வளைகாப்பு

வளைகாப்பு என்ற பண்டைய தமிழர் சடங்கு கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யும் ஓர் சடங்கு ஆகும். இச்சடங்கினை சீமந்தம் என்றும் அழைக்கின்றர். முதல்முறையாகக் கருவுற்றவர்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் அவரவர் குடும்ப வழக்கப்படி செய்கிறார்கள். மணப்பெண் போலவே பெண்களை அலங்கரித்து கைநிறைய வளையல்களை அடுக்குகிறார்கள். பெண்களே பங்கேற்கும் இவ்விழாவில் மகப்பேறடைந்த தாய்மார்கள் வந்திருந்து புதியதாக தாய்மை எய்தியிருக்கும் பெண்ணிற்கு வளையல்கள் அணிவதும் தாங்களும் அணிந்து கொள்வதும் நிகழும்.

வளைகாப்பு
வளைகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள வளையல்கள்

இளஞ்சிசு உயிர் வாழ்தல் வீதம் குறைந்தும் மகப்பேறு கால மரணவீதம் கூடுதலாகவும் இருந்த பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் நல்ல முறையில் ஈன்றெடுக்க வேண்டும் என இச்சடங்கு வந்திருக்கலாம்.[1] மற்றொரு கருத்தாக ஆறாம் மாதம் முதல் குழந்தையின் கரு வெளியுலகை உணரத் தொடங்குகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.[2]

சில குடும்பங்களில் வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை பும்சுவன சீமந்தம் என்று நடத்தப்படுகிறது.

ஆடிப்பூர வளைகாப்பு விழா

சக்தியை முதற்கண் தெய்வமாக வணங்கிடும் சாக்த மதப்பிரிவில் வளைகாப்பு திருவிழா நடத்தப்படுகிறது. ஆடி மாதம் பூரம் நட்சத்திர நாளன்று அம்மன் கோவில்களில், அம்மனே கற்பவதியாக இருப்பதைப் போன்று அலங்காரம் செய்து பட்டுத்து, வளையல் அணிவித்து கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கர்ப்பிணி கோலத்தில் அம்மனை தரிக்கலாம். இந்த விழாவில் கலந்து கொள்ளும் பெண் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல்கள், இனிப்புகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. [3] [4]

வளைகாப்பு நடைபெறும் சில கோவில்கள் -

  • கோவில்பட்டி செண்பவல்லி அம்மன் கோவில்
  • உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோவில்
  • உறையூர் குங்குமவல்லி அம்மன் கோவில்

இதையும் பார்க்க

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. வளைகாப்பு (பும்சுவன சீமந்தம்)
  2. வளைகாப்பு என்னும் வரவேற்பு
  3. செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வளைகாப்பு தினமணி 17 ஆகஸ்ட் 2015
  4. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா திரளான பக்தர்கள் தரிசனம் தினத்தந்தி ஆகஸ்ட்-17,2015
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.