லுட்விக் விட்கென்ஸ்டைன்
லுட்விக் விட்கென்ஸ்டைன் எனச் சுருக்கமாக அழக்கப்படும் லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன் (Ludwig Josef Johann Wittgenstein - 26 ஏப்ரல் 1889 – 29 ஏப்ரல் 1951) என்பவர், தருக்கம், கணித மெய்யியல், மனம்சார் மெய்யியல், மொழிசார் மெய்யியல் போன்ற துறைகளில் பணிபுரிந்த ஒரு ஆஸ்திரிய மெய்யியலாளர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களுள் ஒருவரான இவரது செல்வாக்கு பரவலானது ஆகும்.
மேற்கத்திய மெய்யியல் 20ஆம் நூற்றாண்டு மெய்யியல் | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | லுட்விக் ஜோசப் ஜொஹான் விட்கென்ஸ்டைன் |
பிறப்பு | 26 ஏப்ரல் 1889 வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | 29 ஏப்ரல் 1951 62) கேம்பிரிட்ஜ், ஐக்கிய இராச்சியம் | (அகவை
சிந்தனை மரபு(கள்) | பகுப்பாய்வு மெய்யியல், Post-Analytic Philosophy |
முக்கிய ஆர்வங்கள் | தருக்கம், மீவியற்பியல், மொழிசார் மெய்யியல், கணித மெய்யியல், மனம்சார் மெய்யியல், அறிவாய்வியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | "Meaning is use," private language argument, conceptual therapy. |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
62 ஆவது வயதில் இவர் இறப்பதற்கு முன் எழுதிய ஒரே நூல், டிரக்டாட்டஸ் லோஜிக்கோ-பிலோசோபிக்கஸ் (Tractatus Logico-Philosophicus) என்பது. இவர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் எழுதிய மெய்யியல் ஆய்வு (Philosophical Investigations) என்னும் நூல் இவர் இறந்த பின்னரே வெளியிடப்பட்டது. இவ்விரு நூல்களும், பகுத்தாய்வு மெய்யியல் துறையில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டுள்ளன.
குறிப்பாக பிளாட்டோ, நீட்சே. கீககாட், சாத்ரே போன்ற எல்லோரையும் விட இவர் முக்கியமானவராகத் திகழ்ந்தார். ஏனைய சிந்தனையாளர்கள் தாம் வாழ்ந்த காலத்தின் சிந்தனையைத் தழுவியவர்களாக இருந்தார்கள். ஆனால் லுட்விக் விட்கென்ஸ்டைனிடம் சில விசேட பண்புகள் காணப்பட்டன. எதையும் தெளிவாகச் சிந்திக்கும் சிந்தனைத்திறன் இவரிடம் இருந்தது. இவரது கருத்துக்கள் சக்தி மிகுந்தவையாகவும், புதியனவாகவும் காணப்பட்டன.
விட்கென்ஸ்டைன் சிந்தனை செய்வதற்கான பல புதிய விதிகளை உருவாக்கி அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தார். புதிய வினாக்களை எழுப்பினார். அவர் மெய்யியல் சிந்தனையை நீந்துதலுக்கு ஒப்பிட்டார். நீந்தும் போது மனித உடல் நீரில் மிதக்கிறது. நீரின் ஆழத்திற்குச் செல்ல வேண்டுமாயின் ஒரு தாக்கமான உடற்பலம் பிரயோகிக்கப்பட வேண்டும். சிந்தனையும் அவ்வாறே. மெய்யியல் பிரச்சினைகளின் அடிஆழத்திற்குச் செல்ல வேண்டுமாயின் ஒரு பாரிய மனவேகம், ஆற்றல் தேவைப்படுகின்றது. இந்தவகையில் விட்கென்ஸ்டைனின் பல பங்களிப்புகள் தற்கால மெய்யியல் சிந்தனையில் பாரிய தாக்கங்களை உண்டுபண்ணின. இவருடன் ஒப்பிடுவதற்கு வேறு யாருமில்லை எனக்கூறக்கூடிய அளவுக்கு தற்கால மெய்யியலில் அவர் இடம் பிடித்துள்ளார்.
விட்கென்ஸ்டைனைப் பற்றி அறிஞர்கள் மத்தியில் கீழே குறிப்பிடுகின்ற ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன.
- விட்கென்ஸ்டைன் மெய்யியலுக்கு புத்தொளி பாய்ச்சிய ஒரு சிந்தனையாளர்.
- விட்கென்ஸ்டைன் காட்டுமிராண்டித்தனமான முறையில் மெய்யியலை அழித்தொழித்தார்.
விட்கென்ஸ்டைனைப் பற்றி பர்டன் ரஸ்ஸல் " எனது வாழ்வில் சந்தித்த மெய்சிலிர்க்க வைக்கும் ஆய்வறிவாளன். அற்புத ஆய்வு மனப்பான்மை கொண்டவர்." என்றும், அதேபோல் G.E..Moore " 1912ல் நான் விட்கென்ஸ்டைனைச் சந்தித்தபோது மிக விரைவாகவே மெய்யியலில் அவரை ஒரு கெட்டிக்கரனாக அறிந்து கொண்டேன். ஆழமான சிந்தனைத்திறனும், சிறந்த அகப்பார்வையும் அவரிடம் காணப்பட்டது " என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
விட்கென்ஸ்டைனை 1. முந்திய விட்கென்ஸ்டைன் 2. பிந்திய விட்கென்ஸ்டைன் என அவரால் எழுதப்பட்ட இரண்டு பிரபலமான நூல்களைக் கொண்டு பிரித்து நோக்கும் போது, Tractatus Logico-Philosophicus என்னும் நூல் அவரது இளமைக்காலத்தில் எழுதப்பட்டது. 80 பக்கங்களைக் கொண்டதும் மிகக் கடினமான உவமான தன்மையுடைய வாக்கியங்களையும் கொண்டதாக உள்ளது. நுணுக்கத்தன்மை வாய்ந்ததாகவும், மேலோட்டமான வாசிப்புக்கு உட்படாததாகவும், ஒரு புனித நூல் போன்றும் அது அமைந்துள்ளது. இந்த நூலில் விட்கென்ஸ்டைன் பலவகையான விளக்கங்களை எடுத்துக்கூறியிருந்த போதிலும், அதன் சில பகுதிகள் கருத்து முரண்பாடுபாடுகளையும் கொண்டிருந்தன. ஆனால் விட்கென்ஸ்டைன் Tractatus இல் திருப்திகரமான, திட்டவட்டமான விளக்கங்களை முன்வைத்துள்ளதாகக் கருதினார்.
அணு நேர்வுகள் (Atomic facts) பற்றியும், அதன் அர்த்தம் பற்றியும் Tractatus இல் பெளதிக அதீத முறையொன்றைக் கட்டியெழுப்பினார். பெளதிக அதீத முறை எனக் கூறப்படுவதற்குக் காரணம், அதில் வெளிப்படையானதும் அவதானத்திற்குரியதல்லாததுமான, நுணுக்கமானதும் கடினமானதுமான விடயங்கள் அமைந்திருந்ததுதான். எவ்வாறாயினும் விட்கென்ஸ்டைன் ' நேர்வுகள் ' என்ற சொல்லுடன் Tractatus ஐ ஆரம்பித்தார். அதில் முதலாவது வாக்கியம் " எது நேர்வுகளாக உள்ளதோ, அதுதான் உலகம் " என ஆரம்பிக்கின்றது. இந்த முழு உலகமும் நேர்வுகளின் மொத்த தொகையேயன்றி பொருட்களின் (OBJECTS) தொகையல்ல. உலகம் நேர்வுகளினால் பிரிக்கப்பட்டுள்ளது. பொருட்கள்தான் உலகத்தின் சாரம். பொருட்கள் (OBJECTS), நேர்வுகள் (FACTS) இரண்டும் ஒன்றல்ல. பொருட்களின் சூழலில் பொருட்களால் ஏற்படும் விளைவுகளைத்தான் அவர் நேர்வுகள் என்று அழைத்தார். ஒரு நிகழ்வை எமக்கு முற்றாக விபரித்துக் காட்டக்கூடியது எடுப்பு என்று அழைக்கப்படும்.
நேர்வுகள் உலகத்திலுள்ள மிகச் சிக்கலான விடயங்களாகும். " நீரில் மீன் நீந்துகிறது ", " பூனை பாயில் உள்ளது " என்பன ஒரு சிக்கலான தொடர்பாகும். இங்கு நீர், மீன், பூனை, பாய் ஆகியன முக்கியமானவைகளாகக் கருதப்படுவதில்லை. மாறாக " நீரில் மீன் " " பாயில் பூனை " என்பவையே முக்கியமான தொடர்புகளாகும். இவைகள்தான் நிகழ்வுகளாகும். இவ்வகையான நிகழ்வுகளைக் குறிக்கும் கூற்றுக்களைத்தான் விட்கென்ஸ்டைன் நேர்வுகள் எனக் குறிப்பிடுகின்றார்.
பொருட்களின் இணைவுகளிலிருந்துதான் ஒரு நிகழ்வு அர்த்தம் பெறுகிறது. பொருட்களில், நிகழ்வுகளில் ஒன்றுக்கொன்று திட்டவட்டமான உறவுகள், தொடர்புகள் காணப்படுகின்றன. இதனால் நேர்வுகளைப் பற்றிப் பேசுவது சிக்கலானதாகும். குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். நேர்வுகள் இவ்வுலகை ஸ்திரமாக்கிக் காட்டும் ஒன்று எனவும், நேர்வுகள் இவ்வுலகை விபரிக்கின்றன எனவும் Tractatus ல் கூறப்பட்டுள்ளது. நேர்வுகள் இவ்வுலகை சித்திரமாக்கிக் காட்டுவதும், விபரிப்பதும் மொழியினால்தான்.
விட்கென்ஸ்டைனின் கருத்தில் உலகம் நேர்வுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சிக்கல் குறைந்த நேர்வுகளால் உருவாக்கப்பட்டுள்ளன. சிக்கல் குறைந்த நேர்வுகளிலிருந்து மேலும் சிக்கல் குறைந்த நேர்வுகளை உருவாக்கலாம். இவ்வாறு குறைத்துக் கொண்டே சென்றால் இறுதியில் அணு நேர்வுகள் என்ற நிலைக்கு வந்து சேரலாம். " அணு நேர்வுகள்தான் உலகைக் கட்டியெழுப்பும் கட்டிடக் கற்கள் போன்று செயற்படுகின்றன " இதை நாம் விட்கென்ஸ்டைன் குறிப்பிடும் மூல எடுப்புக்கள் என்பதுடன் தொடர்புபடுத்தலாம். எடுப்புக்கள் இலக்கண வரம்புகளினால் உருவாக்கப்பட்டு மொழியினால் வெளிப்படுத்தப்படுகின்றன.
தமிழ், ஆங்கிலம், ஜேர்மன் என எந்த மொழியாயினும் எடுப்புக்களில் எந்த வித்தியாசமுமில்லை. எடுப்புக்களுக்குரிய இலட்சணங்களைக் கொண்டிருந்தால் போதும். மொழிகள் வெவ்வேறாக இருக்கலாம். உண்மை அல்லது பொய் கூறுவதாக இருக்கலாம். அல்லது உண்மை பொய் இல்லாததாக இருக்கலாம். எந்த வசனத்தை எதற்குமேல் குறைக்க முடியாதோ அல்லது பகுக்க முடியாதோ அதுதான் மூல எடுப்பு, அடிப்படை எடுப்பு (elimentary proposition) என விட்கென்ஸ்டைன் குறிப்பிட்டார். மேலும் மூல எடுப்பு எனும்போது அங்கு பெயர்கள் மட்டுமே உள்ளன என Tractatus குறிப்பிடுகிறது. பெயர் என்பதின் அர்த்தத்தை மிக நுணுக்கமான முறையில் அவர் எடுத்துக் காட்டினார். பெயர் என்பது மேலும் துண்டுகளாக நறுக்கப்பட முடியாதது. அது மூலாதாரமான அடையாளம் என்றார்.