வஞ்சினக் காஞ்சி
வஞ்சினக் காஞ்சி என்பது காஞ்சித்திணையின் உட்கூறாகிய துறைகளுள் ஒன்றாகும். வஞ்சியரது வரவுணர்ந்த காஞ்சி மன்னன், அவ்வஞ்சியாரைப் பணியச் செய்வதற்காக வஞ்சினம் கூறுவது.
இலக்கணம்
- இன்னது செய்கையில் பிழை நேர்ந்தால் இன்ன நிலை அடையக் கடவேன் என வஞ்சினம் கூறுவது வஞ்சினக் காஞ்சி.[1]
இலக்கியம்
வஞ்சினக்காஞ்சி என்னும் துறைப் பாடல்கள் புறநானூறு தொகுப்பு நூலில் மூன்று உள்ளன. இது காஞ்சித்திணையின் துறை.
- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வஞ்சினம்
- என்னோடு போரிடுவேன் என்பார் வரட்டும். அவர்களைத் தேரோடு புறமுதுகிடச் செய்வேன். செய்யாவிட்டால் என் மனைவியையே பிரிவேனாகுக. என் அரசவையில் தகுதியற்ற ஒருவனை வைத்து அற்ப ஆட்சி செயதவன் ஆகுக. என் அரசவையில் மையற்கோமான், மாவன், எயிலாந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி என்னும் ஐந்து நண்பர்கள் ஆட்சிக்குத் துணையாக இருக்கிறார்கள். அவர்களோடு மகிழ்ந்திருத்தலை இழப்பேன் ஆகுக. [5]
- தம்மிடம் நாற்படை வலிமை இருப்பதாகத் தம்பட்டம் அடிப்போரைத் தாக்கி ஒருபகல் எல்லைக்குள் அவர்களது முரசைக் கைப்பற்றாவிட்டால், என் ஆட்சி நிழலில் வாழும் குடிமக்கள் என்னைக் கொடுங்காலன் எனத் தூற்றட்டும். மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட என் தமிழவைப் புலவர்கள் என்னைப் பாடாது போகட்டும். இரப்பவர்களுக்கு வறுமையில் வாடுவேனாகுக. [6]
- சோழன் நலங்கிள்ளி வஞ்சினம்
- யானையின் காலடியில் பட்ட கரும்புவயல் போலப் பகைவரைப் போர்களத்தில் துவட்டாவிட்டால் என் மாலை காதல் இல்லாத கணிகையர் மார்பில் கசங்கட்டும். [7]
உசாத்துணை
தா. ம. வெள்ளைவாரணம், புறப்பொருள்வெண்பாமாலை, திருப்பனந்தாள் மட வெளியீடு.1967.
மேற்கோள்
-
இன்னது பிழைப்பின் இது ஆகியர் எனத்
துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும் (தொல்காப்பியம், புறத்திணையியல் 19) -
"வெஞ்சின வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப
வஞ்சினங் கூறிய வகை மொழிந்தன்று." புறப்பொருள் வெண்பாமாலை. 6 -
இன்று பகலோன் இறவா முன் ஒன்னாரை
வென்று களங்கொளா வேலுயர்ப்பின்- என்றும்
அரண் அவியப் பாயும் அடையார் முன் நிற்பேன்
முரண் அவிய முன்முன் மொழிந்து. (புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியர் மேற்கோள் பாடல்) - 'வஞ்சியரது படை இதோ வந்தது. இன்று மாலை வருவதற்கு முன் அப்பகைவரை வென்று களத்தைக் கைப்பற்றுவேனாகுக. அவ்வாறு செய்யாது என் வேலைக் கையால் எடுப்பேனாயின் அப்பகைவர்க்கு முன்னே பணிவான சொற்களைக் கூறி கைகட்டி நிற்பேன் ஆகுக'. என்று காஞ்சி மன்னன் வஞ்சினம் கூறுகிறான்.
- புறநானூறு 71,
- புறநானூறு 72,
- புறநானூறு 73
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.