வயதான கிட்டார் கலைஞர்

வயதான கிட்டார் கலைஞர் (The Old Guitarist) என்பது, 1903ன் பிற்பகுதிக்கும், 1904ன் முற்பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிக்காசோவினால் வரையப்பட்ட ஓவியம் ஆகும். இவ்வோவியம், எசுப்பெயினில் உள்ள பார்சிலோனாவின் தெருவில், வயதான, கண்பார்வையற்ற, களைத்த தோற்றம் கொண்ட, கந்தல் ஆடையணிந்த ஒரு மனிதன் தனது கிட்டாரை நோக்கி வளைந்தபடி அதை வாசிக்கும் காட்சியைக் காட்டுகிறது. இது தற்போது, சிக்காகோ கலை நிறுவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1]

வயதான கிட்டார் கலைஞர்
ஓவியர்பாப்லோ பிக்காசோ
ஆண்டு1903–04
வகைபடலில் நெய் வண்ணம்
பரிமாணம்122.9 cm × 82.6 cm (48.4 in × 32.5 in)
இடம்சிக்காகோ கலை நிறுவனம்
உரிமையாளர்சிக்காகோ கலை நிறுவனம்

இந்த ஓவியம் வரையப்பட்ட காலத்தில் நவீனவியம், உணர்வுப்பதிவுவாதம், பின்-உணர்வுப்பதிவுவாதம், குறியீட்டியம் போன்ற பாணிகள் கலந்து வெளிப்பாட்டுவாதம் என்னும் புதிய இயக்கம் உருவாகியிருந்தது. இப்பாணி பிக்காசோவின் பாணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், அக்காலத்தில் பிக்காசோவின் மோசமான வாழ்க்கைத்தரமும், அவரது நண்பனின் தற்கொலையும் அவரது ஓவியங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இக்காலம் பிக்காசோவின் நீலக்காலம் எனப்படுகின்றது.[1]

பகுப்பாய்வு

பார்ப்பவர்களிடம் வேண்டிய உணர்வுகளை உருவாக்குவதற்காக வயதான கிட்டார் கலைஞர் ஓவியத்தின் கூறுகள் கவனமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகத் தனிநிறப் பயன்பாடு தட்டையான, இரு பரிமாண வடிவங்களை உருவாக்கி கிட்டார் கலைஞரை நேரம், இடம் ஆகியவற்றிலிருந்து பிரித்து வைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, நீலச் சாயைகள் துயரத்தின் பொதுவான உணர்வை உருவாக்குவதுடன், துன்பியல் தன்மையை மேலும் அழுத்தமாகக் காட்டுகின்றன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.