வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு

வட இலங்கையில் அண்ணமார் வழிபாடு இன்றும் கைக்கொள்ளப்படும் நாட்டாரியல் மரபுகளில் ஒன்றாகும். அண்ணமார், வட இலங்கையில்
வெள்ளாளர் சாதிக்குரிய கடவுளாகவே கருதப்பட்டு வருகிறார். நீண்டகாலமாகவே இருந்து வருகின்ற இவ் வழிபாடு, வலுவான சமஸ்கிருதமயமாக்க அலைகளுக்கு மத்தியிலும், இன்றும் நிலைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ் வழிபாடு நடைபெற்றுவரும் சில இடங்களிலுள்ள உள்ளூர்க் கதைகளும், யாழ்ப்பாணத்துப் பழைய நூல்கள் சிலவும், இவ்வழிபாடு கடவுள் தன்மை பெற்ற முன்னோர் வணக்கத்திலிருந்து தோன்றியதாகக் காட்டுகின்றன. ஆனாலும். அண்ணமார் வழிபாட்டைப் புராணங்களுடன் தொடர்புபடுத்தும் கதைகளும் வழங்கி வருகின்றன.

அண்ணமார் வழிபாட்டுத் தோற்றம் பற்றிய கதைகள்

வையா என்னும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம் என்னும் நூலில் உள்ள கதையொன்றில் அண்னமார் வழிபாடுபற்றிய கதையொன்று உள்ளது.


முற்காலத்தில் இலங்கையின் வன்னிப் பகுதியிலிருந்த இராட்சதருடன் போரிட வந்த 54 வன்னியர்கள் அப் போரில் இறந்தார்கள். அவர்களைத் தேடி, 60 துணையுடன் வந்த அவர்களது மனைவியர், தங்கள் கணவன்மார்கள் இறந்ததைக் கேள்வியுற்றுத் தீயில் வீழ்ந்து இறந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த வெள்ளாளர் அவர்களுடன் தீயில் விழுந்தனர். அவ்வாறு இறந்த வெள்ளாளர் அண்ணமார் எனப்பட்டனர்.


இக் கதை ஒட்டு மொத்தமாக அறுபது போர்களை அண்ணமாராக்கியது. ஆனால், அண்ணமார் வழிபாடு நிலவும் பல்வேறிடங்களில், உள்ளூர்த் தொடர்புள்ள தனித்தனிக் கதைகள் அண்ணமார் வழிபாட்டுத் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. இணுவில் கிழக்கிலுள்ள அண்ணமார் தோற்றம் பற்றிய கதை இத்தகைய ஒன்றாகும்.


இணுவிலிலே வாழ்ந்த உடன்பிறந்தோரான இரு இளந்தாரிகள் (இளைஞர்) வெள்ளாளர் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களது தாய் அயலிலுள்ள கிணற்றில் குளிப்பது தடுக்கப்பட்டதனால், இவ்விளந்தாரிகள் இருவரும் இரவிரவாகக் கிணறு வெட்டித் துலாவும் அமைத்துத் தாய் குளிப்பதற்கு வசதி செய்தனராம். ஒருமுறை இவர்களது தந்தை ஒரு காரணத்துக்காக இவர்களைத் தண்டித்ததனால் கோபமுற்ற இருவரும் அருகிலிருந்த புளியமரத்தில் ஏறி வானத்தில் மறைந்தனர். இதனைக் கண்ட அவர்களுடைய குடிமைக் குடும்பத்தைச் சேர்ந்த பள்ளர் சாதி இளைஞன் ஒருவன் தானும் அருகிலுள்ள பனை மரத்தில் ஏறி மறைந்தான். இவ்வாறு பனையில் ஏறி மறைந்த இளைஞனே அண்ணமாராகப் பள்ளர் சாதியினரால் வழிபடப்படுகின்றான்.


அவன் ஏறியதாகக் கருதப்படும் பனையின் அடியிலேயே இந்த அண்ணமார் கோயில் அமைந்துள்ளது. இப்பனையின் அடிப்பகுதி இதைச் சுற்றி வளர்ந்த ஆலமரம் ஒன்றினால், இப்பொழுது மூடப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு அருகிலேயே இளந்தாரி கோயிலும் புளிய மரமும் உள்ளன. இவ்வூரைச் சேர்ந்த சின்னத்தம்பிப் புலவர் என்பவரால் பாடப்பட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சவன்னத் தூது என்னும் நூல், இந்த இளந்தாரி கோயிலை, இவ்வூரை ஆண்ட காலிங்கராயன், கைலாசநாதன் என்பவர்கள் பேரில் அமைந்ததாகக் கூறுகிறது.

உசாத்துணை நூல்கள்

  • சண்முகலிங்கன், என். யாழ்ப்பாணத்தில் அண்னமார் வழிபாடு, இலங்கை - இந்திய மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004
  • கந்தசாமி, க. இ. க, இணுவை சின்னத்தம்பிப் புலவர் அருளிய பஞ்சவன்னத் தூது, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிட்டெட், சென்னை, 1998.

இவற்றையும் பார்க்கவும்

அண்ணமா மஹேஸ்வரர் திருக்கோயில் சிறுப்பிட்டி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.