வங்கம் (நீரூர்தி)
வங்கம் என்னும் சொல் பாய்மரக் கப்பலை உணர்த்தும் சொற்களில் ஒன்று. நாவாய், கலம் என்னும் சொற்களும் பாய்மரக் கப்பலை உணர்த்தும்.
- வங்கம் கடல்நீரைப் பிளந்துகொண்டு செல்லும்.[1]
- வெள்ளைத் துணியாலான இதை என்னும் பாய் அதில் கட்டப்பட்டிருக்கும்.[2]
- மருங்கூர்ப் பட்டினம் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த வங்கத்தின் கூம்பில் கடற்காக்கைகள் அமர்ந்து தன் இரையை உண்டதாம். [3]
- அரிய பொருள்களை வங்கத்தில் கொண்டுவந்தார்களாம்.[4]
- சுழலும் புயலான் வங்கம் சிதைவது உண்டு. அப்போது அதன் கூம்பு முறியும். அதில் கட்டிய கயிறு அறுபடும். இதை என்னும் பாய் கிழிந்து சிதையும். அதனை ஓட்டும் ‘மீயான்’ நடுங்குவான். மீயானை மீகாமன் என்பர். [5] [6] [7]
- சாவக நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே வங்கப் போக்குவரத்து இருந்தது. [8]
- வங்கம் இரவில் செலுத்தப்படும். [9] அப்போதுதான் திசை அறிய உதவும் வானத்து மீன்கள் தெரியும்.
ஆற்றில் வங்கம்
வங்க வண்டி
அடிக்குறிப்பு
-
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ (அகம் 255) -
வால் இதை எடுத்த வளி தரு வங்கம்
பல்வேறு பண்டம் இழிதரு பட்டினத்து
ஒல் என இமிழ் இசை மான (மதுரை அல்லங்காடியில் மக்களின் ஆரவார ஒலி இருந்தது – மதுரைக்காஞ்சி 536 முதல் ) -
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினம் (நற்றிணை 258) -
அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு (தேர்ப்படை சென்றது – பதிற்றுப்பத்து 52) - மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது. (வெற்றி வேற்கை)
-
மீயான் நடுங்க நடுவு நின்று ஓங்கிய
கூம்பு முதல் முறிய வீங்கு பிணி அவிழ்ந்து
கயிறு கால் பரிய வயிறு பாழ் பட்டாங்கு
இதை சிதைந்து ஆர்ப்பத் திரை பொரு முந்நீர்
இயங்கு திசை அறியாது யாங்கணும் ஓட
மயங்கு கால் எடுத்த வங்கம் போல (மணிமேகலை 4-29 முதல்) - வளி வழங்கு அறுத்த வங்கம் போல (புறம் 368 – படை சாய்ந்தது)
- சாவக நாட்டிலிருந்து வங்கத்தில் வந்தனர் மணிமேகலை 14-73
- வங்கம் இருளில் செல்லும் மணிமேகலை 14-84
- கங்கை வங்கம் போகுவர் கொல்லோ (நற்றிணை 189)
-
கலி வங்கம்
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து
துறைதொறும் பிணிக்கும் நல்லூர் (புறம் 400) - வணங்கு கால் வங்கம் புகும் (கலித்தொகை 92-47 ஒருத்தி ஊடி விளையாடும்போது மாலையைப் பிய்த்து எறிந்துவிட்டு வங்க வண்டியில் உழைந்துகொண்டாள்)
-
திண்தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்
வங்கப் பாண்டியில் திண்தேர் ஊரவும் (பரிபாடல் 20 மதுரையில் புனலாடச் சென்றபோது பதட்டத்தில் நேர்ந்த குழப்பம்)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.