வாயில் இளங்கண்ணன்

வாயில் இளங்கண்ணன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 346 எண் கொண்ட பாடலைப் பாடியவர் இவர். இந்த ஒரு பாடல் மட்டுமே இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.

வாயில் என்பது ஊரின் பெயர். சென்னை மயிலாப்பூர் சிவபெருமானை வாயிலிலிருந்தே வழிபட்ட சிவனடியார் வாயிலார். இவர் வாந்த ஊர்ப்பகுதி வாயில். இந்தப் புலவர் இளங்கண்ணன் இந்த ஊரில் வாழ்ந்தவர் போலும்.

பாடல் சொல்லும் பொருள்

  • திணை - குறிஞ்சி

தலைவன் நாடு

தந்தம் முளைத்துக்கொண்டிருக்கும் இளங்களிறு தன்னை ஒத்த இளம்பிடியை விரும்பிக் பிடி இருக்கும் குன்றத்துக்கு வந்ததாம். அதனைத் துரத்திக்கொண்டு ஊர்மன்றத்துக்கே வந்து அட்டகாசம் செய்ததாம். அதைக் கண்ட குறவர்கள் ஆரவாரம் செய்தனராம். - இப்படிப்பட்ட நாட்டுக்குத் தலைவன் இந்தப் பாடல்தலைவன். (தலைவன் தலைவி இருக்கும் ஊருக்கே வந்துவிட்டான் என்னும் கருத்தை உணர்த்தும் இறைச்சிப் பொருள் இது)

தலைவி

சுனையிலுள்ள குவளைப் பூக்களைப் பறித்துத் தொடலைமாலை கட்டினாள்.
தினைப்புனத்தில் கிளி ஓட்டினாள்.
காலையில் வந்து மாலை வரையில் இப்படிப் பொழுது போக்கினாள்.

இப்போது இவள் மனையில் அஃகிக் கிடக்கிறாள் (மனை அளவில் சுருங்கிக் கிடக்கிறாள்)

(இதனைக் கூடும் இடமாக இனிச் சொல்லமுடியாது. இரவில் வரலாம், என்று தலைவனுக்குத் தெரிவிக்கிறாள் தோழி.)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.