வஞ்சிப்பா

வஞ்சிப்பா என்பது தமிழ் யாப்பிலக்கணம் கூறும் பாவகைகளுள் ஒன்று. பாவகைகளுக்கு அடிப்படையான ஓசை வகைகளுள், தூங்கலோசையே வஞ்சிப்பாவுக்கு அடிப்படையாகும். வஞ்சிப்பாவின் அடிகளில் அமையும் சீர்களின் தன்மை மற்றும் அவற்றின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து வஞ்சிப்பாக்கள் இரு வகையாக உள்ளன. அவை,


  1. குறளடி வஞ்சிப்பா
  2. சிந்தடி வஞ்சிப்பா


எனப்படும். குறளடி என்பது இரண்டு சீர்களைக் கொண்ட அடியைக் குறிக்கும். எனவே குறளடி வஞ்சிப்பாக்களில் ஒவ்வொரு அடியிலும் இரண்டு சீர்கள் காணப்படும். சிந்தடி என்பது மூன்று சீர்களால் அமைந்த அடியைக் குறிக்கும். எனவே மூன்று சீர்களால் அமைந்த அடிகளைக் கொண்ட வஞ்சிப்பா சிந்தடி வஞ்சிப்பா ஆகும். இச் சீர்கள் மூன்று அசைகள் கொண்டவையாகவோ அல்லது நான்கு அசைகள் கொண்டவையாகவோ இருக்கலாம். மூவசைச் சீர்களாயின் அவை வஞ்சிச்சீர் என அழைக்கப்படும், நிரையசையை இறுதியில் கொண்ட சீர்களாக இருத்தல் வேண்டும். நான்கு அசைகளைக் கொண்ட சீர்கள் ஆயின் அவையும் நிரை அசையில் முடியும் சீர்களாக இருத்தல் வேண்டும்.

வஞ்சிப்பாவில் பெரும்பாலும் கனிச்சீர்களும், இருவகை வஞ்சித்தளையும் வரும். சிறுபான்மையாக பிற சீரும், தளையும் வரும். [1]

வஞ்சிப்பா குறைந்த அளவாக மூன்று அடிகளைக் கொண்டிருக்கும். தேவையைப் பொறுத்து அடிகளின் எண்ணிக்கை இதற்கு மேல் எத்தனையும் இருக்கலாம். வஞ்சிப்பாக்களின் முடிவில் தனிச்சொல், சுரிதகம் ஆகிய உறுப்புக்களும் அமைந்திருக்கும். சுரிதகம் எப்பொழுதும் ஆசிரியச் சுரிதகமாகவே இருக்கும்.

குறளடி வஞ்சிப்பா
“பூந்தாமரைப் போதலமர
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ்
வினைக்கம்பலை மனைச்சிலம்பவும்
மனைச்சிலம்பிய மணமுரசொலி
வயற்கம்பலைக் கயலார்ப்பவும்
 நாளும்
மகிழும் மகிழ்தூங் கூரன்
புகழ்த லானப் பெருவண் மையனே”

‘நாளும்’ என்பது தனிச்சொல். செய்யுள் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது.[2]

சிந்தடி வஞ்சிப்பா
 “கொடிவாலன குருநிறத்தன குநற்தாளன
  வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன
  பணையெருத்தி னிணையரிமா னணையேறித்
  துணையல்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
  எயினடுவ ணினிதிருந் தெல்லோர்க்கும்
  பயில்படுவினைப் பத்திமையிற் செப்பினோன்
        புணையெனத்
  திருவுறு திருந்தடி திசைதொழ
  விரிவுறு நற்கதி வீடுநனி யெளிதே.”

புணையென என்பது தனிச்சொல். இந்தச் செய்யுள் இரண்டடி ஆசிரியச் சுரிதகத்தால் முடிந்தது.[3]

  1. புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம்.
  2. புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம்.
  3. புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம். பக். 1-192.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.