வல்லுநர்

வல்லுநர் (expert) என்பார் குறித்தவொரு துறையில் தேர்ச்சியின் அடைவுக் கூறுகளான அறிவு, திறன், மனப்பாங்கு தொடர்பான உயர்மட்ட இயலுமையைக் கொண்டிருப்பவராகும். அக்குறிப்பிட்டத் துறையில் அவரது அறிவும் திறனும் நம்பத்தக்கதாக கொள்ளப்படும். ஒரு வல்லுநரின் வல்லமை (expertise) அவரது ஆவணக் குறிப்புகள், கல்வி, பயிற்சிகள், தொழில், நூல்கள் அல்லது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். வரலாற்றில் வல்லுநர்கள் விவேகக் கிழவர்கள் எனப்பட்டனர். அப்படிப்பட்டவர்கள் ஆழ்ந்த அறிவுத் திறனும் சிறந்த தீர்வு காணும் திறனும் உடையவர்களாக இருந்தனர்.[1]

விவிலியப்படியான மூன்று விவேகக் கிழவர்கள், கோல்ன் கதீட்ரல்.

வல்லுநர்கள் ஒரு குறிப்பிட்டத் துறையில் தொடர்ந்த கல்வி மற்றும் பயிற்சியினால் ஆழ்ந்த அல்லது நீண்ட பட்டறிவைக் கொண்டுள்ளனர். வல்லுநர்களுக்கான வரையறை இன்ன தொழில்முறை அல்லது பள்ளிக் கல்வி தகுதிகளினால் தான் என்பதைவிட பெரும்பாலும் ஓர் இணக்க முடிவாகவே அமைகின்றது. 50 ஆண்டுகளாக மேய்த்துவரும் ஓர் ஆட்டிடையர் ஆடுகளின் கவனிப்பிற்கும் ஆட்டுநாய்களை பயன்படுத்தவும் பயிற்றுவிக்கவும் வல்லுநராகக் கருதப்படுவார். மற்றுமொரு எடுத்துக்காட்டாக கணினியியலில் மனிதரொருவரால் பயிற்றுவிக்கப்பட்ட வல்லுநக் கணிமுறைமை (expert system) அந்தக் குறிப்பிட்ட பணியில் மற்ற மனிதர்களை விட வல்லமை உடையதாகக் கருதப்படும். சட்டத்தில், வல்லுநர் சாட்சியத்தை அதிகாரமும் ஏரணம்சார் வழக்காடலும் அங்கீகரிக்க வேண்டும்.

வல்லுநரின் அறிவுத்திறனுக்கும் மிகச் சிறப்பான செயற்றிறனுக்கும் மூளையின் பகுக்கும் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்துகொள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வல்லுநர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் செயல்படும் காரணங்களை சில ஆய்வுகள் ஆராய்ந்துள்ளன.[2]

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.