வாழைக் கழிவுகள்

வாழைக் கழிவுகள் (biomass waste, banana crop residue, banana waste) எனப்படுவது வாழைப்பயிர் சாகுபடியில் வாழையின் வளர்ச்சிப்பருவங்களில் ஏற்படும் கழிவுகள், அறுவடையின்போது கிடைக்கும் கழிவுகள் மற்றும் அறுவடைக்குப்பின் சந்தைப்படுத்துதலின் போது (வாழைப்பழத்தார்களிலிருந்து) ஏற்படும் எதற்கும் பயன்படாத கழிவுகளாகும்.இந்தக் கழிவுகள் ஆற்றல் (energy), கரி (biochar) மற்றும் உரம் தயாரிப்பதற்கும்[1]பயன்படுத்தலாம்

கன்யாகுமரி-நாகர் கோவிலில் செவ்வாழைச் சந்தை

ஒரு பார்வை

தமிழகத்தில் பூவன், கற்பூர வள்ளி, நெய்பூவன், ரஸ்தாளி, மொந்தன், நேந்திரன், செவ்வாழை, ரொபஸ்டா என பல தரப்பட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகின்றன. வாழைச் சாகுபடி நஞ்சை மற்றும் தோட்டக்கால் முறைகளில் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 298 லட்சம் தொன் வாழை உற்பத்தி செய்யும் பொழுது, 375 லட்சம் டன் அளவில், இலைச்சருகு, தண்டு, கிழங்கு, கொன் னைப்பகுதி போன்ற வாழைக் கழிவுகள் உருவாகின்றன[2].

வாழைக் கழிவுகள் மூன்று வகைப்படும்

  1. பயிர் வளர்ச்சியின் போது கிடைக்கும் கழிவுகள் (trash)
  2. அறுவடையின்போது கிடைக்கும் கழிவுகள் (biomass)
  3. வாழைத்தார் மற்றும் பழத்திலிருந்து கிடைக்கும் கழிவுகள் (banana peel/வாழை தலாம்)

வாழை சாகுபடியில் வாழைக் கழிவுகளை விவசாயிகள் நிலத்திலிருந்து அப்புறப்படுத்த தீயிட்டு எரிக்கிறார்கள். இதனால் மண் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் ஊட்டச்சத்துக்கள் வீணாகின்றன.

வாழைக்கழிவிலுள்ள சத்துக்கள்

வாழைக்கழிவுகளில் பேரூட்டச்சதுக்கள் (தழை, மணி, சாம்பல்) மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன குறிப்பாக சாம்பல் சத்து அதிக அளவில் உள்ளது[3], [4]

மண்புழு உரம்

வாழைக் கழிவுகளை மண்புழு மற்றும் இயற்கை உரமாக மாற்றிப் பயன்படுத்தலாம். ஒரு எக்டரிலிருந்து பெறப்பட்ட வாழைக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் மண்புழு உரத்தில், ரூ.2,587 மதிப்புள்ள தழைச் சத்தும், ரூ.483 மதிப்புள்ள மணிச்சத்தும், ரூ.7,920 மதிப்புள்ள சாம்பல் சத்தும் உள்ளன[5]. இத்தகைய வாழைக்கழிவு மண்புழு கம் போஸ்டை வாழை சாகுபடியில் மறுசுழற்சி செய்தால், மண்ணில் இடப்படும் செயற்கை உரத்தின் அளவைக் குறைத்து ஒரு எக்டேர் வாழை உற்பத்தியில் ஆகும் உர செலவில் ரூ.11,000 சேமிக்கலாம். மேலும் இம்முறையில், இரண்டாம் நிலை பேரூட்டச் சத்துக்களான சுண்ணாம்பு, மெக்னீசியம், கந்தகம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களும் மறுசுழற்சியாவதால் மண் வளம் மேம்படுத்தப்பட்டு, வாழையில் அதிக மகசூலும் பெறமுடிகிறது.

இதனை நாட்டிலுள்ள அனைத்து வாழை சாகுபடி பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு ரூ.913 கோடி சேமிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாக, வாழை விவசாயிகள், இத்தகைய பண்ணைக் கழிவுகளை, இவற்றிலுள்ள பயன்படுத்தப்படாத ஊட்டச் சத்துக்களை மீண்டும் அடுத்த வாழை சாகுபடிக்காக பயன்படுத்தும் நோக்கத்தில் மண்ணில் புதைத்தோ அல்லது கிடங்குகளில் இட்டோ அழித்து விடுகின்றனர். ஆனால், அவ்வாறு செய்யாமல், அவைகளை நன்கு மக்கவைத்து அல்லது மண்புழு உரமாக மாற்றி மண்ணிலிடுவது சிறந்தது.

வாழைக் கழிவை மக்க வைத்தல்

மக்க வைத்த வாழைக்கழிவுகளை வாழை உற்பட அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்[6]. வாழைக்கழிவுகளை ஒரு இடத்தில் சேர்க்கவேண்டும். பின் இதை இரண்டு அடி உயரத்திற்கு பரப்பி இதன் மேல் திறன்மிக்க நுண்ணுயிர்களைத் (effective microbes) தெளிக்கவேண்டும். இவ்வாறு ஆறு அடி உயரத்திற்கு மட்டும் கழிவுகளை இட வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும். இது 50 சதவீத நிழலிலேயே செய்யப்பட வேண்டும். 45 நாட்களில் இயற்கையுரம் தயாராகும். உற்பத்திச்செலவாக ஒரு டன் இயற்கை உரத்திற்கு ரூபாய் 250 மட்டும் செலவாகிறது

தொழில் நுட்ப விவரங்கள் கிடைக்குமிடம்

இந்தியாவில்

  1. தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகைமலை ரோடு, போதாவூர்,தாய னூர் அஞ்சல், திருச்சி- 620102
  2. தமிழ்நாடு வேளண்மைப்பல்கலைக்கழகம், திருப்பதிச்சரம்-629901

இவற்றையும் பார்க்கவும்

வாழை

ஆதாரங்கள்

  1. http://scitation.aip.org/content/aip/proceeding/aipcp/10.1063/1.4803618
  2. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=355192&cat=504
  3. http://wasterecycleinfo.com/bananna.html
  4. http://abrahamgeorge.blogspot.in/2007/11/tips-on-preparing-high-quality-compost_13.html
  5. http://www.dinamani.com/edition_trichy/article1256683.ece
  6. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/16114455
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.