழலாகும்போது
  • தீக்குள் விரலை வைத்தால்
  • மனிதர்கள் பாதி நேரம் தூங்குகிறார்கள்
  • பாலும் பாவையும்
  • ஜனனம் (நாவல்)
  • பொய்முகம் (நாவல்)
  • வேர் பிடிக்கும் மண் (சிறுகதைகள்)
  • புதிய வானம்

அடிக்குறிப்புகள்

  1. புதிய வானம் - கவிதா பப்ளிகேஷன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.