வானம்பாடி (இதழ்)
வானம்பாடி தமிழகத்தில் இருந்து வெளிவந்த ஒரு கவிதைச் சிற்றிதழ் ஆகும்.[1] இது பூமியின் பிரளயங்களாய், காலத்தின் வசந்தங்களாய், யுகத்தின் சுவடுகளாய், நிறங்களில் சிவப்பாய், மண்ணை வலம்வரும் பறவைகளாய், மானுடம் பாடிவரும் வானம்பாடிகளின், விலையிலாக் கவிமடல் என்ற முழக்கத்துடன் வெளிவந்தது.
1970இல் கோயம்புத்தூரில் சோஷலிஸ்ட்டுகளாகவும் சற்று காங்கிரசு ஆதரவு மனோபாவம் கொண்டவர்களாகவும் இருந்த தமிழ்க்கவிஞர்கள் ஒன்றுகூடி வானம்பாடி இயக்கத்தைத் தோற்றுவித்தனர். புவியரசு, கங்கைகொண்டான், சிற்பி, தமிழ்நாடன், அக்கினிப்புத்திரன், சக்திக்கனல், இரவீந்திரன், ஞானி, பா.செயப்பிரகாசம், பிரபஞ்சன், பாலா, கோ. இராஜாராம், மீரா, மு. மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் முதலானோர் வானம்பாடி இதழில் எழுதிச் சிறப்புற்றனர். இவர்களின் வருகைக்குப்பின் புதுக்கவிதை சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தது.
வானம்பாடியானது புவியரசின் மருமகனின் அச்சகமான மலர்விழி அச்சங்க்கதில் அச்சடிக்கப்பட்டு புவியரசின் வீட்டு முகவரியில் இருந்து வெளியானது. அதில் வந்த கவிதைகள் எல்லாமே அன்றைய திமுக அரசையும் நிலைப்பாடுகளையும் எதிர்த்து எழுதப்பட்டவையாக இருந்தன. இதழானது 32 பக்கங்களில் இருந்து 60 பக்கங்கள் வரை கொண்டதாக, 300 பிரதிகள்வரை வெளியிடப்பட்டு இலவசமாக அளிக்கப்பட்டது. 1981 வரை 13 இதழ்கள் வந்தன.[2]
மேற்கோள்கள்
- "வானம்பாடி - ஒரு பார்வை!". நக்கீரன். பார்த்த நாள் 25-04-2017.
- ஷங்கர்ராமசுப்ரமணியன் (2018 சூலை 21). "ஸ்தயேவ்ஸ்கி கொடுத்த ஞானம்!- கவிஞர் புவியரசு பேட்டி". செவ்வி. இந்து தமிழ். பார்த்த நாள் 27 சூலை 2018.